Pakistan decided to evacuate the Afghans | பாக்.,கில் கெடு முடிந்தும் தங்கியுள்ள ஆப்கானியர்களை வெளியேற்ற முடிவு

பெஷாவர்: பாகிஸ்தான் அரசு விதித்த கெடு முடிந்தும், சட்டவிரோதமாக தங்கியுள்ள ஆப்கானியர்களை வெளியேற்ற அதிரடி நடவடிக்கைகளை மேற்கொள்ள அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.

நம் அண்டை நாடான பாகிஸ்தானில், ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த ஏராளமானோர் உரிய ஆவணங்களின்றி சட்ட விரோதமாக குடியிருப்பதாகக் கூறப்படுகிறது. ஐ.நா., அமைப்பின் தகவலின்படி, 20 லட்சம் ஆப்கானியர்கள், பாக்.,கில் குடியேறி இருப்பதாகவும், இதில், தலிபான் ஆட்சிக்கு பயந்து, 2021ல் ஆறு லட்சம் பேர் புலம்பெயர்ந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் அனைவரும் கடந்த 31ம் தேதியுடன் வெளியேற கெடு விதித்த பாக்., அரசு, இல்லையென்றால் சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரித்திருந்தது. இதையடுத்து ஏராளமான ஆப்கானியர்கள் வெளியேறினார்.

ஆனாலும், இன்னும் ஆயிரக்கணக்கானோர் பாகிஸ்தானின் கைபர் பக்துன்குவா மாகாணத்தின் தலைநகர் பெஷாவரில் தங்கியுள்ளனர், இவர்களை வெளியேற்றும் நடவடிக்கையை மாகாண அரசு தீவிரப்படுத்தியுள்ளது.

இது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் பெஷாவரில் நேற்று முன்தினம் நடந்தது. அப்போது, சட்டவிரோதமாக தங்கியுள்ள ஆப்கானியர்களை வெளியேற்ற சிறப்பு போலீஸ் குழுக்கள் அமைக்க திட்டமிடப்பட்டது.

இது குறித்து உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது: பெஷாவரில் தங்கியுள்ள ஆப்கானியர்கள் குறித்து கணக்கெடுப்பு ஏற்கனவே எடுக்கப்பட்டுள்ள நிலையில், அவை சிறப்பு போலீஸ் குழுக்களிடம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. உரிய ஆவணங்கள் இல்லாதவர்கள் உடனடியாக கைது செய்யப்பட்டு நசீர் பாக்கில் உள்ள ஜுமா கான் முகாமுக்கு மாற்றப்படுவர். அங்கிருந்து டோர்காம் எல்லை வழியாக அவர்கள் ஆப்கானிஸ்தானுக்கு நாடு கடத்தப்படுவர். இவ்வாறு அவர் கூறினார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.