லண்டன் பாலஸ்தீன ஆதரவு பேரணிக்கு மட்டும் போலீசார் அனுமதி தருவதாக சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த, பிரிட்டன் உள்துறை அமைச்சர் சுயெல்லா பிரவேர்மேனை, அமைச்சர் பதவியில் இருந்து பிரதமர் ரிஷி சுனக் அதிரடியாக நீக்கினார்.
கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக தொடர்ந்து வரும் இஸ்ரேல் – ஹமாஸ் போரில், பாலஸ்தீனத்துக்கு ஆதரவாகவும், எதிராகவும் ஐரோப்பிய நாடான பிரிட்டனில் கடந்த சில தினங்களாக போராட்டங்கள் நடந்து வருகின்றன.
இதில், பாலஸ்தீன ஆதரவு போராட்டங்களுக்கு மட்டும் மெட்ரோபாலிட்டன் போலீசார் அனுமதி அளிப்பதாகவும், எதிரான போராட்டங்களுக்கு அனுமதி மறுப்பதாகவும் அந்நாட்டு உள்துறை அமைச்சர் சுயெல்லா பிரேவர்மேன் கருத்து தெரிவித்து இருந்தார். இது, அந்நாட்டு பத்திரிகைகளில் வெளியானது.
அரசுக்கு எதிராக கருத்து தெரிவித்த அமைச்சர் சுயெல்லாவை பதவி நீக்கம் செய்யக்கோரி, ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி தரப்பில் அழுத்தம் அளிக்கப்பட்டது.
இதை தொடர்ந்து, பிரிட்டன் உள்துறை அமைச்சர் சுயெல்லா பிரேவர்மேனை, அமைச்சர் பதவியில் இருந்து அந்நாட்டு பிரதமர் ரிஷி சுனக் நேற்று அதிரடியாக நீக்கினார். அவரது இடத்துக்கு, வெளியுறவுத்துறை அமைச்சராக பதவி வகித்து வந்த ஜேம்ஸ் க்ளேவர்லியை நியமித்துள்ளார்.
ஜேம்ஸ் க்ளேவர்லி வகித்து வந்த வெளியுறவுத்துறை அமைச்சர் பதவியில், முன்னாள் பிரதமர் டேவிட் கேமரூனை நியமித்துள்ளார்.
இந்த பதவி நீக்கம் மற்றும் அமைச்சரவை மாற்றத்துக்கு பிரிட்டன் மன்னர் நேற்று ஒப்புதல் அளித்தார்.
தமிழகத்தின் ஹிந்து குடும்பத்தை சேர்ந்த தாய்க்கும், கோவாவின் கிறிஸ்துவ குடும்பத்தை சேர்ந்த தந்தைக்கும் பிறந்த சுயெல்லா பிரேவர்மேன், 2022 முதல், பிரிட்டன் உள்துறை அமைச்சராக பதவி வகித்து வந்தார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement