Sheinys of Nicaragua won the title of Miss Universe | பிரபஞ்ச அழகி பட்டம் வென்றார் நிகரகுவா நாட்டின் ஷெய்னிஸ்

புதுடில்லி : மத்திய அமெரிக்க நாடான நிகரகுவாவை சேர்ந்த, 23 வயதான ஷெய்னிஸ் பலாசியோஸ், 2023ம் ஆண்டுக்கான, ‘மிஸ் யுனிவர்ஸ்’ எனப்படும், பிரபஞ்ச அழகி பட்டத்தை வென்றுள்ளார்.

உலகின், 72வது பிரபஞ்ச அழகிப் போட்டி, மத்திய அமெரிக்க நாடான எல் சல்வடோரில் நேற்று முன்தினம் நடந்தது.

மொத்தம் 90 நாடுகளுக்கு இடையே நடந்த போட்டியில், மத்திய அமெரிக்க நாடான நிகரகுவாவை சேர்ந்த ஷெய்னிஸ் பலாசியோஸ் பிரபஞ்ச அழகி பட்டத்தை வென்றார்.

தென்கிழக்கு ஆசிய நாடான தாய்லாந்தை சேர்ந்த அன்டோனியா போர்சில்ட் இரண்டாம் இடத்தையும், ஆஸ்திரேலியாவை சேர்ந்த மொராயா வில்சன் மூன்றாம் இடத்தையும் வென்றனர்.

கடந்த ஆண்டு பிரபஞ்ச அழகி பட்டத்தை வென்ற அமெரிக்காவை சேர்ந்த போனி கேப்ரியல், இந்த ஆண்டு பட்டத்தை வென்ற ஷெய்னிஸ் பலாசியோசுக்கு கிரீடத்தை அணிவித்தார். நிகரகுவா நாட்டை சேர்ந்த ஷெய்னிஸ் பலாசியோஸ், மனவள ஆர்வலராகவும், அது தொடர்பான,’டிவி’ நிகழ்ச்சி தயாரிப்பாளராகவும் உள்ளார்.

பிரபஞ்ச அழகிப் போட்டிக்கான முதல், 20 போட்டியாளர்கள் பட்டியலில் இந்தியாவை சேர்ந்த ஸ்வேதா சாரதா, பாகிஸ்தானை சேர்ந்த எரிக்கா ராபின் உள்ளிட்டோரும் இடம் பெற்று இருந்தனர்.

இறுதிப் போட்டியில், ‘வேறொரு பெண்ணின் வாழ்க்கையை வாழ உங்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டால், யாருடைய வாழ்க்கையை நீங்கள் வாழ விரும்புவீர்கள்?’ என, இறுதிப் போட்டியாளர்கள் மூவரிடமும் கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு, தாய்லாந்து நாட்டை சேர்ந்த அழகி அன்டோனியா போர்சில்ட் அளித்த பதில், அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.

அவர், ”இளம் வயதில் அமைதிக்கான நோபல் பரிசு வென்ற பாகிஸ்தானை சேர்ந்த சமூக செயற்பாட்டாளர் மலாலா யூசுப்சாயின் வாழ்க்கையை வாழ விரும்புகிறேன்,” என, பதில் அளித்தார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.