சென்னை: அமெரிக்காவிற்கு படிக்கச்சென்ற இந்திய மாணவர்களின் எண்ணிக்கை 35 சதவீதம் அதிகரித்துள்ளது.
கல்வி ஆய்வாளர் சதீஷ் குமார் வெங்கடாசலம் கூறியது: ஆண்டுதோறும் ‘ஓப்பன் டோர்ஸ் ரிப்போர்ட்’ வாயிலாக அமெரிக்க கல்வி சார்ந்த புள்ளி விபரங்கள் வெளியிடப்படுகின்றன. நேற்று வெளியிடப்பட்ட அறிக்கையின் படி 2022–23ம் ஆண்டில் 10 லட்சத்து 57 ஆயிரத்து 188 சர்வதேச மாணவர்கள் அமெரிக்க கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெற்றுள்ளனர். இது அதற்கு முந்தைய ஆண்டை விட 11.5 சதவீதம் அதிகமாகும்.
இந்தியா ‘டாப்’
21–22ம் ஆண்டில் ஒரு லட்சத்து 99 ஆயிரத்து 182 இந்திய மாணவர்கள் அமெரிக்க கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெற்றனர். 22–23ம் ஆண்டில் அது 2 லட்சத்து 68 ஆயிரத்து 923 ஆக அதிகரித்துள்ளது.
இதன்படி, அமெரிக்க செல்லும் சர்வதேச மாணவர்களின் பட்டியலில் தொடர்ந்து இந்தியா 2வது இடத்தில் உள்ளது. 20 ஆயிரம் மாணவர்களை கூடுதலாக அனுப்பி சீனா முதலிடத்தில் உள்ளது. ஆனால் மாணவர் எண்ணிக்கை அதிகரிப்பில் 35 சதவீதம் உயர்வுடன் இந்தியாவே முதலிடம் வகிக்கிறது.
தென் கொரியா மூன்றாவது இடத்திலும், கனடா 4, வியட்நாம் 5வது இடத்திலும் உள்ளன. இங்கிலாந்து 15 வது இடத்திலும், ஹாங்காங் 25வது இடத்திலும் உள்ளன.
இந்திய மாணவர்களில் கம்ப்யூட்டர் சயின்ஸ், கணிதம் சார்ந்த படிப்புகளில் ஒரு லட்சத்து 10 ஆயிரத்து 796 மாணவர்கள், இன்ஜினியரிங்கில் 72 ஆயிரத்து 340 பேர், மேலாண்மை துறையை 31 ஆயிரத்து 195 பேரும், லைப்சயின்ஸ் துறையை 15 ஆயிரத்து 59 பேரும் தேர்வு செய்துள்ளனர்.
இவ்வாறு கூறினார்.
அமெரிக்க துணை தூதர் கிரிஸ்டோபர் ஹாட்ஜ்ஸ் கூறுகையில், ”அமெரிக்காவில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்கள் செயல்படுகின்றன. மாணவர்கள் கல்லூரியை கவனமாக ஆராய்ந்து தேர்வு செய்ய வேண்டும். அவர்களுக்கு உதவ சென்னையில் உள்ள அமெரிக்க துணை தூதரகத்தில் யு.எஸ்.ஐ.இ.எப்., எனும் அறக்கட்டளை செயல்படுகிறது. அவற்றில் அனைத்து சேவைகளும் இலவசமாக வழங்கப்படுகிறது” என்றார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement