டொரன்டோ : ”இந்தியாவுக்கான, 40 கனடா துாதரக அதிகாரிகளின் பாதுகாப்பை இந்தியா விலக்கிக் கொண்டது, வியன்னா ஒப்பந்தத்தை மீறிய செயல்,” என, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மீண்டும் குற்றச்சாட்டு வைத்துள்ளார். ”பெரிய நாடுகள் சர்வதேச சட்டங்களை எந்தவித விளைவுகளும் இன்றி மீறுவது உலகம் முழுதும் ஆபத்தை விளைவிக்கும்,” என, அவர் தெரிவித்துள்ளார்.
காலிஸ்தான் ஆதரவு பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கனடாவில் கொல்லப்பட்ட சம்பவத்தில், இந்திய துாதரக அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பதாக, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றஞ்சாட்டிய பின், இந்தியா – கனடா உறவில் உரசல் ஏற்பட்டது.
புதுடில்லியில் உள்ள கனடா துாதரக அதிகாரிகள், 40 பேரின் பாதுகாப்பை மத்திய அரசு திரும்ப பெற்றது. அவர்களுக்கான சலுகைகளும் ரத்து செய்யப்பட்டன. இதையடுத்து அவர்கள் கனடா திரும்பினர்.
இதற்கு கனடா ஏற்கனவே கண்டனம் தெரிவித்த நிலையில் அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மீண்டும் கூறியதாவது:
ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை விவகாரத்தில் இந்தியாவுடன் ஆக்கப்பூர்வமாக செயல்பட வேண்டும் என்பதில் ஆரம்பத்தில் இருந்தே நாங்கள் தெளிவாக இருக்கிறோம்.
இதை மிக தீவிர பிரச்னையாக எடுத்துக்கொள்ளும்படி இந்திய அரசிடமும், உலகெங்கிலும் உள்ள கூட்டாளிகளிடமும் கோரிக்கை வைத்தோம். எனவே தான், எங்கள் நாட்டு துாதரக அதிகாரிகள், 40 பேரின் பாதுகாப்பை இந்திய அரசு விலக்கிக் கொண்டது; இது, வியன்னா ஒப்பந்தத்தை மீறும் செயல்.
பெரிய நாடுகள் சர்வதேச சட்டங்களை மீறுவது உலகம் முழுவதும் ஆபத்தை விளைவிக்கும். ஒரு நாடு மற்றொரு நாட்டின் துாதரக அதிகாரிகளின் பாதுகாப்பை விலக்கிக் கொள்வதாக முடிவு செய்தால், அது ஒரு ஆபத்தான முன்னுதாரணத்தை ஏற்படுத்தும்.
இதற்காக நாங்கள் இந்தியாவுடன் சண்டையிட விரும்பவில்லை. நாங்கள் எப்போதும் சட்டத்தின் ஆட்சி பக்கமே நிற்போம்.
இவ்வாறு கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement