அனைவரும் ஒன்றிணைந்து சர்வதேச கிரிக்கெட் மீதான தடையை நீக்க வேண்டும் என்று சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ இன்று (17) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
கிரிக்கட் தொடர்பில் பாராளுமன்றத்தில் இன்று; கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இலங்கை கிரிக்கெட் மீதான தடையை ஐ.சி.சி நீக்காவிட்டால், ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களில் நடைபெறவுள்ள 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கிண்ண போட்டித் தொடரை நாடு இழக்க நேரிடும் எனவும், இதன் விளைவாக நாட்டிற்கு வருகை தரவிருக்கும் சுமார் 800 க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகளின் வருகை தடைப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்…
நானும் விளையாட்டுத்துறை அமைச்சராகப் பணியாற்றினேன். இன்று கிரிக்கெட்டும் அரசியலாகியுள்ளது. கிரிக்கெட் நிறுவனத்தில் புல் வெட்டுபவனுக்குக் கூட சம்பளம் கிடைக்க வழி இல்லாத நிலை ஒன்று இன்று காணப்படுகின்றது.
அத்துடன், இது இராஜதந்திர பிரச்சினையாக மாறியுள்ளது. கிரிக்கெட் நெருக்கடியை தாண்டி சர்வதேச மற்றும் அரசியல் நெருக்கடிக்கு சென்றுள்ளது. நான் ஏற்றுக்கொள்கிறேன், கிரிக்கெட் சபையின் அமைப்பு மாற வேண்டும். ஐசிசி தடையை நீக்காவிட்டால், எதிர்வரும் ஜனவரி மாதம் நடைபெறவுள்ள 19 வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட் போட்டியில் இலங்கை, பங்குபற்ற முடியாமல் போயிடும். இதனால் சுமார் 800 க்கும் மேற்பட் சுற்றுலாப் பயணிகளின் வருகை தடைப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.