கொரிய ஜனாதிபதியின் விசேட தூதுவரான புசான் நகராதிபதி கௌரவ பார்க் ஹியோங்-ஜூன் (Park Heong-Joon) தலைமையிலான தூதுக்குழுவினருக்கும் சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கும் இடையில் சந்திப்பொன்று (14) பாராளுமன்றத்தில் இடம்பெற்றது. இதன்போது பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர மற்றும் கொரியாவின் இலங்கைக்கான தூதுவர் மியோன் லீ ஆகியோரும் கலந்துகொண்டனர்.
இதன்போது கருத்துத் தெரிவித்த கௌரவ பார்க் ஹியோங்-ஜூன் குறிப்பிடுகையில், World EXPO 2030 வர்த்தகக் கண்காட்சி தொடர்பான கொரியாவின் எதிர்பார்ப்பு தொடர்பிலும் இந்தக் கண்காட்சியை கொரியாவின் புசான் நகரில் நடாத்துவதற்கான தயார்நிலை தொடர்பிலும் சபாநாயகரை அறிவுறுத்தினார். இதனால் ஆசிய பிராந்தியத்துக்குப் பாரிய நலன்கள் கிடைக்குமெனவும் அவர் சுட்டிக்காட்டினார். அத்துடன், இரண்டு நாடுகளுக்குமிடையிலான இராஜதந்திர தொடர்புகளை வலுப்படுத்தல் மற்றும் இலங்கையின் சுற்றுலாத் துறை பற்றியும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.
அத்துடன், இந்தத் தூதுக்குழுவினர் முன்னாள் ஜனாதிபதி பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ மஹிந்த ராஜபக்ஷவையும் பாராளுமன்ற வளாகத்தில் சந்தித்து சிநேகபூர்வ கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.
பாராளுமன்றத்தைப் பார்வையிட்ட தூதுக்குழுவினர், சபாநாயகரின் விசேட விருந்தினருக்கான கலரியிலிருந்து சபை அமர்வையும் பார்வையிட்டதுடன், அதன் பின்னர் சபாநாயகருடன் விசேட மதிய போஷனத்தில் கலந்துகொண்டனர்.