Mohammed Shami: உலகக் கோப்பையை (ICC World Cup 2023) வெல்ல இந்திய அணிக்கு இதைவிட ஒரு சிறந்த சந்தர்ப்பமோ, சிறந்த அணியோ, சிறந்த கேப்டனோ, சிறந்த வேகப்பந்துவீச்சு கூட்டணியோ எப்போது அமையும் என இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் யாரை கேட்டாலும் தெரியாது என்பார்கள். அதனால்தான், இப்போதை உலகக்கோப்பையை தூக்கி மூன்றாவது முறையாக சாம்பியனாகி அதிக உலகக் கோப்பைகளை வென்ற அணிகளின் பட்டியலில் இரண்டாம் இடத்தை இந்தியா கடுமையாக போட்டியிட வேண்டும் என்கிறார்கள்.
துரதிருஷ்டமும் அதிஷ்டமும்…
இந்திய அணிக்கு (Team India) இந்த முறை பல விஷயங்கள் சிறப்பாக அமைந்திருந்தாலும், நடப்பு தொடரிலேயே சில பின்னடைவுகளும் ஏற்பட்டன. அக்சர் படேல் தொடர் தொடங்குவதற்கு முன்பே காயத்தில் சிக்க உடனே ரவிசந்திரன் அஸ்வினை (Ravichandran Ashwin) அழைத்து வந்தது, பிசிசிஐ. அவரும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் போட்டியில் சிறப்பாக பந்துவீசி ஆஸ்திரேலியாவின் ரன்ரேட்டை கட்டுப்படுத்தினார், இந்தியா வென்றது. அதன்பின் அவர் வேறு எந்த போட்டியிலும் நடப்பு தொடரில் விளையாடவில்லை.
தொடர் தொடங்குவதற்கு ஒரு சில நாள்களுக்கு முன் தொடக்க வீரர் சுப்மான் கில்லுக்கு (Shubman Gill) டெங்கு காய்ச்சல் ஏற்பட்டது பெரும் அதிர்ச்சியை உருவாக்கியது. ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான் என முதலிரண்டு போட்டிகளை அவர் தவறவிட நேரிட்டது. ஆனால், அவருக்கு பதில் களமிறங்கிய இஷான் கிஷன் சற்று சமாளிக்க பாகிஸ்தான் போட்டியில் இருந்து சுப்மான் கில் விளையாட வந்துவிட்டார்.
ஷமியின் வருகை…
அடுத்து நான்காவது லீக் போட்டியான வங்கதேசம் உடனான ஆட்டத்தில் இந்திய அணியின் ப்ரீமியம் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவுக்கு காயம் ஏற்பட்டது. அவரின் காயம்தான் இந்திய அணிக்கு மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி தந்தது எனலாம். அவர் இல்லை என்பதால் 10 ஓவர்களை வீசத்தக்க ஒரு வேகப்பந்துவீச்சாளர் வேண்டும் என்ற நிலை ஏற்பட்டது. பேட்டிங்கில் சூர்யகுமாரை கொண்டுவந்தாலும் பந்துவீச்சில் ஒரு வலுவான வீரர் வேண்டும்.
அதுவரையிலான போட்டியில் மூன்றாவது வேகப்பந்துவீச்சாளராக இருந்த ஷர்துல் தாக்கூர் சற்று சுமாராகவே விளையாடி வந்தார். அப்போதுதான் இந்திய அணி நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் ஷமியை (Mohammed Shami Bowling) களமிறக்கியது. அவர் தற்போது 6 போட்டிகளில் 23 விக்கெட்டுகளை வீழ்த்தி உலகக் கோப்பையில் டாப் பந்துவீச்சாளராக உள்ளார். ஷமியின் வருகை வலுபெற்றிருந்த இந்திய அணியை வீழ்த்த முடியாத அணி என்ற பெயருக்கு கொண்டுவந்தது.
