மழையை வேண்டி நடக்கும் யாகத்திற்கு குடையோடு வந்து நின்ற சிறுவனின் நம்பிக்கைக் கதை அனைவருக்கும் தெரிந்ததே. இந்திய அணியும் நேற்று அப்படியொரு வறட்சியான சூழலை சந்தித்திருந்தது.
25 ஓவர்களாக விக்கெட் இல்லை. வீரர்கள், ரசிகர்கள், விமர்சகர்கள் என அத்தனை பேரும் இந்தியாவின் மீது நம்பிக்கை இழக்க தொடங்குகின்றனர். அந்த சமயத்தில் அந்த மைய இடத்திற்கு பந்தை கையிலேந்தி வந்து நிற்கிறார் ஷமி.

யாகத்திற்கு குடையோடு வந்த சிறுவனைப் போல. இக்கட்டான அந்த சூழலில் அவரிடம் எஞ்சியிருந்தது வெறும் நம்பிக்கை மட்டுமே. உயிரை கொடுத்து இயன்றதை முயன்று பார்த்துவிடுவோம் என்கிற வீராப்புதான் அவரை உந்தித் தள்ளியது.
தடதடவென ஓடி வந்து அந்த 33 வது ஓவரின் பந்துகளை வீச ஆரம்பித்தார். வில்லியம்சன் அத்தனை எளிதில் ஒரு வீரரை குறைத்து மதிப்பிட்டு விடமாட்டார். ஆனால், நேற்று அதை செய்தார். இவ்வளவு நேரம் நின்றுவிட்டோம். நல்ல டச்சுக்கு வந்துவிட்டோம். இவரால் மட்டும் நம்மை என்ன செய்துவிட முடியும் என்கிற எண்ணத்தில் காற்றில் உராய்ந்து சுற்றி சுழன்று வேகம் குறைந்து வந்த அந்த பந்தை ஸ்கொயரில் சிக்சராக்க முயன்றார். அடுத்த இரண்டே நொடிகளில் அது எவ்வளவு பெரிய தவறு என்பதை வில்லியம்சன் உணர்ந்தார். சூர்யகுமாரின் கைகளில் பந்து தஞ்சம் புகுந்தது. ஆட்டத்தின் திருப்பு முனையே இதுதான்.
நம்பிக்கையை மட்டுமே கருப்பொருளாக ஏந்தி வந்த ஷமி மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆர்ப்பரிக்கிறார். அவரோடு சேர்த்து அந்த வான்கடே மைதானத்தில் கூடியிருந்த 33000 ரசிகர்களும் ஆர்ப்பரிக்கின்றன. உற்சாக பிளிறல்கள் விண்ணை கிழித்தன. ஆட்டத்தின் மாபெரும் கொண்டாட்ட தருணமே அதுதான். ரசிகர்களின் ஆர்ப்பரிப்பை அளவிடும் கருவிகள் மூலம் அளவீடுகளை திரையில் காட்சிப்படுத்தினார்கள்.

கோலி தனது 50 வது செஞ்ச்சூரியை அடிக்கிறார். மைதானத்திலிருந்த சச்சினுக்கு தலைவணங்குகிறார். சச்சினும் பெருமிதத்தில் பூரிக்கிறார். இந்த உன்னத தருணத்தில் ரசிகர்களின் கூச்சலும் ஆர்ப்பரிப்பும் 121 டெசிபலாக இருந்தது. அதேசமயம், ஷமி அந்த கேன் வில்லியம்சனின் விக்கெட்டை வீழ்த்திய போது ரசிகர்களின் ஆர்ப்பரிப்பு 124 டெசிபலாக இருந்தது. ஒரு வரலாற்று சாதனையை விஞ்சிய கொண்டாட்டத்தை ஷமியின் அந்த விக்கெட் ஏற்படுத்திவிட்டது.
ஒருவேளை ஷமி அந்த விக்கெட் எடுக்காமல் போயிருந்தால் என்ன ஆகியிருக்கும் என யோசித்துப் பாருங்கள். டேரில் மிட்செலுக்கும் வில்லியம்சனுக்கும் இடையேயான பார்ட்னர்ஷிப் இன்னும் நீண்டிருக்கும். சேஸிங்கை இன்னும் க்ளோஸாக நியூசிலாந்து எடுத்து சென்றிருக்கும். இறுதியில் என்ன வேண்டுமானாலும் நடந்திருக்கலாம். முடிவு எப்படி வேண்டுமானாலும் மாறியிருக்கலாம். அப்படி எதுவும் அசம்பாவிதம் நடந்திருந்தால் மற்ற இந்திய வீரர்களை விட ஷமிக்குதான் மன உளைச்சல் அதிகமாக இருந்திருக்கும். ஏனெனில், முன்னதாக ஷமி வில்லியம்சனுக்கு ஒரு கேட்ச்சை ட்ராப் செய்திருந்தார். பும்ராவின் ஓவரில் இந்த கேட்ச் ட்ராப் நிகழ்ந்திருந்தது. ஒருவேளை போட்டி இந்தியாவிற்கு சாதகமாக நகராமல் போயிருந்தால் ஒட்டுமொத்த பழியும் இந்த கேட்ச் ட்ராப்பின் மீது விழுந்திருக்கும். இதை எதோ யூகத்தின் அடிப்படையில் எல்லாம் சொல்லவில்லை.
கடந்த கால அவல சம்பவங்கள் இப்படியெல்லாம் யோசிக்க வைக்கின்றது. 2 வருடங்களுக்கு முன்பு டி20 உலகக்கோப்பையில் தோற்றபோது ஷமியை மட்டும் டார்கெட் வைத்து ட்ரோல் செய்தார்கள். காரணம், அவரின் மதம். வெறுப்பரசியலுக்கு ஷமியை இரையாக்கினர். அந்த சமயத்தில் ஷமியோடு தோள் கொடுத்து நின்றது அப்போதைய கேப்டன் விராட் கோலி மட்டும்தான். ‘மதத்தின் பெயரால் ஒருவரை விமர்சிப்பது கேவலமான செயல். நாங்கள் சகோதரர்கள். எங்களின் சகோதரத்துவத்தை உங்களால் ஒரு போதும் உடைக்க முடியாது.’ பதிலடி கொடுத்தார் விராட் கோலி.

