தமிழ்நாடு சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களில், ஆளுநர் ஆர்.என்.ரவி தரப்பிலிருந்து ஒப்புதலளிக்காமல் திருப்பியனுப்பட்ட 10 மசோதாக்களை மீண்டும் சட்டமன்றத்தில் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பும் வகையில், இன்று காலை சட்டமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் தொடங்கியது. கூட்டம் தொடங்கியதும், மறைந்த முன்னாள் உறுப்பினர்கள், தலைவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து அவையில் உரையாற்றிய முதல்வர் ஸ்டாலின், “ `மரங்கள் ஓய்வை விரும்பினாலும் காற்று விடுவதாக இல்லை’ என்றார் புரட்சியாளர் மா.சே.துங். காய்ச்சல், தொண்டை வலி காரணமாக சில நாள்கள் நான் ஓய்வெடுத்து வந்தாலும், எனது உடல்நலனைவிட இந்த மாநிலத்தின் மக்கள் நலன்தான் முக்கியம் என்று இங்கு நின்றுகொண்டிருக்கிறேன்.

இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழங்கிய அதிகாரத்தின் மையமாக இருந்து சட்டம் இயற்றும் இந்தச் சட்டமன்றத்தை தடுக்கும் சக்தி முளைக்குமானால், அது இந்திய ஜனநாயகத்தை மோசமான நிலைக்குக் கொண்டு சென்றுவிடும். இந்தியாவில் மக்களாட்சி மாண்பை உருவாக்கும் சட்டமன்றமாக முதன்முதலாக எழுந்த சட்டமன்றம் தமிழ்நாடு சட்டமன்றம். சமூகநீதியின் அடிப்படையில் சமூக நலத்திட்டங்களை மக்களின் நலன் கருதி செயல்படுத்துவதில் இந்திய ஒன்றியத்துக்கு தமிழ்நாடு முன்னோடியாகத் திகழ்ந்து வருகிறது. இந்தியாவில் இருக்கும் அனைத்து மாநிலங்களுக்கும் தலையாய மாநிலம் தமிழ்நாடு. இன்று நாம் காணும் வளர்ச்சிகள், நம்முடைய தலைவர்கள் உருவாக்கிக் கொடுத்த சட்டங்களால் வந்தவை. தமிழ்நாட்டுக்கான திட்டங்கள் தமிழ்நாட்டை வளப்படுத்தும் திட்டங்களாக மட்டுமல்லாமல், இந்தியாவுக்கே வழிகாட்டும் திட்டங்களாக அமைந்து வருகின்றன. இத்தகைய சூழ்நிலையைத் தடுக்கும் வகையில் சில இடையூறுகள் இருக்கின்றன.
நிதி நெருக்கடி, ஒன்றிய அரசின் சிலை இடையூறுகள் மட்டும் இல்லாமலிருந்தால், இன்னும் பல திட்டங்களை எங்களால் செய்து காட்ட முடியும். இடையூறு என்று நான் சொன்னதன் விளைவாகத்தான், இந்த சிறப்புக் கூட்டத்தைக் கூட்ட வேண்டியதாக இருக்கிறது. இந்த சிறப்புக் கூட்டம் தமிழ்நாட்டு மக்களின் நலன் கருதியும், ஜனநாயகத்தை நிலைநாட்ட வேண்டிய அவசியத்தின் அடிப்படையில் அரசியலமைப்புச் சட்டத்தைப் பாதுகாக்க வேண்டியும் கூட்டப்பட்டிருக்கிறது. சட்டமன்றத்திலிருந்து நிறைவேற்றி அனுப்பப்பட்ட சட்ட முன்வடிவுகளுக்கு ஒப்புதல் வழங்காத ஆளுநர், அனுமதியை நிறுத்தி வைப்பதாக 13.11.2023 அன்று திருப்பி அனுப்பியிருக்கிறார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசால் மாநிலத்தின் நலன் கருதி சட்டமன்றத்தால் நிறைவேற்றி அனுப்பப்படும் சட்ட முன்வடிவுகளுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டியது ஆளுநரின் கடமை.

