ரஜினி நடிப்பில் த.செ.ஞானவேல் இயக்கி வரும் ‘தலைவர் 170’ படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடந்து வருகிறது.
அதன் படப்பிடிப்பின்போது, பக்கத்து தளத்தில் படப்பிடிப்பில் இருந்த கங்கனா ரணாவத்தைக் கூட, நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்திருந்தார் ரஜினி. இந்நிலையில் இன்று கமலின் ‘இந்தியன் 2’ படப்பிடிப்பும் அருகே மும்முரமாக நடக்க, கமலும் ரஜினியும் நேரில் சந்தித்து நட்பு பாராட்டினார்கள்.

கமல்ஹாசனின் நடிப்பில், ஷங்கர் இயக்கத்தில், உருவாகி வரும் படம் ‘இந்தியன் 2’. இதன் படப்பிடிப்பு சென்னையில் உள்ள பிரசாத் ஸ்டூடியோ அரங்கில் நடைபெற்று வருகிறது. விசாகப்பட்டினத்தில் நடந்த அதன் படப்பிடிப்பைத் தொடர்ந்து இப்போது சென்னையில் நடந்து வருகிறது. இந்நிலையில் இன்று ‘இந்தியன் 2’ படப்பிடிப்பு நடக்கும் இடத்திற்கு பக்கத்துத் தளத்தில் த.செ.ஞானவேல் இயக்கி வரும் படத்தின் படப்பிடிப்பும் நடந்தது. கமலின் படப்பிடிப்பு அருகே நடக்கிறது எனக் கேள்விப்பட்டதும், மகிழ்ந்த ரஜினி உடனே கமலின் ஸ்பாட்டிற்கு செல்லத் தயாராகியிருக்கிறார். அதை கமலிடமும் தெரிவித்தனர்.

இதையறிந்த கமல், “என் நண்பனைச் சந்திக்க நானே வருகிறேன்” எனச் சொன்னதுடன் உடனே ரஜினியின் படப்பிடிப்பு தளத்திற்கும் நேரில் சென்றார். இன்று காலை மணிக்கு இந்த இனிமையான சந்திப்பு நிகழ்ந்தது.

‘இப்படி ஒரு சர்ப்ரைஸ் சந்திப்பு பல வருடங்களுக்கு முன்னர் நடந்திருக்கிறது. ‘பாபா’, ‘பஞ்சதந்திரம்’ படங்களின் படப்பிடிப்பும் இதே இடத்தில் ஷூட்டிங் நடைபெற்றது. அப்போதும் இப்படி இருவரும் சந்தித்துக்கொண்டனர். அதன் பிறகு மீண்டும் இருவரும் ஒரே படப்பிடிப்பு தளத்தில் சந்தித்துக் கொண்டனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.