திருப்பதியில் முறைகேடு நடப்பதாக தெலுங்கு தேசம் கட்சி குற்றச்சாட்டு – சேமிப்பு விவரங்களை வெளியிட்டு தேவஸ்தானம் விளக்கம்

திருப்பதி,

திருப்பதி தேவஸ்தான நிர்வாகத்தில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக தெலுங்கு தேசம் கட்சி குற்றம்சாட்டிய நிலையில், இது குறித்து தேவஸ்தானம் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது. திருப்பதி மலையில் செய்தியாளர்களை சந்தித்த தேவஸ்தான நிர்வாக அதிகாரி தர்மா ரெட்டி, கோவில் சேமிப்பு விவரங்களை வெளியிட்டார். திருப்பதி கோவிலுக்கு பக்தர்கள் காணிக்கையாக வழங்கும் பணம், தங்கம் உள்ளிட்டவை, அதிக வட்டி வழங்கும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

கடந்த 2022 நவம்பர் மாத நிலவரப்படி, பல்வேறு வங்கிகளில் 15 ஆயிரத்து 938 கோடியே 68 லட்சம் ரூபாய் தேவஸ்தானத்தின் பணம் இருந்ததாக கூறிய அவர், நடப்பாண்டு நிலவரப்படி 17 ஆயிரத்து 816 கோடியே 15 லட்சம் ரூபாய் டெபாசிட் உள்ளதாக தெரிவித்தார். இதன் மூலம் ஒரே ஆண்டில் 1,877 கோடியே 47 லட்சம் ரூபாயை தேவஸ்தானம் பணமாக சேமித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

அதேபோல், கடந்த ஆண்டு செப்டம்பர் மாத நிலவரப்படி, டெபாசிட் செய்யப்பட்ட தங்கத்தின் அளவு 10 ஆயிரத்து 258 கிலோ 370 கிராமாக இருந்த நிலையில், நடப்பாண்டு நிலவரப்படி 11 ஆயிரத்து 225 கிலோ 660 கிராமாக அதிகரித்துள்ளதாக கூறினார். இதன் மூலம் கடந்த ஒரே ஆண்டில் 967 கிலோ 290 கிராம் தங்கத்தை தேவஸ்தான நிர்வாகம் சேமித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

மேலும், கடந்த 2019-ம் ஆண்டு முதல் தற்போது வரை வங்கிகளில் 4 ஆயிரத்து 791 கோடியே 6 லட்சம் ரூபாய் பணமும், 3 ஆயிரத்து 885 கிலோ 290 கிராம் தங்கமும் டெபாசிட் செய்யப்பட்டுள்ளதாக தர்மா ரெட்டி தெரிவித்தார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.