அவருக்கு அதில் சட்டரீதியாக அல்லது நிர்வாகரீதியாக ஏதேனும் தெளிவுரை தேவைப்பட்டால், அதைஅரசிடம் கோரலாம். இதற்கு முந்தைய சில நிகழ்வுகளில் அவர் எழுப்பிய சில வினாக்களுக்கு முறையாகச் சம்பந்தப்பட்ட அரசு செயலாளர்கள் விளக்கம் அளித்திருக்கின்றனர். அவருக்கு விளக்கம் அளிக்காமல் இருந்ததில்லை. இந்த நிலையில், தனிப்பட்ட வெறுப்புகளின் அடிப்படையில், சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பப்பட்ட சில சட்ட முன்வடிவுகளுக்கு அனுமதி வழங்காமல், திருப்பி அனுப்பியிருப்பது தமிழ்நாட்டு மக்களையும், இந்த சட்டமன்றத்தையும் ஆளுநர் அவமதிக்கிறார் என்று பொருள். 12 சட்ட முன்வடிவுகள் மற்றும் வேறு சில கோப்புகளுக்கும் ஒப்புதல் வழங்காமலிருப்பது சட்டவிரோதம். தமிழ்நாட்டுக்கு ஆளுநராக இருப்பவர் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு உதவிகரமாக இருக்க வேண்டும்.
ஒன்றிய அரசிடம் அவருக்கு இருக்கும் நெருக்கத்தைப் பயன்படுத்தி தமிழ்நாட்டுக்கான நிதியைப் பெற்றுத் தருவதற்கு முயலலாம். ஜி.எஸ்.டி நிலுவைத்தொகையைப் பெற்றுத் தரலாம். எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கு உரிய நிதியை வாங்கித் தரலாம். மாநில அரசுக்கும் மத்திய அரசுக்கும் பாலமாக இருக்கலாம். ஆனால், இதில் எதையும் செய்யாமல், மாநில அரசின் திட்டங்களுக்கு எவ்வாறு முட்டுக்கட்டை போடலாம் என்று நாள்தோறும் யோசித்து செயல்பட்டு வருகிறார். அதுமட்டுமல்லாமல் தினமும் யாரையாவது அழைத்து வைத்துக் கொண்டு வகுப்பெடுத்து, தவறான பாடங்களைச் சொல்லிக் கொண்டிருக்கிறார். விழாக்களில் விதண்டாவாதமாகக் கருத்துகள் சொல்கிறார். அரசின் கொள்கைகள் குறித்து பொதுவெளியில் விளக்கம் அளிப்பதும், விவாதம் செய்வதும் அவர் வகிக்கும் பதவிக்கு அழகல்ல. திராவிடக் கொள்கை, சமத்துவம், சமூகநீதி, பகுத்தறிவு, சுயமரியாதை ஆகியவை தமிழ்நாட்டு மக்களின் மனங்களில் இருப்பதை அவரால் ஏற்க முடியவில்லை.

அவருக்கும் தமிழ்நாடு சட்டமன்றத்துக்குமான பிரச்னை என்பது நிறைவேற்றி அனுப்பப்படும் சட்டங்கள் மட்டுமல்ல, சமூகநீதியாகவும் இருக்கிறது. அதனால்தான் முடிந்த அளவுக்கு அனைத்து வகையிலும் முட்டுக்கட்டை போடுகிறார். தமிழ்நாடு வளர்வதைக் காணப் பொறுக்கமுடியாத காரணத்தினால்தான், ஆளுநர் இத்தகைய செயல்களில் ஈடுபடுகிறார். அரசியலமைப்புச் சட்டத்துக்கு முழுவதும் மாறாக அரசுடன் மோதல்போக்கைக் கடைபிடித்து வருகிறார். தமிழ்நாட்டு மக்களின் நலன் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு, இந்திய நாடு இதுவரை கண்டிராத முன்னோடி திட்டங்களை நிறைவேற்றி மக்களின் எண்ணங்களில் இடம் பிடித்திருக்கிறது தி.மு.க அரசு. இதை அரசியல்ரீதியாக சகித்துக்கொள்ள முடியாத சிலர், அரசின் நிர்வாகத்தை முடக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அரசியலமைப்புச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் ஆளுநர் என்ற உயர் பதவியின் மூலமாக அரசியல் செய்ய விரும்புகிறார்கள்.

முதல்வர் ஸ்டாலின்
ஆளுநர் பதவி என்பது அகற்றப்பட வேண்டிய பதவியாக இருந்தாலும், அது இருக்கும் வரை மக்களாட்சித் தத்துவத்துக்கு அடங்கியிருப்பதுதான் மரபு. பா.ஜ.க ஆளாத மாநிலங்களில் ஆளுநர்கள் குடைச்சல் கொடுத்து வருகிறார்கள். இப்போது உச்ச நீதிமன்றம் தலையில் கொட்டுவைத்தவுடன், கோப்புகளைத் திருப்பியனுப்புவதும், சில கோப்புகளுக்கு ஒப்புதல் வழங்குவதும் என நாடகமாடுகிறார் ஆளுநர். எனவே அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 200-ன் படி எந்த காரணமும் குறிப்பிடாமல் திருப்பியுனுப்பியிருக்கும் 10 சட்ட முன்வடிவுகளை நிறைவேற்றித் தருமாறு, சட்டமன்ற உறுப்பினர்களைக் கேட்டுக்கொள்கிறேன்” என்று கூறினார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.