ரசிகர்களுக்கு பிடித்து விட்டால்… : நடிகை இந்துஜா சிறப்பு பேட்டி

'மேயாத மானில்' அறிமுகமாகி துள்ளி திரிந்து, 'பிகிலில்' ஓடி விளையாடி, 'மகாமுனி'யில் நடிப்பில் தியானித்து, இப்போது 'பார்க்கிங்' செய்வதற்காக காத்திருக்கிறார் இந்துஜா ரவிச்சந்திரன்.வித்தியாசமான கதைக்களங்களை இவர் தேடுவது போல், அக்கதைக்களங்களும் இவரை தேடிக் கொண்டே இருக்கின்றன. தமிழ் ரசிகர்களின் பிடித்தமான புதிய வரவு இந்துஜா அளித்த பேட்டி.

அம்மா, தங்கை என 'அவுட் ஆப் தி பாக்ஸ்' கதாபாத்திரங்கள் பிடித்துள்ளதா

முதல் படமே தங்கை கதாபாத்திரம் தான். எனக்கு கதையோடு இணைந்த கதாபாத்திரங்கள் மீது நம்பிக்கை உண்டு. அவை மக்கள் மனதில் நீண்ட காலம் இருக்கும். மெர்க்குரியில் காது கேளாதவராய், மகாமுனியில் 5 வயது சிறுவனுக்கு அம்மா, பிகிலில் கால்பந்து வீரர் என பலதரப்பட்ட கதாபாத்திரங்களில் நடித்தேன். இது என் திறனுக்கு உத்வேகம் அளிக்கிறது.

மகாமுனி, நானே வருவேன் என இருவேறுபட்ட இயக்குனர்களிடம் பணிபுரிந்த அனுபவம்

இயக்குனர் சாந்தக்குமார் ரொம்ப கூல். அவருடைய ஷூட்டிங் மென்மையாகவும், அமைதியாகவும் இருக்கும். இயக்குனர் செல்வ ராகவன் ஷூட்டிங்கில் நிறைய சோதனைகளை செய்து பார்ப்பார். நடித்து காட்டுவார்.

உங்கள் கனவு கதாபாத்திரம்

எனக்கு சவாலான கதாபாத்திரங்கள் நடிக்க ஆசை. வரலாற்று படம், காதல் கதை, ஆக் ஷன் படம் என நடிப்பில் அதிக சவால் கொடுக்கும் எந்த படமாக இருந்தாலும் அது எனக்கு கனவு கதாபாத்திரம் தான்.

விஜய், தனுஷ் உடன் நடித்த அனுபவம்

விஜய் ரொம்ப அமைதியானவர். எல்லோரிடமும் ஜாலியாக பேசுவார். பிகில் படத்தின் போது கால்பந்து தொடர்பான ட்ரிக்குகளை 5 நிமிடங்களில் கற்று கொள்வார். தனுஷ் உடன் நடித்த அனுபவம் வித்தியாசமானது. நடிப்பில் பல்வேறு வித்தியாசங்களை
காட்டுவார்.

ரஜினி உடன் நடிக்க தவறிய வாய்ப்பு

ரஜினி படம் தர்பாரில் நடிக்க கேட்ட அதே நேரத்தில் பிகில் படத்தில் நடித்து கொண்டிருந்தேன். தேதி இல்லாததால் ரஜினியுடன் நடிக்க முடியாமல் போனது பெரிய வருத்தம்.

அடுத்தடுத்த படங்கள்

ஹரிஷ் கல்யாண் உடன் நடித்த 'பார்க்கிங்' வெளியாக போகிறது. இந்த படம் வித்தியாசமான கதைக்களம். தெலுங்கு படத்தில் அறிமுகமாக உள்ளேன். ரவி தேஜா உடன் நடிக்கிறேன்.

இந்துஜாவுக்கு 'தல தீபாவளி' எப்போது

நான் இப்போது தான் என் சினிமா பயணத்தை துவக்கி உள்ளேன். அதற்கு இன்னும் நிறைய காலம் இருக்கிறது.

வீட்டில் எப்படி தீபாவளி கொண்டாடுவீர்கள்

படப்பிடிப்பில் வேலுாரில் உள்ள குடும்பத்தை மிஸ் செய்கிறேன். அவர்களுடனான உரையாடல் குறைந்து விட்டது. இருப்பினும் கிடைக்கும் நேரத்தை செலவிட்டு வருகிறேன். தீபாவளி எப்போதும் குடும்பங்களின் சங்கமம் தான்.

சினிமாத்துறையில் சாதிக்க விரும்பும் பெண்களுக்கு கூற விரும்புவது

மன ரீதியாக வலிமையாக இருக்க வேண்டும். உண்மையில் இது சரியான தருணம். திறமை உள்ள யார் வேண்டுமானாலும் சினிமாவில் நுழைந்து சாதிக்கலாம். ரசிகர்களுக்கு பிடித்து விட்டால் அவர்கள் விடமாட்டார்கள். தன்னம்பிக்கை மிக அவசியம்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.