Rajapakse family responsible for Sri Lankas economic crisis: Court | இலங்கை பொருளாதார நெருக்கடிக்கு ராஜபக்சே குடும்பமே காரணம்: கோர்ட்

கொழும்பு,இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே, முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சே, முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்சே உள்ளிட்டோர் நிர்வாகத்தை தவறாக கையாண்டதே, நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு காரணம் என, அந்நாட்டு உச்ச நீதிமன்றம் நேற்று தெரிவித்தது.

நம் அண்டை நாடான இலங்கையில் கடந்தாண்டு அன்னிய செலாவணி தட்டுப்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து, அந்நாடு கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியது.

அத்தியாவசிய பொருட்களின் விலைகள் பல மடங்கு உயர்ந்தன. பெட்ரோல், டீசல் கிடைக்காமல் மக்கள் அவதிக்குள்ளாகினர். அரசின் மிக மோசமான நிதி நிர்வாகத்தை எதிர்த்து, மக்கள் வீதியில் இறங்கி போராடினர்.

அதிபர் மற்றும் பிரதமர் மாளிகைக்குள் மக்கள் புகுந்து சூறையாடிய சம்பவம் அரங்கேறியது.

அப்போது பிரதமராக பதவி வகித்து வந்த மகிந்த ராஜபக்சே, குடும்பத்துடன் வெளிநாடு தப்பிச் சென்றார்.

நாட்டின் இந்த மோசமான நிலைக்கு, முன்னாள் தலைவர்களின் தவறான நிர்வாகமே காரணம் என, அந்நாட்டு உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த மனுக்களை, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஜெயந்தா ஜெயசூர்யா தலைமையிலான ஐந்து நீதிபதிகள் அடங்கிய அமர்வு விசாரித்தது. இந்த மனுக்கள் நேற்று விசாரணைக்கு வந்தபோது நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு:

முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே, முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சே, முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்சே, இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் கவர்னர்கள் அஜித் நிவார்ட் கப்ரால் லக் ஷ்மண், கருவூல முன்னாள் செயலர் எஸ்.ஆர்.ஆர்டிகலா, முன்னாள் அதிபரின் செயலர்கள் ஜெயசுந்தரா மற்றும் சமன் குமாரசிங்கே ஆகியோர் மக்களின் நம்பிக்கைக்கு புறம்பாக செயல்பட்டுஉள்ளனர்.

அரசியலமைப்பின் 12(1)வது பிரிவின் கீழ் வரும் சட்டத்தின் சம பாதுகாப்புக்கான அடிப்படை உரிமைகளை மீறியுள்ளனர்.

இந்த வழக்கில், மனுதாரர்கள் இழப்பீடு கோராததால் அவர்களுக்கு இழப்பீடு அளிக்கும்படி நீதிமன்றம் உத்தரவிட முடியாது.

ஆனால், மனுதாரர்களின் வழக்கு செலவுகளுக்காக, எதிர் மனுதாரர்கள் தலா 1.50 லட்சம் ரூபாய் வழங்க நீதிமன்றம் உத்தரவிடுகிறது.

இவ்வாறு உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.