`மற்றவர்களுக்காக வாழும் வாழ்க்கை மட்டும்தான் மதிப்புக்குரியது!’ – ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்.
சம்பவம் 1: அந்தச் சிறுமியின் பெயர் லேபோனி அக்தர் (Labony Akhter). பங்களாதேஷில் டாக்காவுக்கு அருகேயிருக்கும் சிறு ஊரில் வசித்துவந்தாள். வீட்டில் வறுமை பேயாட்டம் போட்டுக்கொண்டிருந்தது. லேபோனியை பிரசவித்த கையோடு அம்மா இறந்துபோனார். அப்பா குடிக்கு அடிமை. பாட்டியின் அரவணைப்பில் வளர்ந்தாள் லேபோனி. ஒரு வேளை கஞ்சிக்கே பாட்டி அல்லாடிக்கொண்டிருந்தபோது, ஒரு பெண்மணி லேபோனியைத் தான் வளர்க்கிறேன் என்று சொன்னார். லேபோனியைத் தன்னுடன் அழைத்துக்கொண்டு போனார். போன இடத்திலும் அந்தச் சிறு பெண்ணைத் துன்பம் விட்டபாடில்லை. அந்தப் பெண்மணியின் மகன், லேபோனியை சதா அடித்துக்கொண்டேயிருந்தான். அவ்வளவு கஷ்டத்திலும் படிக்கவேண்டும் என்கிற ஆசை அந்தச் சிறுமிக்கு இருந்தது. அதற்கு வாய்ப்புதான் அமையவில்லை. 2008-ம் ஆண்டு மரியா கிறிஸ்டினா ஃபவுண்டேஷன் (MCF) என்ற அமைப்பைப் பற்றிக் கேள்விப்பட்டாள் லேபோனி. பாட்டியின் உதவியுடன் அங்கே போய்ச் சேர்ந்தாள். அங்கே கல்வி, புத்தகங்கள், எழுதுபொருள்கள் அத்தனையையும் இலவசமாகக் கொடுத்தார்கள். உணவும் இலவசம்.
சம்பவம் 2: அகில்மா அகி (Akhilma Akhi) என்ற சிறுமியின் கதையும் கிட்டத்தட்ட லேபோனியைப் போன்றதுதான். பங்களாதேஷில் இருக்கும் உட்டாரா என்கிற ஏரியாவில், ஏழை, எளிய மக்கள் வசிக்கும் குடிசைப் பகுதியில்தான் அகியின் அம்மாவும் வாழ்கிறார். மூன்று குழந்தைகள். கடைசிக் குழந்தை அகி. கணவர் குடிகாரர். சதா அடியும் திட்டும் வேறு அவரிடமிருந்து கிடைத்துக்கொண்டிருந்தன. ஒருநாள் மரியா கிறிஸ்டினா ஃபவுண்டேஷனைப் பற்றிக் கேள்விப்பட்டார் அகியின் அம்மா. `இலவசக் கல்வியா… உடனே பிள்ளையை அழைத்துக்கொண்டு அங்கே ஓடு…’ என்று தோன்றியது. அகியைக் கொண்டு போய் அங்கே சேர்த்துவிட்டார்.

இப்போது லேபோனியும் அகியும் தங்கள் அடிப்படைப் பள்ளிக்கல்வியை முடித்துவிட்டார்கள். ஐக்கிய அமீரகத்திலுள்ள ஒரு ஆட்டோமொபைல் ஸ்டோரில் இன்டர்ன்ஷிப் செய்துகொண்டிருக்கிறார்கள். லேபோனிக்கு சொந்தமாக ஒரு பிசினஸைத் தொடங்கி நடத்த வேண்டும் என்று ஆசை. அகி, ஒரு கெமிக்கல் இன்ஜினீயராக வேண்டும் என்று ஆசைப்படுகிறார். இவர்களைப் போன்ற நூற்றுக்கணக்கான குழந்தைகளின் ஆசையும் கனவும் நனவாக வேண்டும் என்பதற்காகவே மரியா கிறிஸ்டினா ஃபவுண்டேஷன் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. அதை நிறுவியவர் மரியா கான்செய்சாவோ (Maria Conceicao). மரியா இந்த அமைப்பைத் தொடங்கி, உலகையே தன்னை உற்றுப் பார்க்க வைத்திருக்கும் பின்னணிக் கதை கொஞ்சம் உருக்கமானது.
`மகிழ்ச்சியாக இருக்கும் ஒருவர், மற்றவர்களையும் மகிழ்ச்சியோடு வைத்திருப்பார்.’ – ஆனி ஃபிராங்க் (Anne Frank).
பின்னாளில் ஒரு மேடை நிகழ்ச்சியில் தன் இளமைப் பருவம் குறித்து இப்படி விவரிக்கிறார் மரியா… “எனக்கு அப்போது இரண்டு வயது. என் அம்மாவுக்கு சரியான வேலை எதுவும் கிடைக்கவில்லை. அப்போதுதான் மரியா கிறிஸ்டினா என்ற பெண்மணியுடன் என் அம்மாவுக்கு அறிமுகம் கிடைத்தது. அவர், ஆப்பிரிக்காவிலிருந்து போர்ச்சுகீஸில் வந்து குடியேறியவர். அங்கோலாவில் வசித்துவந்தார். கணவரை இழந்தவர். அவருக்கு ஆறு குழந்தைகள். ஏழாவதாக என்னை வளர்க்க முன்வந்தார். அவர் ஒரு தூய்மைப் பணியாளர். அவர்தான் அன்பையும் பரிவையும் பிற குழந்தைகளிடம் எப்படிக் காண்பிப்பது என்று எனக்குக் கற்றுக்கொடுத்தார்.”

மரியா கான்செய்சாவோவின் கதை நமக்கெல்லாம் ஒரு பாடம். இப்படிச் சொல்வதற்குக் காரணம் இருக்கிறது. கொஞ்சம் சுருக்கமாகப் பார்த்துவிடுவோம். போர்ச்சுகீஸியாவைச் (Portuguese) சேர்ந்தவர் மரியா. இதுவரை 10 கின்னஸ் சாதனைகளை முறியடித்திருக்கிறார். இந்தச் சாதனைக்குப் பின்னணியில் இருப்பது மரியா கொடுத்த ஒரு வாக்குறுதி. ஒருவர், இரண்டு பேருக்கு அல்ல… பங்களாதேஷ் குடிசைப் பகுதிகளில் வாழும் 600 குழந்தைகளுக்கும் அவர்களின் பெற்றோருக்கும் அவர் கொடுத்த வாக்குறுதி. `உங்கள் வறுமையை விரட்ட நான் உதவுவேன்’ என்று சொன்ன வாக்குறுதி. அவர் கின்னஸ் சாதனைகளை நிகழ்த்தியது ஏதோ ஓர் அங்கீகாரத்துக்கோ, புகழுக்கு ஆசைப்பட்டோ அல்ல. பங்களாதேஷில் வசிக்கும் அந்த 600 குழந்தைகளுக்கு முறையான கல்வி கொடுக்க வேண்டும் என்பதே அவருடைய நோக்கம். அதற்காக நிதி வேண்டுமே… அதைத் திரட்டுவதற்காக அவர் மேற்கொண்டதெல்லாம் அசாதாரணமான சாதனைகள்.
* தான்சானியாவில் இருக்கும் கிளிமஞ்சாரோ மலைமீது ஏறி சாதனை படைத்தார்.
* `North Pole’ எனப்படும் வட துருவத்தில், கடுமையான பனிப்பொழிவுக்கு மத்தியில் பயணம் மேற்கொண்டார்.
* எவரெஸ்ட்டில் ஏறிய முதல் போர்ச்சுகீசியப் பெண் என்ற சாதனையைப் புரிந்தார்.
