கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே கும்மனூர் கிராமத்தில் அறுவடையான நெற்கதிரின் கட்டை தலையில் சுமந்தபடி தென்பெண்ணை ஆற்று நீரை விவசாயத் தொழிலாளர்கள் கடந்து செல்லும் நிலையுள்ளது. இச்சிரமத்தைப் போக்க ஆற்றின் குறுக்கே பாலம் கட்ட வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது.
கிருஷ்ணகிரி அருகே திப்பனப்பள்ளி ஊராட்சிக்கு உட்பட்டது கும்மனூர் கிராமம். இக்கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகளின் விளைநிலங்கள் தென்பெண்ணை ஆற்றின் மறுகரையை யொட்டியுள்ளது. இங்கு சுமார் ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் ஆண்டு தோறும் இரு போகம் நெல் சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், ஆற்றின் குறுக்கே பாலம் இல்லாததால், விவசாய பணிகளை மேற்கொள்ள கும்மனூர் விவசாயிகள் ஆற்று நீரில் இறங்கி மறு கரைக்குச் செல்லும் நிலை உள்ளது.
குறிப்பாக, ஆற்றில் நீர் பெருக்கெடுத்துச் செல்லும் போது, ஆற்று நீரில் இறங்கி தங்கள் நிலத்துக்குச் செல்வதோடு, உரம் உள்ளிட்ட விவசாய இடுபொருட்களைத் தலைச் சுமையாக சுமந்தபடி ஆபத்தான முறையில் ஆற்று நீரைக் கடப்பது பல ஆண்டுகளாகத் தொடர்ந்து வருகிறது. மேலும், ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் காலங்களில் சுமார் 20 கிமீ தூரம் சுற்றியே விளை நிலத்துக்கு சென்று வர வேண்டிய கட்டாய நிலை ஏற்படுகிறது என விவசாயிகள் வேதனை தெரிவித்தனர். இச்சிரமத்தைப் போக்க தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே பாலம் கட்ட வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பாக கும்மனூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் சிலர் கூறியதாவது: கும்மனூரில் இருந்து 1 கிமீ தொலைவில் உள்ள தென் பெண்ணை ஆற்றைக் கடந்தே எங்களது விளை நிலத்துக்கு செல்ல முடியும். ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்படும் காலங்களில் கும்மனூரில் இருந்து மாதேப்பட்டி, செம்படமுத்தூர் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்கள் வழியாகச் சென்றே விளை நிலத்தை அடைய முடியும்.
நெல் நடவு, பராமரிப்பு பணி என அறுவடை வரை நாங்கள் 10 அடி ஆழமுள்ள ஆற்றில் இறங்கி நீரை ஆபத்தான முறையில் கடந்தே விளை நிலத்துக்குச் செல்கிறோம். குறிப்பாக, அறுவடைக் காலங்களில் நெற்கதிரைத் தலையில் சுமந்தபடி ஆற்றில் நீரில் மறு கரைக்கு செல்லும் நிலையுள்ளது. கரையில் இருந்து கதிர் கட்டுகளை டிராக்டரில் ஏற்றி களத்துக்குக் கொண்டு சென்று கதிர் அடிக்கிறோம்.
இதனால், எங்களுக்கு அறுவடை கூலி உள்ளிட்ட செலவினங்கள் அதிகரிக்கிறது. இதனால், பலர் வேளாண் தொழிலைக் கைவிடும் நிலையுள்ளது. விவசாயிகளின் நலன் கருதி தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே பாலம் கட்ட மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.