கொச்சி கேரளாவில், 5 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொடூரமாக கொன்ற குற்றவாளிக்கு துாக்கு தண்டனை மற்றும் ஐந்து ஆயுள் தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. குற்றம் நடந்து, 110 நாட்களில் குற்றவாளிக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
கேரளாவில், மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியை சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது.
பிரேத பரிசோதனை
இங்குள்ள ஆலுவாவில், வெளி மாநில தொழிலாளர்கள் வசிக்கும் குடியிருப்பை சேர்ந்த, 5 வயது சிறுமி, கடந்த ஜூலை 28ல் காணாமல் போனார்.
அந்த சிறுமி, அதே குடியிருப்பில் வசிக்கும் பீஹார் மாநில தொழிலாளி அஷ்வக் ஆலம் என்பவருடன் மார்க்கெட் பகுதியில் சென்றது, கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது.
இதை தொடர்ந்து அஷ்வக் ஆலமை போலீசார் கைது செய்தனர். அவர் மிதமிஞ்சிய குடிபோதையில் இருந்ததால், சிறுமி குறித்த தகவலை பெற முடியவில்லை.
மறுநாள், சிறுமியின் உடல், அருகில் உள்ள மார்க்கெட் பகுதிக்கு பின்புறம் உள்ள புதரில் கண்டெடுக்கப்பட்டது. பிரேத பரிசோதனையில், அந்த சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.
இந்த வழக்கு கொச்சியில் உள்ள, ‘போக்சோ’ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது.
அஷ்வக் ஆலம் மீதான குற்றங்கள் நிரூபிக்கப்பட்ட நிலையில், அவரை குற்றவாளியாக அறிவித்து சிறப்பு நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டது.
அவருக்கான தண்டனையை, சிறப்பு நீதிமன்ற நீதிபதி கே.சோமன் நேற்று அறிவித்தார். அப்போது, குற்றவாளி அஷ்வக் ஆலமுக்கு அதிகபட்ச தண்டனையாக துாக்கு தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.
குற்றவாளி மீது 16 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதில், பாலியல் பலாத்காரம் மற்றும் பலவந்தமாக அந்த சிறுமியுடன் உறவு கொண்டது ஆகிய குற்றங்களுக்காக, இந்திய தண்டனை சட்டம் மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் ஐந்து ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது.
மேலும், 6 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.
சம்பவம்
”கேரள உயர் நீதிமன்றம் உறுதி செய்த பின் துாக்கு தண்டனை நிறைவேற்றப்படும்,” என, அரசு தரப்பு வழக்கறிஞர் மோகன்ராஜ் தெரிவித்தார்.
இந்த தீர்ப்பு குறித்து கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறியதாவது:
குழந்தை மிகவும் கொடூரமான குற்றத்திற்கு பலியாகிவிட்டது. எனவே, குற்றவாளியைப் பிடிக்கவும், அவருக்கு அதிகபட்ச தண்டனையை உறுதி செய்யவும் முழு குற்றவியல் நீதி அமைப்பும் திறமையாக செயல்பட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.
கேரள சட்டம் – ஒழுங்கு ஏ.டி.ஜி.பி., அஜித்குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
இது கேரளாவின் மனசாட்சியை உலுக்கிய வழக்கு. குற்றவாளிக்கு அதிகபட்ச தண்டனை கிடைப்பதில் ஆரம்பத்திலிருந்தே மாநில அரசு உறுதியாக இருந்தது.
அரிதிலும் அரிதான இந்த வழக்கில், குற்றத்தை அரசு தரப்பு வெற்றிகரமாக நிரூபித்துள்ளது. வழக்கு விசாரணை, 30 நாட்களில் முடிக்கப்பட்டது.
சம்பவம் நடந்து முடிந்து 110வது நாளில் குற்றவாளிக்கு துாக்கு தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
குற்றவாளி அஷ்வக் ஆலம் ஐந்தாண்டுகளுக்கு முன் போக்சோ வழக்கில் கைதாகி புதுடில்லி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஒரு மாதம் சிறையில் இருந்த அவர், பின் ஜாமினில் வெளியே வந்துள்ளார்.
குழந்தைகள் தினம் மற்றும், போக்சோ சட்டம் நடைமுறைக்கு வந்து 11 ஆண்டுகள் நிறைவடைந்த தினத்தில், கொடூர குற்றவாளி அஷ்வக் ஆலமுக்கு துாக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்