* ஆறே வாரங்களில் ஏழு கண்டங்களில், ஏழு மாரத்தான் போட்டிகளில் கலந்துகொண்டு ஓடினார்.
* ஏழு கண்டங்களில் நடந்த ஏழு மாரத்தான் போட்டிகளில் கலந்துகொண்டு 10 நாள்களில் இலக்கை அடைந்தார்.
இதையெல்லாம் மரியா ஏன் செய்தார்?
`வாழ்க்கையின் நிலையான, மிக அவசரமான ஒரு கேள்வி என்பது, `நீங்கள் பிறருக்காக என்ன செய்கிறீர்கள்?’ என்பதுதான்.’ – மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர்.
மரியா செய்த முதல் வேலை என்ன தெரியுமா… கழிவறையைச் சுத்தம் செய்யும் வேலை (Toilet Cleaner). ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர். அம்மாவால் புறக்கணிக்கப்பட்டு, அகதியாக வந்து குடியேறிய மரியா கிறிஸ்டியானா என்ற பெண்ணால் வளர்க்கப்பட்டவர். எப்படியோ அந்தத் தாயின் அரவணைப்பில் படித்து எமிரேட் ஏர்லைன்ஸில் பணிப்பெண்ணாகச் சேர்ந்தார். பயணிகளுக்கு காபி, டீ, டிபன் கொடுக்கும் வேலை.
ஒருநாள் அவர் பணியாற்றிக்கொண்டிருந்த விமானம் பங்களாதேஷில் இருக்கும் டாக்காவில் நின்றது. விமானம் கிளம்ப நிறைய நேரம் ஆகும் என்றார்கள். `சரி ஊரைச் சுற்றிப் பார்த்துவிட்டு வருவோமே…’ என்று கிளம்பினார் மரியா. அவர் பார்த்த காட்சிகளெல்லாம் அவரை அதிரவைத்தன. டாக்காவில் 50,000 குடிசைப் பகுதிகள் அப்போது இருந்தன. லட்சக்கணக்கானவர்கள் அங்கே பரம ஏழைகளாக இருந்தார்கள். தெருவில் நடந்துபோனவருக்கு முதியவர்களையும், பசியில் உழலும் சிறார்களையும் பார்க்கப் பார்க்க மனம் பதைபதைத்துப்போனது.

வீடு வீடாகப் போனார். குடும்பம் குடும்பமாகப் பார்த்துப் பேசினார். அன்றைக்கு 101 குடும்பத்தினரைச் சந்தித்துவிட்டு விமானத்துக்குத் திரும்பினார் மரியா. அதற்கு முன்பாக, `குறைந்தது 600 குழந்தைகளை வறுமையிலிருந்து மீட்பேன்’ என்று வாக்குறுதி கொடுத்துவிட்டு வந்திருந்தார் மரியா.
முதலில் 39 குழந்தைகளுடன் ஆரம்பித்தது அவருடைய சேவை. பிறகு அது 98 ஆனது; அதுவே 200 என ஆகி, 600 குழந்தைகளில் வந்து நின்றது. இந்த இடத்தில் மரியாவின் மனநிலையைக் குறிப்பிட வேண்டும். வாக்குறுதி கொடுத்துவிட்டாரே தவிர, அந்தக் குழந்தைகளுக்கு எப்படி உதவுவது என்கிற எந்த ஐடியாவும் அவரிடம் இல்லை. ஒன்று மட்டும் அவர் மனதில் அழுத்தமாக விழுந்திருந்தது. மரியா கிறிஸ்டியானா என்கிற ஆறு குழந்தைகளின் ஏழைத் தாயால், எப்படி ஏழாவதாகத் தன்னை வளர்க்க முடிந்ததோ, அதேபோல் பங்களாதேஷ் குழந்தைகளையும் தன்னால் மீடேற்ற முடியும் என அவர் மனமார நம்பினார். முதல் வேலையாக ஏர்லைன்ஸ் பணிப்பெண் வேலையை விட்டார்.