மனைவியின் கசப்பான கருத்து
இப்படி தேசமே ஷமியை கொண்டாடி கொண்டிருக்க அவரின் முன்னாள் மனைவியும் ஹசின் ஜஹானும் (Shami’s Wife Hasin Jahan) அவரின் ஆட்டம் குறித்து தனது கசப்பான கருத்தை தெரிவித்துள்ளார். குடும்ப வன்முறை மற்றும் பாலியல் ரீதியிலான துன்புறுத்தல் செய்ததாகக் குற்றம் சாட்டியதைத் தொடர்ந்து 2018ஆம் ஆண்டு ஷமி தனது மனைவி ஹசின் ஜஹானை பிரிந்தார்.
‘நல்ல மனிதராக இருந்திருக்கலாம்’
இந்நிலையில், நியூசிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் ஷமி 7 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்தது குறித்து அவரது மனைவியிடம் ஊடகங்கள் தரப்பில் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர்,”அவர் அணிக்கு சிறந்த வீரராக இருப்பது போன்று நல்ல மனிதராகவும் இருந்திருந்தால், நாங்கள் நல்ல வாழ்க்கையை நடத்தியிருக்கலாம். அவர் நல்ல மனிதராக இருந்திருந்தால் என் மகளும், எனது கணவரும், நானும் மகிழ்ச்சியான வாழ்க்கையை நடத்தியிருக்கலாம். மேலும் அவர் ஒரு நல்ல வீரராக மட்டுமல்லாமல் நல்ல கணவராகவும் நல்ல தந்தையாகவும் இருந்தால் அது பெரும் மற்றும் மரியாதைக்குரிய விஷயமாக இருந்திருக்கும்.
‘இந்திய அணிக்காக பிரார்த்தனை’
ஆனால் ஷமியின் தவறுகளாலும், பேராசையாலும், அவரது அழுக்கான மனதாலும், நாங்கள் மூவரும் விளைவுகளை சந்திக்க வேண்டியுள்ளது. இருப்பினும், அவர் தனது எதிர்மறை விஷயங்களை பணம் மூலம் மறைக்க முயற்சிக்கிறார்” என்றார். மேலும், அவர் ஷமியின் சாதனைகள் குறித்து பேசும்போது,”எனக்கு அதில் சிறப்பாக எதுவும் தெரியவில்லை. ஆனால் அரையிறுதிப் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. இறுதிப் போட்டியிலும் (IND vs AUS World Cup Final) இந்தியா வெல்ல வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன்” என்றார்.
ஷமி தன்னை பாலியல் ரீதியில் சித்ரவதை செய்ததாகவும் மற்றும் குடும்ப வன்முறை செய்ததாகவும் ஹசின் ஜஹான் போலீசில் புகார் அளித்தார், தொடர்ந்து, இருவருக்கும் இடையில் கடும் சட்ட போராட்டம் நடந்தது. அந்த வழக்கில், ஷமி மீது ஜாமீனில் வெளிவர முடியாத குடும்ப வன்முறை மற்றும் கொலை முயற்சி ஆகிய குற்றச்சாட்டுகள் உறுதிசெய்யப்பட்டது.
ஜாமீன் வாங்கி வந்த ஷமி
மேலும், உத்தரபிரதேசத்தில் உள்ள ஷமியின் சொந்த ஊருக்கு செல்லும்போதெல்லாம், ஷமியின் அவரது குடும்பத்தினரும் தன்னை சித்ரவதை செய்ததாக ஹசின் ஜஹான் குற்றஞ்சாட்டினார். இருப்பினும், ஹசின் ஜஹானின் குற்றச்சாட்டுகளை ஷமி தொடர்ந்து மறுத்து வந்தார். இது தன்மீது அவதூறு பரப்ப வேண்டும் என்பதை நோக்கமாக கொண்டது என கூறி வந்தார்.
கடந்த செப்டம்பர் மாதத்தில், உலகக் கோப்பை தொடங்குவதற்கு முன்பு, ஷமி கொல்கத்தாவில் உள்ள உள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜராகி, 2018ஆம் ஆண்டில் ஹசின் ஜஹான் தாக்கல் செய்த குடும்ப வன்முறை வழக்கில் ஜாமீன் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.