நாட்டிற்கு வினைத்திறன் மிக்க புகையிரத சேவையை நடைமுறைப்படுத்துவேன் – போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர்

நாட்டிற்கு வினைத்திறன் மிக்க புகையிரத சேவையை நடைமுறைப்படுத்தவுள்ளதாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன இன்று (15) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

பொதுப் போக்குவரத்து பேருந்துகளினால் ஏற்படும் பல்வேறு விபத்துக்கள் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் நிரோஷன் பெரேரா எழுப்பிய வாய்மூலக் கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இங்கு அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்…

துறைசார் அமைப்பினால் இந்நாட்டில் ரயில்வேயை அபிவிருத்தி செய்ய முடியாது. உலகில் உள்ள அனைத்து நாடுகளும் துறை அமைப்பைக் கைவிட்டு முன்னேறி வருகின்றன. ரயில்வே திணைக்களத்தை அதிகார சபையாக மாற்றுவதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை சமர்ப்பித்தோம். இதன் மூலம் மத்திய நிர்வாகத்திற்கு பதிலாக பரவலாக்கப்பட்ட நிர்வாகம் உருவாகும் என எதிர்பார்க்கின்றேன். இதற்காக நிபுணர் குழுவை அமைச்சரவை நியமித்துள்ளது. குழுவின் பரிந்துரைகள் கிடைத்தவுடன் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்.

வீதிகளில் ஏற்படும் பல விபத்துகளுக்கு டிஜிட்டல் மயமாக்கமே ஒரே தீர்வு என்றும் போக்குவரத்து அமைச்சர் சுட்டிக்காட்டினார். பஸ்களில் ஜி.பி.எஸ். பொருத்தவும், ரயில்கள்; மற்றும் பஸ்களுக்கான இ-டிக்கெட் முறையை உருவாக்க முயற்சித்து வருகிறோம். ஆனால், அந்த திட்டங்களை செயல்படுத்துவது மிகவும் கடினம். அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட 200 மின்சார பஸ்கள் திட்டத்தை இன்னும் செயல்படுத்த முடியவில்லை. இந்த திட்டங்களை அடுத்த வருடத்திலாவது செயல்படுத்த எதிர்பார்க்கின்றோம். கண்டியில் கெட்டம்பே மேம்பாலம், கொ{ஹவல மேம்பாலம் போன்ற வீதி அபிவிருத்தித் திட்டங்கள் முற்றாக நிறுத்தப்பட்டுள்ளன. இதற்கு அரசியல் தீர்வு இல்லை. அரசாங்கங்கள் மாறினாலும், ஜனாதிபதிகள் மாறினாலும், வெளிநாட்டுக் கடனை மறுசீரமைக்கும் வரை நிதி கிடைக்காது என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.