சூர்யாவின் ‘கங்குவா’ படப்பிடிப்பு சென்னையில் சீறிப்பாய்ந்து நடந்து கொண்டிருக்கிறது.
‘கங்குவா’ படப்பிடிப்பு தாய்லாந்தைத் தொடர்ந்து தற்போது சென்னையில் நடந்து வருகிறது. கடந்த 8ம் தேதி தொடங்கிய இந்தப் படப்பிடிப்பு, தீபாவளி அன்றும் நான் ஸ்டாப் ஆக நடந்து கொண்டிருக்கிறது. இந்தப் படத்தில் சூர்யாவுடன் திஷா பதானி தவிர இந்தி நடிகர் பாபி தியோல், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, ஆனந்த்ராஜ், ஜெகபதிபாபு, நட்டி நட்ராஜ், ‘கே.ஜி.எஃப்’ அவினாஷ், கே.எஸ்.ரவிகுமார், கோவை சரளா, கருணாஸ் என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகின்றனர்.

வசனங்களை மதன் கார்க்கி எழுதியிருக்கிறார். சிவாவின் ஆஸ்தான ஒளிப்பதிவாளர் வெற்றி பழனிச்சாமி கேமராவை கவனிக்கிறார். தேவி ஶ்ரீபிரசாத் இசைமைத்து வருகிறார். இதில் நிகழ்கால போர்ஷனும், பீரியட் காலகட்டமும் இருக்கிறது. இதில் பீரியட் போர்ஷன் 70 சதவிகிதம் இருக்கிறது என்கிறார்கள்.
தாய்லாந்தைத் தொடர்ந்து சென்னையில் நடந்து வரும் படப்பிடிப்போடு, ‘கங்குவா’வின் மொத்த படப்பிடிப்பும் நிறைவடைகிறது. சூர்யாவின் போர்ஷன் இன்னும் இரண்டு வாரங்கள் மட்டுமே எடுக்கப்பட வேண்டியிருக்கிறது.
நேற்று தீபாவளி என்பதால் சூர்யாவின் போர்ஷனைத் தவிர, பிற போர்ஷன்கள் படமாக்கப்பட்டிருக்கிறது. படக்குழு அனைவருக்கும் தன் சார்பில் பிரியாணி விருந்து வைத்து மகிழ்ந்திருக்கிறார் சூர்யா.

சூர்யாவின் குழந்தைகள் இப்போது மும்பையில் படித்து வருகிறார்கள் என்பதால், பெரும்பாலும் அவர் மும்பையில் இருந்துதான் படப்பிடிப்புக்கு வந்து செல்கிறார். இந்நிலையில் குடும்பத்தினரோடு தீபாவளியைக் கொண்டாட ஜோதிகா, குழந்தைகள் எனப் பலரும் சென்னை வந்திருக்கின்றனர். சூர்யா வீட்டில் நேற்று நடந்த தீபாவளிக் கொண்டாட்டத்தில் சூர்யா, கார்த்தி, ஜோதிகா எனப் பலரும் அவர்களது நெருங்கிய நட்பு வட்டங்களை வீட்டிற்கு வரவழைத்து, தீபாவளியைக் கொண்டாடியுள்ளனர். கார்த்தியின் சினிமா நண்பர்கள் பலரும் நேற்று வந்திருந்தனர்.
இந்த வாரத்தில் சூர்யா மீண்டும் ‘கங்குவா’ படப்பிடிப்பில் பங்கேற்கிறார். இரண்டு வார படப்பிடிப்போடு அவரது போர்ஷன் முழுவதையும் முடித்துக் கொடுத்துவிட்டே, சுதா கொங்கராவின் படப்பிடித்திற்குச் செல்கிறார். ‘கங்குவா’ மொத்த படப்பிடிப்பும் முடிந்ததும் கிராபிக்ஸ் வேலைகள் நடைபெற இருக்கிறது. கோடை விடுமுறைக் கொண்டாட்டமாக படம் திரைக்கு வரும் என்கிறார்கள்.