லெப்ச்சா: ஹிமாச்சல பிரதேசத்தின் லெப்ச்சாவில் உள்ள எல்லை பாதுகாப்பு படை வீரர்களுடன் தீபாவளி பண்டிகையை கொண்டாடிய பிரதமர் நரேந்திர மோடி, வீரர்களுக்கு இனிப்புகளை ஊட்டிவிட்டு தீபாவளி வாழ்த்து தெரிவித்தார். ”எல்லையில், இமயமலையை போல என் வீர உள்ளங்கள் நிற்கும் வரை இந்தியா பாதுகாக்கப்படுகிறது,” என, பிரதமர் தெரிவித்தார்.
கடந்த 2014ல் பிரதமராக பொறுப்பேற்றதில் இருந்து, ஒவ்வொரு தீபாவளி பண்டிகையையும், எல்லையில் உள்ள நம் வீரர்களுடன் கொண்டாடுவதை பிரதமர் நரேந்திர மோடி வழக்கமாக வைத்துள்ளார். கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை, லடாக்கில் உள்ள கார்கிலில் வீரர்களுடன் கொண்டாடினார்.
இந்நிலையில், இந்த தீபாவளியை, ஹிமாச்சல பிரதேசத்தின் லெப்ச்சாவில் உள்ள எல்லை பாதுகாப்பு படை வீரர்களுடன் நேற்று உற்சாகமாக கொண்டாடினார்.
இந்தோ – திபெத் போலீஸ் படையின் சீருடையில் வந்த பிரதமர் மோடி, கருப்பு நிற குளிர் கண்ணாடி, தொப்பி அணிந்து கம்பீரமாக காட்சியளித்தார். வீரர்களுக்கு இனிப்புகளை ஊட்டிவிட்டு தீபாவளி வாழ்த்து தெரிவித்தார். அதன் பின் வீரர்கள் மத்தியில் பிரதமர் பேசியதாவது:
கடந்த, 30 – 35 ஆண்டுகளாக தீபாவளி பண்டிகையை வீரர்களுடன் கொண்டாடி வருகிறேன். நான் பிரதமராக, குஜராத் முதல்வராக ஆவதற்கு முன்பிருந்தே தீபாவளி பண்டிகையை உங்களுடன் கொண்டாடுவதை வழக்கமாக வைத்துள்ளேன்.
நம் வீரர்கள் எப்பொழுதும் தங்கள் உயிரை பணயம் வைத்து முன்னேறிச் சென்றுள்ளனர். எல்லையில் உள்ள பலமான சுவர் என்பதை அவர்கள் எப்போதும் நிரூபித்துள்ளனர்.
என்னை பொறுத்தவரை, நம் பாதுகாப்பு படை வீரர்கள் பணியாற்றும் இடம், கோவிலுக்கு குறைவானது அல்ல. எந்த இக்கட்டான சூழ்நிலைகளிலும் அவர்கள் நம்முடன் நிற்கின்றனர்.
சூடானில் இருந்து இந்தியர்களை வெற்றிகரமாக தாய்நாட்டுக்கு மீட்டு கொண்டு வந்தனர். மேற்காசிய நாடான துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் போது, மக்களை காப்பாற்ற தங்கள் உயிரை பணயம் வைத்து செயல்பட்டனர்.
இந்தியர்களுக்கு எங்கு ஆபத்து ஏற்பட்டாலும், அவர்களை காப்பதில் நம் வீரர்கள் திறம்பட செயல்பட்டுள்ளனர். நம் வீரர்களையும், படைகளையும் நினைத்து பெருமை கொள்கிறேன்.
இந்தியாவின் கடைசி கிராமம் என, நம் எல்லைகள் அழைக்கப்பட்டாலும், என்னை பொறுத்தவரை அவை தான் நாட்டின் முதன்மையான கிராமங்கள். அங்கிருந்தபடி நம் வீரர்களுடன் இந்த தீபாவளி பண்டிகையை கொண்டாடுவது தனிச்சிறப்பு வாய்ந்தது.
கடந்த தீபாவளி முதல் இன்றைய தீபாவளி வரை பல்வேறு சாதனைகளை நம்நாடு செய்து முடித்துள்ளது.
சந்திரயான் – 3 வெற்றி, ஆதித்யா எல்1 வெற்றிகரமாக ஏவப்பட்டது, ஆசிய மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டிகளில், 100க்கும் மேற்பட்ட பதக்கங்களை வென்றது, புதிய பார்லிமென்ட் கட்டடம் திறக்கப்பட்டது, பெண்களுக்கான இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றம், ‘ஜி – 20’ மாநாட்டு தலைமை, உலக அளவில் ஐந்தாவது பெரிய பொருளாதார நாடாக உருவெடுத்தது என, இந்த சாதனை பட்டியல் மிக நீளமானது.
