Young woman, child killed by downed power line | அறுந்து விழுந்த மின் கம்பி இளம்பெண், கை குழந்தை பலி

பெங்களூரு : பெங்களூரில் உள்ள தாய் வீட்டுக்கு வந்த இளம்பெண், அவரது ஒன்பது மாத பெண் குழந்தை, அறுந்து விழுந்திருந்த மின்சார ஒயரில் கால் வைத்ததில், தீயில் கருகி உயிரிழந்தனர்.

கர்நாடகாவின் பெங்களூரு ஒயிட்பீல்டு ஏ.கே.கோபாலன் காலனியை சேர்ந்தவர் சவுந்தர்யா, 23. இவருக்கும், தமிழகத்தின் சென்னையை சேர்ந்த சந்தோஷ், 27, என்பவருக்கும் இரண்டு ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. லீலா என்ற ஒன்பது மாத பெண் குழந்தை இருந்தது.

இந்நிலையில், பெங்களூரில் உள்ள சவுந்தர்யாவின் தாய் வீட்டுக்கு வருவதற்காக, நேற்று அதிகாலை 5:30 மணியளவில் பஸ்சில் வந்த தம்பதி, ஒயிட்பீல்டு ஹோப் பார்ம் பகுதியில் இறங்கினர். இறங்கியதும், குழந்தையை கையில் வைத்தபடி, நடைபாதையில் சவுந்தர்யா ஏறினார்.

இருள் விலகாத அதிகாலை நேரம் என்பதால், அங்கு அறுந்து விழுந்திருந்த மின்சார ஒயரை, தெரியாமல் மிதித்த சவுந்தர்யாவை மின்சாரம் தாக்கியது. இதில், அவர் துாக்கி வீசப்பட்டு, குழந்தையுடன் கீழே விழுந்தார்.

அவர் மீது மின்சார ஒயர் விழுந்ததில், உடல் தீப்பற்றி எரிய துவங்கியது. இருவரையும் காப்பாற்ற முயற்சித்த கணவர் சந்தோஷையும் லேசாக மின்சாரம் தாக்கியது.

அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து, பெங்களூரு மின் விநியோக நிறுவனமான, பெஸ்காமுக்கும், போலீசாருக்கும், தீயணைப்பு துறைக்கும் தகவல் தெரிவித்தனர்.

தீப்பற்றி எரிந்த மனைவி, மகளை காப்பாற்ற முடியாமல் கணவர் சந்தோஷ் கதறியபடி இங்கும், அங்கும் ஓடியபடி இருந்தார். தன் கண் முன்னே, மனைவியும், குழந்தையும் தீயில் எரிவதை பார்த்து கதறினார்.

பெஸ்காமுக்கு தகவல் தெரிவித்தும் மின்சாரத்தை துண்டிக்கவில்லை. போலீசாரும் உரிய நேரத்துக்கு வராததால், 5:30 மணியில் இருந்து 7:30 மணி வரை தாய், மகள் உடல்கள் எரிந்தபடி இருந்தன.

உறவினர்கள் புகாரின்படி, ‘பெஸ்காம்’ உதவி பொறியாளர் சேத்தன், உதவி செயற் பொறியாளர் ராஜண்ணா, லைன்மேன் மஞ்சு ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். மூவரும், ‘சஸ்பெண்ட்’ செய்யப்பட்டனர்.

அப்பகுதியை சேர்ந்தவர்கள் கூறுகையில், ‘இந்த மின்சார ஒயர் நேற்று முன்தினம் இரவு 11:30 மணியளவில் அறுந்து விழுந்தது.

‘அப்போதே, பெஸ்காமுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நடவடிக்கை எடுத்திருந்தால் இரு உயிர்கள் போயிருக்காது’ என்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.