கோல்கட்டா, மேற்கு வங்கத்தில், ஆளும் திரிணமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நிர்வாகி ஒருவர் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இதனால் ஆத்திரமடைந்த அக்கட்சித் தொண்டர்கள், சந்தேகத்துக்குரிய ஒருவரை அடித்துக் கொன்றதுடன், வீடுகளுக்கு தீ வைத்தனர்.
மேற்கு வங்கத்தில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில், திரிணமுல் காங்., ஆட்சி நடக்கிறது.
இங்கு, தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள ஜாய்நகர் என்ற பகுதியில் வசித்து வந்தவர், சைபுதீன் லஸ்கர்; திரிணமுல் காங்கிரசைச் சேர்ந்தவர். இவரது மனைவி, பமுங்காச்சி பஞ்சாயத்து தலைவர்.
இந்நிலையில், ஜாய்நகரில் உள்ள வீட்டின் முன், சைபுதீன் லஸ்கர் நேற்று காலை நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள், அவரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர்.
இதையறிந்த திரிணமுல் காங்., தொண்டர்கள், சைபுதீன் லஸ்கர் கொலையில் தொடர்புடையதாக சந்தேகித்து, ஒருவரை அடித்துக் கொன்றனர்.
மேலும் அப்பகுதியில் உள்ள பல்வேறு வீடுகளுக்கும் தீ வைத்து எரித்தனர். இதனால் அப்பகுதியில் பதற்றம் நிலவியது.
இதற்கிடையே, சைபுதீன் லஸ்கர் கொலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு தொடர்பிருப்பதாக, ஆளும் திரிணமுல் காங்., குற்றம் சாட்டி உள்ளது. ஆனால் இதை, மார்க்சிஸ்ட் கட்சியினர் திட்டவட்டமாக மறுத்து உள்ளனர்.
இந்த கொலை குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், ஒருவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். இந்த கொலை காரணமாக மாவட்டம் முழுதும் பதற்றம் நிலவுகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement