கோல்கட்டா பார்லிமென்டில் கேள்வி கேட்க லஞ்சம் வாங்கிய புகாரில் சிக்கியுள்ள, திரிணமுல் காங்., – எம்.பி., மஹுவா மொய்த்ராவை, மேற்கு வங்க மாநில கிருஷ்ணா நகர் மாவட்ட திரிணமுல் காங்., தலைவராக நியமித்து, அக்கட்சித் தலைமை உத்தரவிட்டுள்ளது.
குற்றச்சாட்டு
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான, திரிணமுல் காங்கிரசைச் சேர்ந்த மஹுவா மொய்த்ரா, 49, நாடியா மாவட்டத்தின் கிருஷ்ணா நகர் லோக்சபா தொகுதி எம்.பி.,யாக உள்ளார்.
இவர், பார்லிமென்டில் பிரதமர் மோடி மற்றும் அதானி குழுமத்தை குறிவைத்து கேள்வி கேட்க, தொழிலதிபர் தர்ஷன் ஹிராநந்தானியிடம் லஞ்சம் வாங்கியதாக, பா.ஜ., – எம்.பி., நிஷிகாந்த் துபே குற்றம் சாட்டினார்.
இது குறித்து, லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா உத்தரவுப்படி விசாரித்த, பார்லி., ஒழுங்கு நடவடிக்கை குழு, மஹுவா மொய்த்ராவின் எம்.பி., பதவியை பறிக்கும்படி பரிந்துரை செய்தது.
இது தொடர்பாக, டிச., 4ல் துவங்கவுள்ள பார்லி., குளிர் கால கூட்டத்தொடரில் விவாதம் நடக்கவுள்ள நிலையில், சர்ச்சையில் சிக்கியுள்ள மஹுவா மொய்த்ராவுக்கு, கட்சியில் புதிய பதவியை வழங்கி, முதல்வர் மம்தா பானர்ஜி உத்தரவிட்டுள்ளார். கிருஷ்ணா நகர் மாவட்ட திரிணமுல் காங்., தலைவராக, மஹுவா மொய்த்ரா நியமிக்கப்பட்டு உள்ளார்.
பானர்ஜிக்கு நன்றி
இது குறித்து, சமூக வலைதளத்தில் மஹுவா மொய்த்ரா வெளியிட்ட பதிவில், ‘என்னை கிருஷ்ணா நகர் மாவட்ட தலைவராக நியமித்ததற்கு முதல்வர் மம்தா பானர்ஜிக்கு நன்றி. கிருஷ்ணா நகர் மக்களுக்காக எப்போதும் இணைந்து பணியாற்றுவேன்’ என குறிப்பிட்டுள்ளார்.
பண மோசடி வழக்கில் சிக்கியுள்ள மஹுவா மொய்த்ராவுக்கு, கட்சியில் புதிய பதவி வழங்கப்பட்டு உள்ளது, கட்சியில் அவருக்கு உள்ள முக்கியத்துவத்தை காட்டுவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன.
– – நமது சிறப்பு நிருபர் –
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்