SA vs AUS: நடப்பு ஐசிசி ஆடவர் உலகக் கோப்பை தொடரின் கிளைமேக்ஸ் பகுதி நெருங்கி வருகிறது. நேற்று முதல் அரையிறுதியில் நியூசிலாந்து அணியை 70 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி இறுதிப்போட்டிக்கு நான்காவது முறையாக தகுதிபெற்றது. அந்த வகையில் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்கா – ஆஸ்திரேலியா அணிகள் கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் இன்று மோதுகின்றன.
ஆஸ்திரேலியாவுக்கு இருக்கும் பிரச்னைகள்
ஆஸ்திரேலிய அணி தொடக்கத்தில் சற்று பின்னடைவை சந்தித்தாலும், கடைசி 7 லீக் போட்டிகளையும் வென்று புள்ளிப்பட்டியலில் மூன்றாவது இடத்தில் நிறைவு செய்தது. ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் ஒன்மேன் ஆர்மியாக மேக்ஸ்வெல் அடித்த அந்த ஆட்டம் ஆஸ்திரேலியா மிகப்பெரிய அச்சுறுத்தலை தரும் அணியாக உருவெடுத்திருப்பதை வெளிக்காட்டியது.
எனினும், ஆஸ்திரேலிய அணிக்கும் சில பிரச்னைகள் இருக்கின்றன. ஸ்டாய்னிஸ், கிரீன் இவர்களின் யாரை வைத்து விளையாடுவது என்பது அவர்களுக்கு குழப்பத்தை தரலாம். வார்னர் – ஹெட் – மார்ஷ் ஆகியோரின் அபார தொடக்கம் பலன் கொடுத்தாலும், ஸ்டீவ் ஸ்மித் – லபுஷேன் – இங்லிஸ் – மேக்ஸ்வெல் – ஸ்டாய்னிஸ் – கிரீன் என மிடிலில் விளையாடிய அத்தனை பேரும் தொடர்ச்சியான ரன் குவிப்பை செய்யவில்லை. இது மிகப்பெரிய பிரச்னையாக இருக்கும்.
பவர்பிளேவில் மிரட்டுமா தென்னாப்பிரிக்கா
ஆனால், இது தென்னாப்பிரிக்காவுக்கு மிகப்பெரிய சாதகமானதாகவும் அமையும். யான்சன் – இங்கிடி ஆகியோரின் ஓப்பனிங் ஸ்பெல்லுக்கு தொடக்கத்தில் ஓரிரு விக்கெட்டுகள் விழுந்துவிட்டாலே மிடில் ஓவர்களில் ரபாடா, மகாராஜ், கோட்ஸி ஆகியோர் நடுவரிசை பேட்டர்களை பார்த்துக்கொள்வார்கள். இதனால், ஆஸ்திரேலியாவின் ரன் வேகம் குறையலாம். அதேபோல், ஆஸ்திரேலியாவுக்கு பலமான பந்துவீச்சு இருந்தாலும் தென்னாப்பிரிக்காவின் பேட்டிங் என்பது வலுவாக உள்ளது. சேஸிங்கில் அவர்கள் சொதப்பினாலும் அவர்களை குறைத்து மதிப்பிடவே முடியாது.
மைதானமே சாதகம்தான்
இவையெல்லாம் ஒருபுறம் இருக்க போட்டி நடைபெறும் ஈடன் கார்டன்ஸ் மைதானம் தென்னாப்பிரிக்காவுக்கே அதிகம் சாதகமாக இருக்கும். நடப்பு தொடரில் தென்னாப்பிரிக்கா அங்கு ஒரு போட்டியில் மட்டும் விளையாடி தோல்வியை கண்டது. ஆஸ்திரேலியா இந்த மைதானத்தில் நடப்பு தொடரில் விளையாடவேயில்லை.
இந்த மைதானம் போட்டியின் அனைத்து கட்டத்திலும் சுழலுக்கு உதவியாக உள்ளது. இந்தியா – தென்னாப்பிரிக்கா போட்டியின்போது, ஜடேஜா மிடில் ஓவர்களில் இங்குதான் 5 விக்கெட்டுகளை எடுத்தார். அந்த வகையில், ஜடேஜா போன்றே இடதுகை விரல் சுழலரான கேசவ் மகாராஜ் இந்த போட்டியில் பெருமளவில் சோபிக்க வாய்ப்புள்ளது. ஆஸ்திரேலியாவில் மேக்ஸ்வெல்லுக்கும் இது சாதகம் என்றாலும், மகாராஜூக்கே அதிக வாய்ப்புள்ளது.
எங்கு, எப்போது பார்ப்பது?
இதனால், நவ. 19ஆம் தேதி இந்திய அணியுடன், நரேந்திர மோடி மைதானத்தில் மோதப் போகும் அணி எது என்பது இன்று தெரிந்துவிடும். இப்போட்டி மதியம் 2 மணிக்கு தொடங்கும் நிலையில், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலிலும், ஹாட்ஸ்டார் செயலியிலும் இதனை இலவசமாக காணலாம்.