இந்திய மீன்பிடிப் படகுகள் சட்டவிரோதமாக இந்நாட்டு எல்லைக்குள் நுழைந்து மீன்பிடியில் ஈடுபடும் பிரச்சினை இராஜதந்திர மட்டத்தில் தீர்க்கப்பட வேண்டும் – அமைச்சர் டக்ளஸ் 

இந்திய மீன்பிடிப் படகுகள் சட்டவிரோதமாக இந்நாட்டின் கடல் எல்லைக்குள் நுழைந்து மீன்பிடியில் ஈடுபடும் பிரச்சினை இராஜதந்திர மட்டத்தில் தீர்க்கப்பட வேண்டும் எனக் கடற்றொழில் அமைச்சர் கௌரவ டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நடைபெற்ற கடற்றொழில் அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் கூட்டத்திலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் எடுக்கப்பட்ட தீர்மானமாக இந்திய மீனவப் படகுகள் தொடர்பில் நடவடிக்கை எடுக்க கடற்படையின் சம்பந்தப்பட்ட பிரிவுக்கு வழங்கப்பட்டுள்ள அறிவிப்புக் குறித்தும் இங்கு கேள்வியெழுப்பப்பட்டது. இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த கடற்படை அதிகாரிகள், வழங்கப்பட்ட வழிகாட்டல்களுக்கு அமையக் கைதுகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டிருப்பதுடன், சட்டவிரோதமாக நுழையும் இந்திய மீனவப் படகுகளின் எண்ணிக்கை சற்றுக் குறைந்திருப்பதாகவும் குறிப்பிட்டனர்.

இப்பிரச்சினைக்குத் தீர்வு காண கடற்படையினரால் மாத்திரம் முடியாது எனக் குழுவின் தலைவர் சுட்டிக்காட்டினார். தென்னிந்திய அரசியல்வாதிகளுடன் இராஜதந்திர ரீதியில் கலந்துரையாடி இப்பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் எனவும், அதற்காக இனம், பிரதேசம் மற்றும் கட்சி என்ற பேதமின்றி அந்தந்த பிரதேசங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவது அவசியம் என்றும் தெரிவித்தார்.

கிழக்குக் கடலில் மீன்பிடி வலைகளை அறுத்து மீன்களை எடுத்துச் செல்வது தொடர்பான பிரச்சனைக்கு தீர்வு காண்பது குறித்தும் குழு நீண்ட நேரம் விவாதித்தது. குழுவில் முன்னர் தெரிவிக்கப்பட்டபடி, இது தொடர்பில் பொலிஸ் விசேட அதிரடிப்படை மற்றும் இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட நடவடிக்கைகள் வெற்றியளிக்கப்பட்டமை குறித்தும் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. இது தொடர்பாகத் தொடர்ந்தும் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

நாட்டில் மீன்பிடி அதிகமாக இருக்கும் காலங்களில் இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனத்தினால் மீன்களைக் கொள்வனவு செய்து சேமித்து மக்களுக்கு சலுகை விலையில் வழங்கும் முறைமையை ஏற்படுத்துவதற்கு உறுப்பினர்கள் முன்மொழிந்தனர்.

இதேவேளை, மீனவர்களுக்கான கல்முனை வானொலி மத்திய நிலையத்தை மீள அமைக்கும் செயற்பாடுகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது. கல்முனை வானொலி நிலையத்திற்கு புதிய வானொலிகளை கொள்வனவு செய்யும் நடவடிக்கை தொடர்பில் முன்னைய குழுவில் வழங்கப்பட்ட அறிவுறுத்தல்களை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் தலைவரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. தற்போது ஒரு இயந்திரம் பொருத்தும் பணி நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் இரண்டு வானொலிப் பெட்டிகள் நன்கொடையாகப் பெறப்படவுள்ளதுடன், அடுத்த ஆண்டு ஜப்பானில் இருந்து மூன்று பெட்டிகள் பெறப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இந்தக் கூட்டத்தில் கௌரவ இராஜாங்க அமைச்சர்களான கௌரவ பியல் நிஷாந்த, கௌரவ காதர் மஸ்தான், பாராளுமன்ற உறுப்பினரன்களான கௌரவ சந்திம வீரக்கொடி, கௌரவ பைசல் காசிம், கௌரவ சார்ள்ஸ் நிர்மலநாதன், கௌரவ இசுரு தொடங்கொட, கௌரவ சிந்தக அமல் மாயாதுன்ன,கெளரவ ஜகத் சமரவிக்ரம, கௌரவ உபுல் மகேந்திர ராஜபக்ஷ, கௌரவ. டி. வீரசிங்ஹ ஆகியோர் கலந்துகொண்டனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.