வில்லியம்சனின் விக்கெட்டை ஷமி எடுக்காமல் விட்டிருந்தால் இரண்டாண்டுகளுக்கு முன்பு நடந்தவையெல்லாம் அப்படியே மீண்டும் நடந்திருக்கக்கூடும். அரசியல்ரீதியாக இங்கு எதுவும் மாறிவிடாத போது வேறு எதை நம்மால் எதிர்பார்க்க முடியும். ஆக, 124 டெசிபல் ஆர்ப்பரிப்பு என்பது ஷமிக்கான விடுதலை கொண்டாட்டம். அந்த விக்கெட்டை எடுத்த பிறகு ஷமி இயல்புக்கு திரும்பிவிட்டார். அதன்பிறகெல்லாம் ஆட்டத்தில் அவரின் ஆதிக்கம் மட்டுமே. அந்த 33 வது ஓவரிலேயே டாம் லேதமின் விக்கெட்டையும் வீழ்த்திக் கொடுத்தார். கடைசி வரை நின்று அடம்பிடித்த டேரில் மிட்செலுமே ஷமியிடம்தான் வீழ்ந்தார். அதன்பிறகு இரண்டு டெயில் எண்டர்கள். முன்னதாக இரண்டு ஓப்பனர்கள். ஆக, மொத்தம் நியூசிலாந்தின் 7 விக்கெட்டுகளை ஷமி வீழ்த்தியிருக்கிறார். இந்தியாவிடம் அல்ல, ஷமியிடமே நியூசிலாந்து வீழ்ந்துவிட்டது. ஒற்றை ஆளாக காட்டு யானை போல பயமுறுத்திக் கொண்டிருந்த ஒரு அணியை ஓட விட்டிருக்கிறார்.
நடப்பு உலகக்கோப்பையில் ஷமி பதிவு செய்யும் 3 வது ஃபைபர் இது. வாய்ப்பே வழங்காமல் முதல் சாய்ஸ் பௌலராக பார்க்காமல் ஷமியை பென்ச்சிலேயேத்தான் வைத்திருந்தார்கள். லீக் சுற்றிலும் நியூசிலாந்துக்கு எதிராகத்தான் ஷமி முதலில் களமிறங்கினார். அந்த முதல் போட்டியிலேயே 5 விக்கெட் ஹாலை எடுத்து ஆட்டநாயகன் விருதை வென்றிருந்தார். இலங்கைக்கு எதிராக இன்னொரு ஃபைபர். மொத்தமாக ஆடியிருக்கும் ஆறே போட்டிகளில் 23 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார். உலகக்கோப்பையின் ஒரே தொடரில் அதிக விக்கெட்டுகளை எடுத்த இந்திய பௌலர் எனும் சாதனையை ஷமி ஏற்கனவே செய்துவிட்டார். இப்போது இரண்டு ஆஸ்திரேலியர்களை முந்த வேண்டும். முதலிடத்தில் ஸ்டார்க் இருக்கிறார். 2019 உலகக்கோப்பையில் 27 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார்.

இரண்டாவது இடத்தில் க்ளென் மெக்ராத் இருக்கிறார். 2007 உலகக்கோப்பையில் 26 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார். மூன்றாவது இடத்தில் ஷமி 23 விக்கெட்டுகளுடன் இன்னும் ஓடுவதற்கு தயாராக நிற்கிறார். இறுதிப்போட்டி இன்னும் மிச்சமிருக்கிறது. ஷமியின் இப்போதைய ஃபார்மை பார்க்கையில் ஸ்டார்க்கையும் பின்னுக்குத் தள்ளி அந்த நம்பர் 1 இடத்தை பிடித்துவிடுவார் என்றே தோன்றுகிறது.
நடப்பு உலகக்கோப்பையில் இந்தியாவின் ஹீரோ ஷமிதான். அதில் எந்த சந்தேகமும் தேவையே இல்லை. ஒவ்வொரு போட்டியுமே ஷமியின் நாயக பிம்பத்தை இன்னும் இன்னும் அதிகரித்துக் கொண்டேதான் செல்கிறது. அத்தனை கொண்டாட்டங்களுக்கும்…அத்தனை பாராட்டுக்கும் குறிப்பாக அந்த 124 டெசிபல் ஆர்ப்பரிப்பிற்கும் ஷமி 100% உரித்தானவர்தான்.