விவசாயத்தில் எதிர்பார்த்த வருமானம் கிடைப்பதில்லை என்பது விவசாயிகளின் குமுறலாக இருந்து கொண்டிருக்கிறது. அதே சமயம் புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி விவசாயத்தில் சாதிப்பவர்களும் இருந்து கொண்டுதான் இருக்கின்றனர். ராஜஸ்தான் மாநிலத்தில் இரண்டு இளைஞர்கள் விவசாயத்தில் ஸ்டார்ட் ஆப் நிறுவனத்தை தொடங்கி ஆண்டுக்கு 55 கோடி ரூபாய் வருமானம் ஈட்டி வருகின்றனர். ஜெய்ப்பூரை சேர்ந்த ரிதுராஜ் சர்மா மற்றும் கிருஷ்ணா ஜோஷி ஆகியோர் ஜெட்டா பார்ம் என்ற நிறுவனத்தை 2016-ம் ஆண்டு தொடங்கினர். விவசாயத்தில் புதுமையை புகுத்தவேண்டும் என்ற நோக்கத்தில் இந்த ஸ்டார்ட் ஆப் நிறுவனத்தை தொடங்கினர். விவசாயத்தில் எந்த வித அனுபவமும் கிடையாது.

எப்படி சாதிப்பது என்று இரண்டு பேரும் ஆலோசித்து உருவாக்கிய திட்டம்தான் குத்தகை விவசாயம். 2020-ம் ஆண்டு தங்களது நிறுவனத்தை பதிவு செய்து கொண்டனர். விவசாயிகளிடமிருந்து நிலத்தை விலைக்கு வாங்காமல் குத்தகைக்கு வாங்கிக்கொள்ளும் திட்டத்தை அறிமுகம் செய்தனர். அதோடு நில உரிமையாளர்களுக்கு நிரந்தர வருமானமும் கொடுத்து வந்தனர். மேலும் நில உரிமையாளர்களுக்கு அவர்களது தோட்டத்தில் நிரந்தர மாத வருமானத்தில் வேலை வாய்ப்பும் வழங்கினர். அதனால் விவசாயிகள் இத்திட்டத்திற்கு மிகவும் ஆதரவளித்தனர். ஆரம்பத்தில் பல்வேறு சவால்களை சந்தித்தாலும் இன்றைக்கு 9 ஆயிரம் ஏக்கர் நிலத்தை வாடகை அல்லது குத்தகைக்கு வாங்கி விவசாயம் செய்து வருகின்றனர்.
அந்த நிலத்தில் ஸ்ட்ராபெர்ரி பயிரிட்டு அதில் சாதித்து விருதும் வாங்கி இருக்கின்றனர். தற்போது குத்தகைக்கு பெறப்பட்ட நிலத்தில் பழங்கள் மற்றும் காய்கறிகளை பயிரிட்டு நேரடி விற்பனையில் ஈடுபடுகின்றனர். விவசாயத்திற்கு பயிற்சி பெற்ற தொழிலாளர்கள் மற்றும் நிபுணர்களை பயன்படுத்துவதோடு நவீன தொழில் நுட்பத்தையும் பயன்படுத்துகின்றனர். நிலத்தை குத்தகைக்கு கொடுத்த விவசாயிகளை தங்களது நிறுவனத்தின் பங்குதாரர்களாகவே இரண்டு இளைஞர்களும் பார்க்கின்றனர். இரண்டு ஏக்கர் நிலம் குத்தகைக்கு கொடுப்பவர்கள் வீட்டில் ஒருவருக்கு நிரந்தர மாத வருமானத்தில் வேலை கொடுக்கின்றனர்.

அதோடு நிலத்தில் லாபம் கிடைத்தால் அதிலும் பங்கு கொடுக்கின்றனர். புதிய தொழில் மாடலை உருவாக்கி விவசாயத்தில் சாதித்து வரும் இரண்டு இளைஞர்களும் தற்போது இருக்கும் 9 ஆயிரம் ஏக்கர் நிலத்தை 25,000 நிலமாக அதிகரிக்க இலக்கு நிர்ணயித்துள்ளனர். ராஜஸ்தான் மட்டுமல்லாது கர்நாடகா போன்ற பல மாநிலங்களில் தங்களது தொழில் திட்டத்தை இரண்டு பேரும் விரிவுபடுத்தி இருக்கின்றனர். கடந்த ஆண்டு வெறும் 22 கோடி மட்டுமே வருவாய் இருந்த நிலையில் இப்போது அது முடிந்த நிதியாண்டில் 55 கோடியாக அதிகரித்து இருக்கிறது.
அதனை 400 கோடியாக அதிகரிக்க இலக்கு நிர்ணயித்து வேலை செய்து வருகின்றனர். தங்களிடம் நிரந்தரமாக வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு ஓய்வூதிய திட்டத்தையும் ஜெட்டா நிறுவனம் அறிவித்து இருக்கிறது.
இதற்காக விவசாயிகளின் சம்பளத்தில் குறிப்பிட்ட பகுதியை ஓய்வூதியத்திற்காக பிடித்தம் செய்கின்றனர். வருங்காலத்தில் தங்களது நிறுவனத்தில் 4,500 விவசாய தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு கொடுக்கவும் இலக்கு நிர்ணயித்துள்ளனர்.
இது குறித்து ரிதுராஜ் சர்மா கூறுகையில்,”எங்களது விவசாயத்தை வெளிநாடுகளுக்கும் எடுத்துச்செல்ல திட்டமிட்டு இருக்கிறோம். முதற்கட்டமாக நைஜீரியாவில் தொடங்க திட்டமிட்டு இருக்கிறோம்” என்று தெரிவித்தார்.

இது போன்ற திட்டத்தை எப்படி தேர்வு செய்தீர்கள் என்று கேட்டதற்கு, “எங்களது நிறுவனத்திற்கு ஆயிரம் ஏக்கர் நிலம் வாங்கினோம். அதில் 250 ஏக்கர் நிலம் சட்டவிரோதமானது என்று தெரிய வந்தது. உள்ளூர் விவசாயிகள் அந்த நிலத்தில் விவசாயம் செய்ய ஆரம்பித்தனர். அவர்களுக்கு எதிராக புகார் பெற போலீஸார் கூட இல்லை. விவசாயிகளை எதிர்த்து போராட முடியாது என்பதை உணர்ந்து கொண்டேன். அதன் பிறகுதான் விவசாயிகளிடமிருந்து நிலத்தை குத்தகைக்கு எடுக்க ஆரம்பித்தோம்” என்று தெரிவித்தார்.
விவசாயத்தில் சாதிக்கும் இரண்டு பேரும் எம்.பி.ஏ.படித்து வருகின்றனர். விவசாயத்திற்கு உயர்ரக விதைகளை வெளிநாடுகளில் இருந்து கூட கொள்முதல் செய்து பயன்படுத்துகின்றனர். இதனால் வழக்கமாக கிடைக்கும் மகசூலை விட இரண்டு மடங்கு அதிகமாக கிடைக்கிறது என்று கூறுகின்றனர்.