நம்மை நாமே அழகாக்குவோம் – அழகிய லைலாவின் அழகு டிப்ஸ்

கன்னக்குழி சிரிப்பில், கொஞ்சும் அழகில் தமிழ் ரசிகர்களை கொஞ்சகாலம் கட்டிப் போட்டிருந்தவர் லைலா. திருமணமாகி குடும்பத் தலைவியாய் வாழ்ந்து நீண்ட இடைவெளிக்கு பிறகு இப்போது மீண்டும் நடிக்க வந்திருக்கிறார். அவர் தினமலர் சண்டே ஸ்பெஷலுக்கு
அளித்த பேட்டி…

* ரொம்ப வருஷத்துக்கு பிறகு சர்தார் படத்தில் மீண்டும் நடிக்க வந்தீங்க. இப்போது உள்ள டெக்னாலஜியில் முன்னேற்றம் எந்த அளவு உள்ளது?
ரொம்ப வித்தியாசம் இருக்கு. தயாரிப்பு செலவு அதிகம் ஆகிவிட்டது. நாங்க வந்த புதிதில் தொடர் ஷூட்டிங்கில் கேமரா சூட்டில் தலைமுடி எரிந்து அந்த இடமே கலவரம் ஆகும். எனக்கு பல முறை நடந்திருக்கு. இப்போது பெரிய லென்ஸ், ட்ரோன் என கேமரா வேற லெவல் மாற்றம். சினிமாவில் ஒவ்வொரு துறையும் முன்னேறி இருக்கு.

* நீங்க நடிச்ச படங்களில் மறக்க முடியாத சம்பவம்..?
'பிதாமகன்' படத்தை சொல்வேன். ரயிலில் எடுத்த காட்சியை இப்பவும் நினைச்சு சிரிப்பேன். தேனி பக்கம் இருக்கும் ரயில்வே ஸ்டேஷன். அங்கேயே சாப்பிடணும். ரெஸ்ட் எடுக்கணும். சூர்யா ரயிலில் விற்பனை செய்யும் காட்சி எடுக்கும் போது சிரிச்சிட்டே இருப்பேன். படத்தில் நடிக்க பெண் போலீஸ் தேவைப்பட்டது. எனது மேக்கப் பெண்ணை பாலா நடிக்க வைத்தார். அவர் புடவை, சுரிதார் மட்டுமே அணிவார். போலீஸ் டிரஸ் போட மறுத்தார். பாலா தைரியம் கொடுத்து நடிக்க வைத்தார்.

* இயக்குனர் பாலா என்றால் பேச ஹீரோக்கள் பயப்படுவார்கள். நீங்கள் எப்படி?
அவர் எனக்கு பயப்படுவார். நான் எது கேட்டாலும் அமைதி ஆகிடுவார். நான் தொண தொண என பேசுவேன். கண்டுக்க மாட்டார்.

* சூர்யாவுடன் நடித்த அனுபவம்?
நல்ல நடிகர். நந்தா அவருடன் என் முதல் படம். ஜோதிகா வீடும் என் வீடும் மும்பையில் பக்கத்திலே இருப்பதால் எங்களுக்கு வேற லெவல் நட்பு இருக்கு.

* முன்பு 'உன்னை நினைத்து' படத்தில் விஜய் கூட நடிக்க வேண்டிய நீங்கள், 2023ல் விஜய்யின் 68வது படத்தில் நடிக்கிறீங்க. நினைச்சு பார்த்தது உண்டா.. இப்படி நடக்கும் என்று..?
'உன்னை நினைத்து'படத்தில் எனக்கும் விஜய்க்கும் இயக்குனர் ஒரு பாட்டு எடுத்து விட்டார். என்ன காரணத்தினாலோ விஜய் படத்தில் இருந்து வெளியேறி விட்டார். பல முறை விஜய் படங்கள் மிஸ் ஆகிட்டே போனது. இப்போது விஜய் படத்தில் வாய்ப்பு வந்தது சந்தோஷம். விஜய் என்கிட்ட சொன்னாரு… உங்கள மட்டும் தான் படங்களில் மிஸ் பண்ணிட்டேன் என்று!

* உங்கள் குழந்தைகள் உங்க படங்களை பற்றி பேசுவார்களா?
பெரிய பையன் 11ம் வகுப்பு, சின்னவர் 9ம் வகுப்பு படிக்கிறார். யாரும் என் படங்கள் பார்க்கல, என் படங்கள் பற்றி பேசியதில்லை. கணவர் பிசினஸ் செய்கிறார். என்னை படப்பிடிப்புக்கு அனுப்பி வைத்து விட்டு, குழந்தைகளை நன்றாக பார்த்துக் கொள்கிறார். அதனால் தான் இப்போது நான் தொடர்ந்து படங்களில் நடிக்கிறேன்.

* லைலா ஆசைப்பட்டது என்ன; நடந்தது என்ன?
15 வயதில் நடிக்க வந்தேன்.சின்ன வயசுல பிராணிகளுக்கான மருத்துவராக ஆசைப் பட்டேன்; ஆனால் நடிகை ஆகி விட்டேன்.

* உங்கள் இளமை ரகசியம்?
உணவு சரியாக எடுத்துக் கொள்வேன். தினம் ஜிம் சென்று விடுவேன். நம்மை நாமே கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான் நாம் அழகாவோம்.

* பெண்களுக்கு நீங்க சொல்ல விரும்புவது என்ன?
திருமணமானாலோ குழந்தைகள் பிறந்தாலோ வேலையை மட்டும் விட்டுவிடாதீர்கள். வேலை மிக முக்கியம். சிறு இடைவெளி எடுத்துக் கொள்ளுங்கள்; எல்லாம் சரியான பிறகு மீண்டும் வேலையை தொடருங்கள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.