`ஜெயிலர்’ படத்திற்குப் பின், ரஜினியின் 170வது படமாக `தலைவர் 170′ (தற்காலிக டைட்டில்) உருவாகிவருகிறது. இதன் படப்பிடிப்பு சென்னையில் மும்முரமாகப் போய்க்கொண்டிருக்கிறது.
இன்னமும் தலைப்பு வைக்கப்படாமலிருக்கும் இந்தப் படத்தில் மல்டி ஸ்டார்கள் நிறைய பேர் இருக்கின்றனர். அமிதாப் பச்சன், பகத் பாசில், ராணா, மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன் எனப் பெரிய நட்சத்திரக் கூட்டமே இருக்கிறது. படத்திற்கு இசை, அனிருத். ‘ஜெயிலர்’ படத்தின் வெற்றியில் இசையின் பங்களிப்பும் குறிப்பிடத் தகுந்தது என்பதால், இந்தப் படத்தின் இசையும் பேசப்படும் என்கிறார்கள். கடந்த சில வாரங்களுக்கு முன்னர் திருவனந்தபுரத்தில் தொடங்கிய படப்பிடிப்பு பின்னர், நாகர்கோவில் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் நடந்தது. அதில் ரஜினி, மஞ்சு வாரியர் காம்பினேஷன் காட்சிகள் மட்டுமே படமாக்கப்பட்டன. இதனை அடுத்து மும்பையில் அமிதாப் பச்சனின் காம்பினேஷனில் படப்பிடிப்பு நடந்தது. திருவனந்தபுரம், மும்பை படப்பிடிப்பைத் தொடர்ந்து தற்போது சென்னையிலும் படப்பிடிப்பு நடந்துவருகிறது.

சென்னையில் உள்ள ஸ்டூடியோ ஒன்றில் அரங்கம் அமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெறுகிறது. அங்கே பிரமாண்டமான இரு செட்கள் அமைக்கப்பட்டு வருகின்றன என்ற தகவலை முன்பே சொல்லியிருந்தோம். இப்போது, அந்த அரங்கங்கள் அமைக்கப்பட்டு அங்கே படப்பிடிப்பு நடந்துவருகிறது.
கமிஷனர் அலுவலகம்போல உருவாகியுள்ள அரங்கத்தில் ‘டாக்கி போர்ஷன்கள்’ படமாக்கப்பட்டுவருகின்றன. காலை ஒன்பது மணி ஷூட் என்றால், சரியாக ஒன்பது மணிக்கெல்லாம் ரஜினி ரெடியாக வந்து நிற்கிறார் என்கிறார்கள். புதுக் கதாநாயகர்களுக்கு சவால் விடும் அவரது உழைப்பு பிரமிக்க வைக்கிறது என்கிறார்கள்.

சென்னை ஷெட்யூலில் சில நாள்களாக ரஜினி காம்பினேஷனில் ரித்திகா சிங், பகத் பாசில் ஆகியோர் நடித்துவருகின்றனர். இந்த மாதம் முழுவதும், சென்னையில் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெறுமெனத் தெரிகிறது. தொடர்ந்து வரும் நாள்களில் ராணா, மஞ்சுவாரியர், துஷாரா ஆகியோரின் காட்சிகளும் எடுக்கப்பட உள்ளன.
இது ‘போலி என்கவுன்ட்டர்’ குறித்த கதை என்கிறார்கள். இதைத் தொடர்ந்து ரஜினி அடுத்து லோகேஷ் கனகராஜின் படத்தில் நடிக்கிறார். அந்தப் படத்திற்கான கதை விவாத வேலைகள் தொடங்கிவிட்டன. மார்ச் மாதத்தில் இருந்து லோகேஷின் படத்திற்கு ரஜினி செல்வதால், ‘தலைவர் 170’ படத்தை பிப்ரவரிக்குள் முடித்துவிடத் தீர்மானித்திருக்கிறார்கள்.