அந்தச் சந்தர்ப்பத்தில் யாரோ சொன்னார்கள்… “மரியா, இத்தனை குழந்தைகளுக்கு உதவணும்னா அது சாதாரண காரியமில்லை. உலக அளவுல கவனம் பெறும் அளவுக்கு நீ ஏதாவது செய்யணும். அப்போதான் போதுமான நிதி கிடைக்கும்.’’ அந்த இடத்தில் மரியாவின் சாதனைச் சரித்திரம் ஆரம்பமானது. மாரத்தான் போட்டிகளில் கலந்துகொண்டார். உலக அளவில் விளையாட்டு ரசிகர்கள், `யார் இந்தப் பெண்மணி?’ என கவனிக்க ஆரம்பித்தார்கள். அதற்கு முன்பு அவருக்கு விளையாட்டில் ஒருபோதும் ஆர்வம் இருந்ததில்லை. அவர் மேற்கொண்ட உடற்பயிற்சியெல்லாம் ஒன்றே ஒன்றுதான். விமானத்திலிருக்கும் Galley-யிலிருந்து கேபினுக்கு நடந்து வருவார். பயணிகள் கேட்கும் டீ, காபியை சப்ளை செய்வார். அவ்வளவுதான். ஆனால், பங்களாதேஷ் குழந்தைகளுக்கு உதவ வேண்டும் என்கிற தாகம், அவரை விளையாட்டில் இறங்கவைத்திருந்தது.

ஒரு விளையாட்டு வீரரோ, வீராங்கனையோ பிறக்கும்போதே அப்படியான அவதாரமாகப் பிறப்பதில்லை. பயிற்சி… பயிற்சி… இடைவிடாத பயிற்சி. இதுதான் ஒருவரை விளையாட்டில் முன்னேற வைக்கும். அது தெளிவாக மரியாவுக்குப் புரிந்திருந்தது. பயிற்சியில் கிடைத்த அனுபவம், மனதிலிருந்த உத்வேகம் எல்லாமும் சேர்ந்து அவரை ஒரு விளையாட்டு வீராங்கனையாக (Athlet) மாற்றிக் காட்டியது. கின்னஸ் ரெகார்டு மூலம் சாதித்த பணத்தையெல்லாம் பங்களாதேஷ் குழந்தைகளின் கல்விக்காகச் செலவழித்தார். அவருடைய வேகத்தையும், உதவும் உள்ளத்தையும் பார்த்து யார் யாரோ நன்கொடை அளித்தார்கள். எத்தனையோ குடிசைப் பகுதியில் வசிக்கும் சிறார்களின் வாழ்வில் ஒளியேற்றிவிட்டார் மரியா. அவருடைய பயணம் தொடர்ந்துகொண்டேயிருக்கிறது.
சிலர் அவரிடம் கேட்பார்கள்… “மரியா… உங்கள் வாழ்க்கையிலேயே மிகவும் கடினமாக இருந்தது எது… நார்த் போலுக்குப் போனதா… இங்கிலீஷ் கால்வாயை நீந்திக் கடந்ததா… மாரத்தான் ஓட்டத்தில் கலந்துகொண்டதா?’’ அவர்களுக்கு மரியா இப்படி பதில் சொல்கிறார்… “என் வாழ்க்கையில் மிகவும் கடினமாக இருந்த தருணம்… 2005-ம் ஆண்டு, நான் கொடுத்த வாக்குறுதி. பங்களாதேஷ் குடிசைப் பகுதிகளில் வசித்துவந்த ஏழைத் தாய்மார்களுக்கு நான் கொடுத்த வாக்குறுதி…அவர்களுடைய குழந்தைகளை எப்படியாவது வறுமையிலிருந்து மீட்டுவிடுவேன் என்று கொடுத்த வாக்குறுதி.’’