தீபாவளிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து கூறாததை பா.ஜ.க தலைவர்கள் குற்றம் சாட்டி வரும் நிலையில் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரும் கடுமையாக விமர்சித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள அறிக்கையில், “முதல்வர் அனைவருக்கும் பொதுவானவர், அனைத்து மத திருவிழாக்களுக்கும் வாழ்த்து கூற வேண்டும், தீபாவளிக்கு ஏன் வாழ்த்து கூறவில்லை? என எடப்பாடி பழனிசாமியும், முன்னாள் அமைச்சர் விசுவநாதனும் கடந்த ஆண்டு சட்டமன்றத்தில் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு மழுப்பலான பதிலை ஸ்டாலின் கூறினார். தீபாவளி பண்டிகை என்றாலே கடவுளுடைய அருளாசி, தலைவர்களின் வாழ்த்துகளைத்தான் மக்கள் விரும்புவார்கள்.

மக்கள் பாடுபட்டு உழைத்து சேமித்த பணத்தில் புத்தாடை, பட்டாசு, பலகாரம் கிடைத்தது. ஆனால், முதலமைச்சரி வாழ்த்து கிடைக்க வில்லை. மதசார்பற்ற அரசு என்றால் அனைத்து மதத்தினரின் திருவிழாக்களுக்கும் வாழ்த்து தெரிவிக்க வேண்டும்
முதல்வர் பதவி என்பது ஒரு அரசு பதவி, அது அனைத்து மக்களுக்குமான பதவி, அப்படியான முதல்வரிடமிருந்து வாழ்த்துக்களை மக்கள் எதிர்பார்ப்பது நியாயம் தானே?
ஒவ்வொரு பகுதி மக்களும் தீபாவளிக்கு ஒவ்வொரு நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். வடநாட்டில் ராமர் வனவாசம் சென்று நாடு திரும்பிய நாளை தீபாவளி என்கிறார்கள். தென்னாட்டில் கிருஷ்ணர் நரகாசுரனை அழித்த நாளாக தீபாவளி கொண்டாடப்பட்டு வருகிறது. இப்படி நாடு முழுவதும் மக்கள் நம்பிக்கை வைத்துள்ள இந்த பண்டிகையை முதலமைச்சர் சீர்குலைக்கலாமா ? அந்த நம்பிக்கையை சிதைக்கின்ற வகையிலே வாழ்த்து கூறாமல் மௌனம் காப்பது எந்த வகையில் நியாயம்?

ஒரு தனி நபராக நம்பிக்கை இருக்கிறதா, இல்லையா என்பது வேறு விஷயம். ஆனால், பொது வாழ்விலே மக்களால் அதிகாரத்திற்கு வந்த பிறகு அந்த நம்பிக்கை உரியவராக, எல்லோருடைய நம்பிக்கைக்கும் உரியவராக, அன்புக்குரியவராக, அவர்களிம் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவதாக இருக்க வேண்டும்.
தீபாவளி முடிந்துவிட்டது அவர் வாழ்த்து சொல்ல மாட்டார், அது வேற விஷயம். ஆனால், முதல்வர் பதவியில் அமர்ந்திருப்பவர் காட்டுகிற பாரபட்சத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும், அதை உணர்ந்து கொள்ள வேண்டும். முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கருணை இல்லையா? மக்களிடம் வேறுபட்டு இருக்கிறாரா? என்பதெல்லாம் கேள்வியாக இருக்கிறது .
இஸ்லாமிய சகோதரர்களுக்கும், கிறிஸ்தவ சகோதரர்களுக்கெல்லாம் இந்து மக்கள் இனிப்பு வழங்கி தீபாவளி மகிழ்ச்சியை பரிமாறிக் கொள்கிறார்கள். பட்டாசு, புத்தாடைகள், இனிப்பு வகைகளை தயார் செய்ய இஸ்லாமிய, கிறிஸ்தவ, இந்து மக்களின் உழைப்பின் வடிவமாக சமதர்ம சமுதாயத்தின் வடிவமாகத்தான் புத்தாடையும், பட்டாசும், பலகாரமும் வெளிப்படுத்துகிறது.

அதே நேரம், கடந்த ஆண்டு டாஸ்மாக்கில் 431 கோடி விற்பனையானது. இந்தாண்டு 600 கோடிக்கு இலக்கை நிர்ணயிக்கப்பட்டு இருப்பதாக செய்திகள் வருகிறது.
மக்கள் நம்பிக்கை வைத்திருக்கிற இந்த நாளுக்காவது நீங்கள் வாழ்த்து சொல்ல முன் வரலாமே? நீங்கள் முன்வர மாட்டீர்கள், அதற்கு தகுந்த பாடத்தை வரும் தேர்தலில் மக்கள் உங்களுக்கு பரிசாக தருவார்கள்” என தெரிவித்துள்ளார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.