Whatsapp Chat Backup: ஆண்ட்ராய்டு பயனர்களுக்கான வாட்ஸ்அப் சேட் பேக்அப் நீண்ட காலமாக இலவசமாகவே உள்ளது. ஆனால், வாட்ஸ்அப் சேட் பேக்அப் கூகிள் கணக்கில் எவ்வாறு சேமிக்கப்படும் என்பதில் வாட்ஸ்அப் மற்றும் கூகுள் நிறுவனங்கள் மாற்றங்களை அறிவித்துள்ளதால் பயனர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். அதாவது இனி வாட்ஸ்அப் சேட் பேக்அப் என்பது இலவசமாக இல்லாமல் கட்டண சேவையாக மாறப்போகிறது. ஆண்ட்ராய்டில் வாட்ஸ்அப் பேக்அப்கள் விரைவில் பயனரின் கூகுள் அக்கவுண்ட் கிளவுட் ஸ்டோரேஜ் வரம்பில் இணைக்கப்படும் என இரு நிறுவனங்களும் தற்போது அறிவித்துள்ளன.
அப்டேட்
தற்போதைய நிலவரப்படி, வாட்ஸ்அப் சேட் பேக்அப் பயனரின் கூகுள் கணக்கு கிளவுட்டில் சேமிக்கப்பட்டாலும், அதன் சேமிப்பக வரம்பின் ஒரு பகுதியாக அது கணக்கிடப்படவில்லை. அதாவது, ஆண்ட்ராய்டு பயனர் தனது கூகுள் கணக்கில் இலவச கிளவுட் அடிப்படையிலான சேமிப்பிடம் தீர்ந்துவிட்டாலும், வாட்ஸ்அப் சேட் ஹிஸ்டரி, புதிய பேக்அப் போன்றவற்றை சேமிக்க முடியும். ஆனால் இது தற்போது முற்றிலுமாக மாறப்போகிறது.
“மற்ற மொபைல் தளங்களில் வாட்ஸ்அப் சேட் பேக்அப் எவ்வாறு கையாளப்படுகின்றன என்பதை போலவே, ஆண்ட்ராய்டில் உள்ள வாட்ஸ்அப் கணக்கின் சேட் பேக்அப் விரைவில் உங்கள் கூகுள் கணக்கு கிளவுட் சேமிப்பக வரம்பில் வரும்” என்று கூகிள் இந்த அப்டேட் குறித்து தெரிவித்துள்ளது.
கூகுள் சொல்வது என்ன?
“ஆண்ட்ராய்டில் வாட்ஸ்அப் சேட் பேக்அப் செய்ய நீங்கள் தேர்வுசெய்தால், தனிப்பட்ட கூகுள் கணக்குகள் 15 ஜிபி சேமிப்பகத்துடன் வரும். உங்கள் கூகுள் கணக்கு சேமிப்பகத்தில் உங்களுக்கு இடம் இருக்கும் வரை அதில் பேக்அப் ஆகும்” என கூகுள் தெரிவித்துள்ளது. கூகுள் நிறுவனம் 15 ஜிபி வரை இலவசமாக ஸ்டோரேஜை வழங்குகிறது. அதற்கு மேல் ஸ்டோரேஜ் வேண்டும் என்றால் கட்டணம் செலுத்த வேண்டும்.
வாட்ஸ்அப்பின் ஆண்ட்ராய்டு பயனர்கள் தங்களுடைய கூகுள் அக்கவுண்ட்களில் வாட்ஸ்அப் சேட் பேக்அப்பை சேமிக்க முடியும். மேலும் அவற்றை சேமிக்க உங்கள் கணக்கில் இடம் இல்லாமல் போனால், கூகுள் கணக்கில் இருந்து சேமிப்பக இடத்தைச் சேர்த்துக் கொள்வதற்கான அதன் சேமிப்பக மேலாண்மைக் கருவிகளை (Storage Management Tools) பயன்படுத்துமாறு கூகுள் பரிந்துரைக்கிறது. மாற்றாக, பயனர்கள் தங்கள் வாட்ஸ்அப் சேட் பேக்அப் அளவைக் குறைக்க வாட்ஸ்அப் செயலியில் இருந்து நேரடியாக போட்டோ, வீடியோ போன்றவற்றை அழிக்கவும் ஆப்ஷன் கொடுத்துள்ளது.
எப்போதில் இருந்து மாறுகிறது?
வாட்ஸ்அப் மற்றும் கூகுள் இரண்டும் அடுத்த மாதம் முதல் இந்த மாற்றத்தை வாட்ஸ்அப்பின் பீட்டா பயனர்களுக்கு அறிமுகப்படுத்தத் தொடங்கும் என்று கூறுகின்றன. சிறிய தொகுதி மக்களிடம் இதை வெற்றிகரமாகச் சோதித்த பிறகு, 2024ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ஆண்ட்ராய்டில் உள்ள அனைத்து வாட்ஸ்அப் பயனர்களுக்கும் இந்த மாற்றத்தை நடைமுறைப்படுத்தும் என தெரிகிறது.
இந்த மாற்றம் நடைமுறைக்கு வருவதற்கு 30 நாட்களுக்கு முன்பு பயனர்களுக்கு செயலியில் உள்ள பேனர் மூலம் தெரிவிக்கப்படும் என்று வாட்ஸ்அப் கூறுகிறது. இந்த பேனரை இங்கே அணுக, வாட்ஸ்அப்பில் Settings > Chats > Chat Backup பக்கத்திற்கு செல்லவும்.
மேலும் படிக்க | பணம் பாதுகாப்பாக பின்நம்பரை அப்பப்போ மாத்துங்க… ஈஸியான வழிமுறைகள் இதோ!