Israeli army releases video of weapons pile-up at Gaza hospital | காசா மருத்துவமனையில் ஆயுத குவியல் வீடியோ வெளியீடு

காசா சிட்டி :பாலஸ்தீனத்தின் காசா சிட்டியில் உள்ள அல்ஷிபா மருத்துவமனையில் இருந்து, குவியல் குவியல்களாக ஆயுதங்கள், வெடிபொருட்களை இஸ்ரேல் ராணுவம் நேற்று கண்டெடுத்தது.

மேற்காசிய நாடான இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தின் காசா பகுதியை ஆளும், ஹமாஸ் பயங்கரவாதிகள் இடையே, கடந்த மாதம் 7ம் தேதி துவங்கிய போர், தற்போது வரை தொடர்ந்து வருகிறது.

வான்வழி தாக்குதல் வாயிலாக காசா நகரை தாக்கிய இஸ்ரேல் ராணுவம், தற்போது தரைவழியே முற்றுகையிட்டுள்ளது.

போர் துவங்கியதில் இருந்தே, காசாவில் உள்ள மருத்துவமனையில் பதுங்கியபடி, பொதுமக்களை கேடயமாக பயன்படுத்தி ஹமாஸ் பயங்கரவாதிகள் போரிட்டு வருவதாக இஸ்ரேல் குற்றஞ்சாட்டி வந்தது.

தற்போது அந்த குற்றச்சாட்டுகளை நிரூபிக்கும் விதமான ஆதாரங்கள் இஸ்ரேல் வசம் கிடைத்துள்ளது. காசா சிட்டியில் உள்ள அல்ஷிபா மருத்துவமனையில், 2,000க்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அந்த மருத்துவமனையை கையகப்படுத்திய இஸ்ரேல் ராணுவம், கட்டடம் முழுதும் நேற்று சல்லடை போட்டு சோதனை மேற்கொண்டது. அப்போது, மருத்துவமனையின் எம்.ஆர்.ஐ., ஸ்கேன் பிரிவு அமைந்துள்ள கட்டடத்திற்குள் குவியல் குவியலாக துப்பாக்கிகள், தோட்டாக்கள், வெடிபொருட்கள் கண்டெடுக்கப்பட்டன.

இது தொடர்பான வீடியோ ஆதாரங்களை பகிர்ந்த இஸ்ரேல் ராணுவ செய்தி தொடர்பாளர் ஜோனதன் கான்ரிக்கஸ் கூறியதாவது:

ஹமாஸ் பயங்கரவாதிகள் சர்வதேச சட்டங்களை மீறி, மருத்துவமனை வளாகத்தை ராணுவ நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தி உள்ளனர் என்பது தெளிவாகிறது. இந்த இடத்தை போர் செயல்பாட்டு தலைமையகமாக ஹமாஸ் பயங்கரவாதிகள் பயன்படுத்தி உள்ளனர்.

அல்ஷிபா மருத்துவமனையின் எம்.ஆர்.ஐ., கட்டடத்தில் ஏ.கே.47 ரக துப்பாக்கிகள், தோட்டாக்கள், கையெறி குண்டுகள் குவியல்களாக கைப்பற்றப்பட்டன. மருத்துவமனையில் ஆயுதங்களுக்கு என்ன வேலை?

இவ்வாறு அவர் கூறினார்.

அதேபோல காசாவில் உள்ள சுரங்கம் ஒன்று, ரான்ட்சி மருத்துவமனையுடன் இணைக்கப்பட்டு இருப்பது நேற்று முன்தினம் கண்டுபிடிக்கப்பட்டது. அங்கும் ராணுவ நடவடிக்கைக்கு தேவையான உபகரணங்கள் கண்டெடுக்கப்பட்டன.

ஐ.நா., கண்டனம்!

காசாவில் உள்ள அல்ஷிபா மருத்துவமனையில், 2,300 நோயாளிகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இங்கு, 34 பச்சிளம் குழந்தைகள் உள்ளன. எரிபொருள் தீர்ந்து போனதால், ‘இன்குபேட்டர்’ வசதி இன்றி, குறை பிரசவத்தில் பிறந்த மூன்று குழந்தைகள் கடந்த வாரம் உயிரிழந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர். இந்நிலையில், மருத்துவமனையை குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்துவதற்கு ஐ.நா., மனிதாபிமான பிரிவின் தலைவர் மார்ட்டின் கிரிபித்ஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தில் சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என கத்தார் அரசு கேட்டுக் கொண்டுள்ளது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.