சென்னை: முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பிறந்த நாள் ஒவ்வொரு ஆண்டும் குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
முதல்வர் ஸ்டாலின்: “இந்திய நாட்டின் முதல் பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேருவின் பிறந்த நாளான குழந்தைகள் தினத்தையொட்டி, நேரு அவர்களின் பொன்மொழியை குறிப்பிட்டு தமிழக முதல்வர் ஸ்டாலின் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தி. இன்றைய குழந்தைகள் தான் நாளைய இந்தியாவை உருவாக்குவார்கள். நாம் அவர்களை வளர்க்கும் விதம்தான் நாட்டின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும்” என்று பதிவிட்டுள்ளார்.
பாமக நிறுவனர் ராமதாஸ்: “உலகில் மகிழ்ச்சியை மட்டுமே வழங்கும் உயிர்கள் குழந்தைகள். அன்னையின் அன்புக்கும் எல்லை இருக்கலாம்…. ஆனால், குழந்தைகள் வழங்கும் மகிழ்ச்சிக்கு எல்லை இல்லை. அதனால் தான் எனது பார்வையில் குழந்தைகள் அனைவரும் தெய்வங்கள். என்னைச் சுற்றி குழந்தைகள் இருந்தால் எனக்கு கவலைகளே இருக்காது. மனித வாழ்க்கையில் எல்லாமுமாக இருக்கும் குழந்தைகளை இந்த நாளில் மட்டுமின்றி எந்நாளும் கொண்டாடுவோம், மகிழ்ச்சியடைவோம்” என்று தெரிவித்துள்ளார்.
மநீம தலைவர் கமல்ஹாசன்: “நவீன இந்தியாவை நிர்மாணித்த தனித்த பெரும் தலைவர் பண்டித ஜவாஹர்லால் நேரு. பெரும் செல்வந்தக் குடும்பத்தில் பிறந்தாலும் ஏழைகளின் நிலையை உள்ளும் புறமும் தெளிவுற அறிந்து அவர்களை உயர்த்த, தன் ஆற்றலைப் பயன்படுத்திய பெருந்தகை நேரு பிறந்த நாளில் அவர் செய்த சீர்திருத்தங்களையும் கொண்டுவந்த மறுமலர்ச்சிகளையும் மனம் கொள்வோம்.தீங்கில்லாத, மகிழ்வான, கல்வி பெறும் சூழல்கொண்ட வாழ்க்கை வாழ சிறாருக்கு என் குழந்தைகள் தின வாழ்த்துகள். குழந்தை மனம் கொண்டோருக்கும் வாழ்த்து உரித்தாகட்டும்.” என்று கூறியுள்ளார்.
அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்: “குழந்தைகளே நாட்டின் எதிர்காலம் என பறைசாற்றி, அதற்கான செயல்திட்டங்களையும் வகுத்த முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவுக்கு மரியாதை செலுத்தும் விதமாக அவரின் பிறந்தநாளை ஒவ்வொரு ஆண்டும் குழந்தைகள் தினமாக கொண்டாடி மகிழ்கிறோம்.குழந்தைகளிடம் அன்புசெலுத்தி அரவணைப்பதோடு மட்டுமல்லாமல் அவர்களின் கல்வி, முன்னேற்றம், பாதுகாப்பு, ஆகியவற்றையும் மேம்படுத்தி வருங்கால சமுதாயத்தின் சிற்பிகளாக குழந்தைகளை உருவாக்குவதற்கான உறுதிமொழியை அனைவரும் இந்நாளில் ஏற்போம்” என்று தெரிவித்துள்ளார்.