நம் நாடு, தன் முழு பலத்துடன் வளர்ச்சியின் உச்சத்தை தொடுகிறது என்றால், அதற்கான பெருமை உங்கள் திறன்கள், உறுதிப்பாடு மற்றும் தியாகங்களை சேரும்.
நம் பாதுகாப்பு படைகளின் திறன்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. ராணுவ துறையில் உலக அரங்கில் மிகப் பெரிய சக்தியாக நாம் உருவெடுத்து வருகிறோம்.
ராணுவ துறையில் ஒரு காலத்தில் சிறிய விஷயங்களுக்கு மற்றவர்களைச் சார்ந்து இருந்தோம், ஆனால் இப்போது நம் நண்பர்கள் மற்றும் கூட்டாளிகளின் தேவைகளையும் பூர்த்தி செய்கிறோம்.
இன்றைய சர்வதேச சூழ்நிலைகள் இந்தியா மீதான எதிர்பார்ப்புகளை தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இதுபோன்ற முக்கியமான நேரத்தில், இந்தியாவின் எல்லைகள் பாதுகாக்கப்படுவதும், நாட்டில் அமைதியான சூழல் நிலவுவதும் அவசியம், இதில் உங்களுக்குப் பெரிய பங்கு உண்டு.
எல்லையில், இமயமலையை போல என் வீர உள்ளங்கள் நிற்கும் வரை இந்தியா பாதுகாக்கப்படுகிறது. நாடு சுதந்திரம் பெற்ற பின், நாம் எதிர்கொண்ட ஏராளமான போர்களை வீரத்துடன் போரிட்டு வெற்றியை வீரர்கள் நம் வசப்படுத்தினர்.
பண்டிகைகளின் போது கூட குடும்பத்தை விட்டு தொலை துாரத்தில் நம் எல்லைகளை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டுள்ள வீரர்களின் அர்ப்பணிப்பு அவர்களின் கடமை உணர்ச்சியை வெளிப்படுத்துகிறது. உங்களுக்கு இந்த நாடே கடமைப்பட்டுள்ளது.
இந்த தீபாவளி திருநாளில் உங்கள் பாதுகாப்பிற்காக ஒரு விளக்கு ஏற்றி வைப்பதுடன், நீங்கள் எப்போதும் பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என, மக்கள் பிரார்த்தனை செய்வர்.
இவ்வாறு பிரதமர் பேசினார்.
எந்தெந்த ஆண்டு எங்கெங்கு?
கடந்த 2014 தீபாவளி பண்டிகையை, இமய மலையில் உள்ள மிக உயர்ந்த பனிமலை சிகரமான சியாச்சின் மலை சிகரத்தில், வீரர்களுடன் பிரதமர் மோடி கொண்டாடினார். இதை தொடர்ந்து 2015ம் ஆண்டு, இந்தியா – பாகிஸ்தான் போரில் நாம் வெற்றி பெற்றதன், 50வது ஆண்டு கொண்டாடப்பட்டது. இதையொட்டி, பஞ்சாபில் உள்ள மூன்று போர் நினைவுச்சின்னங்களுக்கு சென்று பிரதமர் தீபாவளி கொண்டாடினார்.கடந்த 2016ல், ஹிமாச்சல பிரதேசத்தில் உள்ள எல்லைக்கு சென்று, இந்தோ – திபெத் போலீஸ் படையினருடன் பிரதமர் தீபாவளி கொண்டாடினார்.கடந்த 2017ல் வடக்கு காஷ்மீரில் உள்ள குரேஸ் பகுதியிலும், 2018ல் உத்தரகண்ட் மாநிலத்தின் ஹர்சில் என்ற இடத்திலும் பிரதமர் மோடி தீபாவளியை வீரர்களுடன் கொண்டாடினார்.கடந்த 2019ல் இரண்டாவது முறையாக மீண்டும் பிரதமராக பொறுப்பேற்ற பின், ஜம்மு – காஷ்மீரின் ரஜவுரியிலும், 2020ல் ராஜஸ்தானின் லோங்கேவாலாவிலும், 2021ல் ஜம்மு – காஷ்மீரின் நவ்ஷேராவிலும் பிரதமர் மோடி தீபாவளி பண்டிகையை கொண்டாடினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்