மத்திய உள்துறை அமைச்சகத்தின் உத்தரவின்படி, புதுடில்லி சர்வதேச விமான நிலையம் உச்சக்கட்ட பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
வெளிநாடுகளில் பல்வேறு பெயர்களின் கீழ் செயல்பட்டு வரும் காலிஸ்தான் தீவிரவாத அமைப்புகள், அவ்வப்போது மிரட்டல்கள் விடுப்பது வழக்கம்.
அந்த வகையில், ‘சீக்கியர்களுக்கான நீதி’ என்ற அமைப்பும் செயல்பட்டு வருகிறது. தடை செய்யப்பட்ட இந்த அமைப்பின் தலைவராக செயல்பட்டு வரும் குர்பத்வந்த் சிங் பன்னுன் என்ற தீவிரவாதி, கடந்த வாரம் வெளியிட்ட வீடியோவில், ‘ஏர் இந்தியா விமானங்களில் தாக்குதல் நடத்த திட்டமிட்டு உள்ளோம்.’
எனவே, சீக்கியர்கள் யாரும் நவ. 19ம் தேதிக்கு பின், அந்த விமானங்களில் பயணம் மேற்கொள்ள வேண்டாம். அதையும் மீறி பயணம் செய்தால், அவர்களது உயிருக்கு உத்தரவாதம் தர முடியாது’ என மிரட்டல் விடுக்கப்பட்டு இருந்தது.
இதையடுத்து, புதுடில்லியில் உள்துறை அமைச்சகத்தின் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில், விமான பாதுகாப்பு அதிகார ஆணையம், புதுடில்லி போலீஸ், மத்திய தொழில் பாதுகாப்பு படை, ரா உளவு நிறுவனம் ஆகியவற்றை சேர்ந்த உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இதில் எடுக்கப்பட்ட முடிவுகளின்படி, புதுடில்லி, பஞ்சாப் மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களில் உள்ள விமான நிலையங்களில், பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. அதன்படி, 6,000க்கும் மேற்பட்ட மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள், இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் குவிக்கப்பட்டு உள்ளனர்.
இவர்கள் அனைவரும் அடுத்த உத்தரவு வரும் வரையில் விடுமுறை எடுக்க வேண்டாமென்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.விமான நிலைய வளாகங்கள் முழுதும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டதோடு மட்டுமல்லாது, பயணியரை தவிர, மற்றபடி வழியனுப்ப உடன் வரும் உறவினர்கள், நண்பர்கள் என யாருக்கும் அனுமதி இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பார்வையாளர்களுக்கான அனுமதி சீட்டு முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது. மொத்தமுள்ள 122 சோதனை தடுப்புகளிலும், பயணியர் மற்றும் உடைமைகளை தீவிரமாக கண்காணித்து, பல அடுக்கு பாதுகாப்பு வளையத்திற்குள், விமான நிலையத்தை கொண்டு வரும்படியும் உத்தரவிடப்பட்டுள்ளது.
நவ. 19ம் தேதி உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டி நடைபெறும் நிலையில், பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் இருக்கலாம் என்பதற்காக டில்லி மட்டுமல்லாது, ஆமதாபாத் விமான நிலையம் முழுதும் போலீசார் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
நவ. 30ம் தேதி வரை, இந்த விமானங்களுக்கான டிக்கெட் முன்பதிவு மற்றும் கடைசி நேர டிக்கெட் ரத்து என அனைத்தையுமே கண்காணிக்கும்படியும், அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
– நமது டில்லி நிருபர் –
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்