IPL 2024 Auction: ஐசிசி உலகக் கோப்பை தொடர் (ICC World Cup 2023) முடிந்துவிட்டது, அடுத்து இந்திய அணி (India National Cricket Team) தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20, ஒருநாள், டெஸ்ட் தொடர்களை விளையாட காத்திருக்கின்றன. உலகக் கோப்பை தொடருக்கு பின் வெள்ளை பந்து கிரிக்கெட்டில் இந்திய அணியில் ஏற்பட உள்ள மாற்றங்கள், சீர்திருத்தங்கள் குறித்து ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றன. அடுத்தடுத்து வரும் டி20 உலகக் கோப்பை, சாம்பின்ஸ் டிராபி, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் உள்ளிட்ட தொடர்களை எதிர்நோக்கியும் காத்திருக்கின்றனர்.
ஆனால், மறுபுறம் 2024 தொடருக்கான ஐபிஎல் மினி ஏலத்தின் மீதுதான் அனைவரது கவனமும் இருக்கிறது. இதனால் தற்போதிருந்தே வரிசையாக ஐபிஎல் சார்ந்த செய்திகள் (IPL News) வந்துகொண்டிருப்பதை நாம் பார்க்க முடியும். ஐபிஎல் அணிகள் எந்த வீரர்களை தக்கவைத்து, எந்த வீரர்களை விடுவிக்க உள்ளனர் என அனைவரும் கூர்ந்து கவனிக்கின்றனர். நேற்று (நவ. 22) கூட ராஜஸ்தான் அணியின் தேவ்தத் படிக்கல் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் ஆவேஷ் கான் ஆகியோர் பரஸ்பர அணி மாற்றும் செய்யப்பட்டனர்.
அதாவது, தேவ்தத் படிக்கல் வரும் தொடரில் லக்னோ அணிக்கும், ஆவேஷ் கான் ராஜஸ்தான் அணிக்கும் விளையாட உள்ளனர். ஆவேஷ் கான் லக்னோ அணியால் ரூ.10 கோடிக்கு 2022ஆம் ஆண்டு மெகா ஏலத்தில் எடுக்கப்பட்டார், தேவ்தத் படிக்கல் அதே மெகா ஏலத்தில் ரூ.7.75 கோடிக்கு எடுக்கப்பட்டார். இது ஒருபுறம் இருக்க, லக்னோ அணியின் ஆலோசகர் கௌதம் கம்பீர் தனது மீண்டும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் நிர்வாகியாக சென்றுள்ளார், அவர் தலைமையில் 2012, 2014 ஆகிய இரண்டு ஐபிஎல் தொடர்களில் கேகேஆர் அணி கோப்பையை வென்றது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையல், ஐந்து முறை சாம்பியனும், தோனியின் (MS Dhoni) கேப்டன்ஸியில் ஜொலிக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் (Chennai Super Kings) மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்து வருகிறது. ராயுடு, ஸ்டோக்ஸ், பகத் வர்மா, அஜய் மண்டல், ஷேக் ரஷீத், சிமர்ஜித் சிங், சிசாண்டா மகாலா ஆகியோரில் நால்வரை வெளியிட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அந்த வகையில், ஏலத்தில் யாரை எடுப்பார்கள் என்ற கேள்வியும் உள்ளது.
ராயுடுவுக்கு பதில் பாண்டே
ராயுடு கடந்த போட்டியுடன் ஓய்வு பெற்றார் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. எனவே, அவரின் இடத்தையும் அனுபவத்தையும் எந்த இந்திய வீரரை கொண்டு சிஎஸ்கே நிரப்ப இருக்கிறது என்பதுதான் தெரியவில்லை எனலாம். இதில் பலரின் பெயர்கள் இடம்பெற்றாலும் அதில் முக்கியமான பெயர், மனீஷ் பாண்டே (Manish Pandey). தற்போது அவர் டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் இருக்கும் நிலையில், இந்த முறை அவர் விடுவிக்கப்பட அதிக வாய்ப்புள்ளது. கடந்த தொடரில் அவர் பெரிதாக சோபிக்காததும் அந்த அணியின் வீழ்ச்சிக்கு முக்கிய காரணம். ஆனால், சிஎஸ்கே எப்போதும் கைவிடப்பட்ட வீரர்களுக்கு கோப்பையை பரிசளிக்கும் அணி என்பதால் இம்முறை அந்த ராசி மனீஷ் பாண்டேவுக்கு செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பென் ஸ்டோக்ஸ் மாற்று – ஓமர்ஸாய்
இங்கிலாந்து டெஸ்ட் அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸை (Ben Stokes) சிஎஸ்கே அணி 16.25 கோடி ரூபாய்க்கு எடுத்தது. ஆனால், அவர் காயத்தால் தொடர்ந்து அவதிப்பட்டு வருகிறார், எனவே அவரை விடுவிக்க சிஎஸ்கே நினைக்கலாம். கடந்த சீசனில் 2 போட்டிகளில் 15 ரன்கள் மட்டுமே அவரால் அடிக்க முடிந்தது. எனவே, அவருக்கான மாற்று வீரராக ஒரு வெளிநாட்டு ஆல்ரவுண்டரை சிஎஸ்கே எடுக்க நினைக்கும். அந்த வகையில் நடந்துமுடிந்த உலகக் கோப்பையில் சிறப்பாக செயல்பட்ட ஆப்கன் வீர்ர ஆஸ்மத்துல்லா ஓமர்ஸாயை (Azmadullah Omarzai) சிஎஸ்கே அணுகலாம். அவர் இந்த உலகக் கோப்பையில் 9 போட்டிகளில் 353 ரன்களை அடித்து 7 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். குறுகிய ஓவர் போட்டிகளில் நல்ல தாக்கம் செலுத்த கூடிய வீரராக அவர் பார்க்கப்படுகிறார். ஒருவேளை ஸ்டோக்ஸிற்கு பதில் கம்மின்ஸை கூட சிஎஸ்கே அணி ஏலத்தில் அணுகலாம்.
சிசாண்டா மகலாவுக்கு மாற்று ஜெரால்ட் கோட்ஸி
சிசண்ட மகலா கடந்தாண்டு கைல் ஜேமீசனுக்கு காயம் ஏற்பட்டதன் காரணமாக சிஎஸ்கே அணியில் சேர்க்கப்பட்டார். 2 போட்டிகளில் 1 விக்கெட்டை மட்டுமே எடுத்த அவரும் காயத்தால் சிரமப்பட்டார். இதனால், இம்முறை அவரை விடுவித்து வேறொரு வேகப்பந்துவீச்சாளரை எடுக்க சிஎஸ்கே அணி யோசிக்கலாம். ஏற்கெனவே, தென்னாப்பிரிக்க வீரர் பிரிட்டோரியஸ் அணியில் உள்ளதால் அவரின் மற்றொரு சக நாட்டு வீரரும், நடந்துமுடிந்த உலகக் கோப்பையில் தென்னாப்பிரிக்காவுக்கு பக்கபலமாக இருந்த ஜெராலட் கோட்ஸியை சிஎஸ்கே அணுகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க | தோனி, மெயீன் அலி, பென் ஸ்டோக்ஸ் என சிஸ்கேவுக்கு விடைகொடுக்க தயாராகும் மூத்த வீரர்கள்