“முஸ்லிம்களுக்கான 4% இடஒதுக்கீட்டை ரத்து செய்வோம்” – தெலங்கானாவில் அமித் ஷா உறுதி

ஜாக்டியல் (தெலங்கானா): தெலங்கானாவில் முஸ்லிம்களுக்கு வழங்கப்படும் 4% இடஒதுக்கீட்டை ரத்து செய்வோம் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுதிபட தெரிவித்துள்ளார்.

தெலங்கானாவில் சட்டப்பேரவைத் தேர்தல் வரும் 30-ம் தேதி நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்தில் அமித் ஷா பேசியதாவது: “தெலங்கானாவில் முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்டு வரும் 4% இடஒதுக்கீட்டை ரத்து செய்வோம். அந்த 4 சதவீதத்தை எஸ்சி, எஸ்டி, பிசி மக்களுக்கு பிரித்துக் கொடுப்போம். எஸ்சி இடஒதுக்கீட்டில் இருந்து மடிகா சமூகத்துக்கு உள் இடஒதுக்கீடு வழங்கப்படும். தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர ராவ் (கே.சி.ஆர்) ஹைதராபாத் விடுதலை நாளை கொண்டாடுவதற்கு அஞ்சுகிறார். ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவர் அசாதுதின் ஒவைசி மீதான அச்சமே இதற்குக் காரணம். பாஜக ஆட்சிக்கு வந்தால், ரசாக்கர்ஸ் இடமிருந்து ஹைதராபாத் விடுவிக்கப்பட்ட தினத்தை தெலங்கானா தினமாக கொண்டாடப்படும்.

பாரத் ராஷ்ட்ர சமிதியின் தேர்தல் சின்னம் கார். அந்தக் காரின் ஸ்டீரிங் கேசிஆரிடமும் இல்லை, அவரது மகன் கேடிஆரிடமும் இல்லை, மகள் கவிதாவிடமும் இல்லை. மாறாக, அது ஒவைசியிடம் இருக்கிறது. அவ்வாறு இருக்கும்போது, தெலங்கானா அரசு முறையாக இயங்க முடியுமா? பாரத் ராஷ்ட்ர சமிதி, ஏஐஎம்ஐஎம், காங்கிரஸ் ஆகிய 3 கட்சிகளும் வாரிசுகளுக்கான கட்சிகள். இவை 2ஜி, 3ஜி, 4ஜி கட்சிகள். 2ஜி என்றால், கேசிஆர், கேடிஆர். 3ஜி என்றால் அசாதுதின் ஒவைசியின் தாத்தா, அப்பா மற்றும் ஒவைசி ஆகியோர். 4ஜி என்றால் ஜவஹர்லால் நேரு, இந்திரா காந்தி, ராஜிவ் காந்தி, ராகுல் காந்தி.

நரேந்திர மோடி அரசு மத்தியில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. நமது மூவர்ணக் கொடியை நிலவுக்கு அனுப்பியது. நிலவை ஆராய சந்திரயானை அனுப்பியது. புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தைக் கட்டி உள்ளது. ஜி20 மாநாட்டை அனைவரும் பாராட்டும் வகையில் நடத்தி முடித்தது. 11-வது இடத்தில் இருந்த இந்திய பொருளாதாரத்தை 5-வது இடத்துக்குக் கொண்டு வந்துள்ளது. பாஜக ஆட்சிக்கு வந்தால், தெலங்கானா மக்கள் அயோத்திக்குச் சென்று ராமரை இலவசமாக தரிசிக்க முடியும். அதற்கான ஏற்பாட்டை பாஜக செய்யும்” என்று அமித் ஷா தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.