புதுடில்லி, முதல்வர் பைரேன் சிங் தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கும் வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில், கூகி – மெய்டி பிரிவினரிடையே, மே மாதம் ஏற்பட்ட வன்முறையில், 200க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
மூன்று மாதங்களுக்கு மேல் நடந்த கலவரத்துக்கு பின், மணிப்பூரில் தற்போது படிப்படியாக இயல்புநிலை திரும்பி வருகிறது.
இந்நிலையில், மணிப்பூரில் செயல்படும் மெய்டி தீவிரவாத அமைப்புகள் மற்றும் அவற்றின் துணை அமைப்புகள் உட்பட, ஒன்பது அமைப்புகளுக்கு ஐந்து ஆண்டுகளுக்கு தடை விதித்து, மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது:
பி.எல்.எப்., எனப்படும், மக்கள் விடுதலை ராணுவம் மற்றும் அதன் அரசியல் பிரிவான, புரட்சிகர மக்கள் முன்னணி; ஐக்கிய தேசிய விடுதலை முன்னணி மற்றும் அதன் ஆயுதப் பிரிவான, மணிப்பூர் மக்கள் ராணுவம்.
காங்கிலீபாக் மக்கள் புரட்சி கட்சி மற்றும் அதன் ஆயுதப் பிரிவான சிவப்பு படை; காங்கிலீபாக் கம்யூனிஸ்ட் கட்சி; காங்லீ யவோல் கன லுப்; காங்லீபாக் சோஷலிச ஒற்றுமைக்கான கூட்டணி ஆகிய ஒன்பது அமைப்புகள், சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் கீழ், ஐந்து ஆண்டுகளுக்கு தடை செய்யப்படுகின்றன.
இதில், மக்கள் விடுதலை ராணுவம், ஐக்கிய தேசிய விடுதலை முன்னணி, காங்கிலீபாக் மக்கள் புரட்சி கட்சி, காங்கிலீபாக் கம்யூனிஸ்ட் கட்சி, காங்லீ யவோல் கன லுப் ஆகிய அமைப்புகளுக்கு ஏற்கனவே விதிக்கப்பட்ட தடை, மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படுகிறது. மற்ற அமைப்புகளுக்கு புதிதாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டை சீர்குலைக்க, தேச விரோத சக்திகளுடன் கூட்டு சேர்ந்து ஈடுபட்டதற்காக இந்த அமைப்புகள் தடை செய்யப்படுகின்றன.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement