பெங்களூரு: கர்நாடகத் தமிழர்களிடையே வாசிப்பை பரவலாக்கும் நோக்கில் பெங்களூருவில் டிசம்பர் 1-ம் தேதி முதல் 10-ம் தேதி வரை தமிழ்ப் புத்தகத் திருவிழா நடத்தப்பட உள்ளது.
கர்நாடக மாநிலத்தில் கடந்த 1982-ம் ஆண்டு நடந்த கோகாக் கலவரத்துக்கு பிறகு, தமிழ்ப் பள்ளிகள் படிப்படியாக மூடப்பட்டன. இதனால் அங்குள்ள தமிழர்களுக்கு தாய்மொழி கற்கும் வாய்ப்பு இல்லாமல் போனது. தற்போது 30 வயதை கடந்த பெரும்பாலானோருக்கு தமிழ் மொழியை எழுதவும் படிக்கவும் தெரியாத நிலை நிலவுகிறது. இந்த நிலையை மாற்ற அங்குள்ள தமிழ் அமைப்பினர் தமிழ் பயிற்சி வகுப்புகள், கலை நிகழ்ச்சிகள், இலக்கிய நிகழ்வுகள் உள்ளிட்டவற்றை நடத்தி வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக கர்நாடகத் தமிழ் பத்திரிகையாளர் சங்கத்தின் சார்பில் கடந்த ஆண்டு தமிழ்ப் புத்தக திருவிழா நடத்தப்பட்டது. அதற்கு தமிழ் மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது.
இதையொட்டி, இரண்டாவது ஆண்டாக வருகிற டிசம்பர் 1-ம் தேதி முதல் 10-ம் தேதிவரை பெங்களூருவில் மீண்டும் தமிழ் புத்தக திருவிழா நடைபெற உள்ளது. இதுகுறித்து அந்த சங்கத்தின் ஆலோசகர் கு.வணங்காமுடி பெங்களூருவில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: “கடந்த ஆண்டு நடந்த தமிழ்ப் புத்தகத் திருவிழாவில் ஆயிரக்கணக்கான மக்கள் தமிழ் நூல்களை வாங்கி படித்து பயன்பெற்றனர். இதனால் மீண்டும் புத்தக திருவிழா நடத்த வேண்டும் என பெரும்பாலானோர் விருப்பம் தெரிவித்தனர். தமிழ் மக்களிடையே வாசிப்பு அனுபவத்தை வளர்க்கும் நோக்கில் இந்த ஆண்டும் புத்தகத் திருவிழாவுக்கு பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
டிசம்பர் 1-ம் தேதி முதல் டிச.10-ம் தேதி வரையிலான பத்து நாட்கள் நடைபெறும் இந்த விழாவை கர்நாடக சுகாதாரத்துறை அமைச்சர் தினேஷ் குண்டுராவ் டிசம்பர் 1-ம் தேதி தொடங்கி வைக்கிறார். இதில் 30-க்கும் மேற்பட்ட பதிப்பகங்கள் பங்கேற்கின்றன. பள்ளி, கல்லூரி மாணவர்கள் உட்பட தினமும் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்கின்றனர். தினமும் மாலையில் எழுத்தாளர்கள், இலக்கிய ஆளுமைகள், விஞ்ஞானிகள் பங்கேற்கும் சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. டிசம்பர் 3-ம் தேதி தமிழ்ப் புத்தகத் திருவிழா சிறப்பு மலரை சுற்றுலாத்துறை இயக்குநர் வி.ராம்பிரசாத் மனோகர் ஐஏஎஸ், வெளியிடுகிறார். தினந்தோறும் இலக்கிய மாலை நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
டிசம்பர் 10-ம் தேதி நடக்கும் நிறைவு விழாவில் விஐடி பல்கலைக்கழகத்தின் வேந்தர் கோ.விஸ்வநாதன் பங்கேற்று கர்நாடக தமிழர்களின் வளர்ச்சிக்காக பாடுபட்ட 15 பேருக்கு சிறந்த ஆளுமை விருதை வழங்குகிறார். அறிஞர் குணாவுக்கு கர்நாடகத் தமிழ்ப் பெருந்தகை விருதும் வழங்குகிறார். புத்தக திருவிழாவையொட்டி கவியரங்கம், கருத்தரங்கம், நாடகம், தமிழ் மரபு விளையாட்டுகள் ஆகியவற்றுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன” என்று அவர் கூறினார்.