சண்டிகர் :’தெரு நாய் கடிக்கு ஆளாகும் நபரின் உடலில் பதியும் பல் ஒன்றுக்கு இழப்பீடாக 10,000 ரூபாய் அரசு வழங்க வேண்டும்’ என, பஞ்சாப் – ஹரியானா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
தெருவில் சுற்றித் திரியும் விலங்குகளால் ஏற்பட்ட விபத்து காயங்கள் மற்றும் இறப்புகளுக்கு இழப்பீடு வழங்கக் கோரி பாதிக்கப்பட்டவர்கள் சார்பில், 193 மனுக்கள் பஞ்சாப் – ஹரியானா உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த மனுக்கள் நீதிபதி வினோத் எஸ்.பரத்வாஜ் அமர்வு முன் நேற்று முன் தினம் விசாரணைக்கு வந்தது.
இது தொடர்பாக அவர் பிறப்பித்த உத்தரவு:
சாலைகளில் சுற்றித் திரியும் விலங்குகள் மற்றும் அவற்றை பராமரிப்பதற்கான உட்கட்டமைப்புகளை மாநில அரசு கவனத்தில் கொள்ளாமல் விட்டதன் விளைவாக, விபத்துகள் மற்றும் உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றன.
எனவே, இந்த சம்பவங்களுக்கு அரசு தற்போது பொறுப்பேற்க வேண்டியது அவசியமாகிறது.
இதற்கான கமிட்டியை ஒவ்வொரு மாவட்டத்திலும் உருவாக்கி, இழப்பீடு தொகையை நிர்ணயிக்க வேண்டும்.
தெருவில் சுற்றித் திரியும் மாடு, கழுதை, குரங்கு போன்ற விலங்குகளால் பாதிக்கப்பட்டவர்கள், தேவையான ஆவணங்களுடன் இழப்பீட்டிற்கு விண்ணப்பித்தால், இந்த கமிட்டி நான்கு வாரங்களுக்குள் இழப்பீடு வழங்க வேண்டும்.
தெரு நாய் கடிக்கு ஆளாகும் நபரின் உடலில் பதியும் பல் ஒன்றுக்கு குறைந்தபட்சம் 10,000 ரூபாய் இழப்பீடும், சதையை பிய்த்து எடுத்திருந்தால், 0.2 செ.மீ., அளவிலான காயத்திற்கு குறைந்தபட்சம் 20,000 ரூபாய் இழப்பீடும் வழங்க வேண்டும்.
இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement