திருச்சியைத் தலைமையிடமாகக் கொண்ட பிரணவ் ஜூவல்லர்ஸ், மிக குறுகிய காலத்திலேயே மதுரை, சென்னை, கும்பகோணம், கோவை, ஈரோடு உள்ளிட்ட 11 மாவட்டங்களுக்கு தன் கிளைகளைப் பரப்பியது. பழைய தங்க நகைகளைத் தங்களிடம் கொடுத்தால், ஓராண்டு கழித்து, எந்தவிதச் செய்கூலி, சேதாரமும் இல்லாமல், பழைய நகையின் எடைக்குச் சமமாகப் புதிய நகைகளை வாங்கிச் செல்லலாம், பவுனுக்கு 4,000 ரூபாய் வரை சேமிக்கலாம் என பிரகாஷ் ராஜ், ராதிகா சரத்குமார் ஆகிய சினிமா பிரபலங்களை வைத்து, இந்த நிறுவனம் விளம்பரம் செய்தது. பிரணவ் ஜூவல்லர்ஸின் கவர்ச்சிகர திட்டங்களை நம்பிய பொதுமக்கள் ஏராளமானோர், தங்க நகைத் திட்டம் உள்ளிட்டவற்றில் முதலீடு செய்தனர். இந்த நிலையில், நகைகளைத் திரும்பப் பெற வாடிக்கையாளர்கள் முயன்றபோது, ஒன்றன் பின் ஒன்றாக இந்த நிறுவனத்தின் கிளைகள் மூடப்பட்டன.

மதுரை, திருச்சி என பல்வேறு இடங்களிலும் ஏராளமானோர் பிரணவ் ஜூவல்லர்ஸ்மீது மோசடி புகார் அளித்திருக்கின்றனர். இதையடுத்து, அதிக வட்டி தருவதாகக் கூறி தமிழகத்தில் 11-க்கும் மேற்பட்ட கிளைகளை உருவாக்கி, பெருமளவிலான மக்களிடம் மோசடி செய்ததாக, பொருளாதாரக் குற்றப்பிரிவு வழக்கு பதிவுசெய்தது. அதையடுத்து, தலைமறைவானதாகக் கருதப்பட்ட பிரணவ் ஜூவல்லர்ஸின் உரிமையாளர் மதன், அவரின் மனைவி கிருத்திகா ஆகியோருக்கு லுக்-அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது.

இந்த நிலையில்தான், பண மோசடியில் ஈடுபட்டதற்காக பிரணவ் ஜூவல்லர்ஸ் நிறுவனக் கிளைகளில் கடந்த 20-ம் தேதி அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. சட்ட விரோத பணப் பரிமாற்ற தடைச் சட்டப்பிரிவின் (PMLA) கீழ் நடைபெற்ற இந்தச் சோதனையில், பல முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், கணக்கில் வராத சுமார் 23.7 லட்சம் ரூபாய் பணம், 11.6 கிலோ தங்கம் ஆகியவைப் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், அமலாக்கத்துறை தெரிவித்தது.
இது தொடர்பாக அமலாக்கத்துறை நேற்று (நவம்பர் 22) அறிக்கை வெளியிட்டிருந்தது. அதில், `பிரணவ் ஜூவல்லர்ஸ் மற்றும் அதனுடன் தொடர்புடைய சில நபர்கள் தங்க நகைத் திட்டம் என்னும் போர்வையில், பொதுமக்களின் நிதியை மோசடி நிறுவனங்களுக்குத் திருப்பிவிட்டு, 100 கோடி ரூபாய் அளவுக்கு பணத்தை ஏமாற்றியிருப்பது, விசாரணையில் தெரியவந்திருக்கிறது.’ எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
மேலும், பிரணவ் ஜூவல்லர்ஸ் நிறுவனத்துடன் தொடர்புடைய நபர்கள் சிலர், அந்த நிறுவனத்துக்கு கறுப்புப் பணத்தை வெள்ளையாக்க உதவியதும் தெரியவந்திருப்பதாக, அமலாக்கத்துறை வட்டாரத்தில் கூறப்படுகிறது.

இதைத் தொடர்ந்தே, தற்போது 100 கோடி ரூபாய் முறைகேடு தொடர்பாக நடிகர் பிரகாஷ் ராஜுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியிருக்கிறது. பிரகாஷ் ராஜ், பிரணவ் ஜூவல்லர்ஸ் நிறுவனத்தின் விளம்பரத் தூதராக இருந்ததாகவும், நிறுவனத்தின் பங்குகளில் அவருக்குத் தொடர்பு இருப்பதாகவும், அமலாக்கத்துறை சந்தேகிக்கிறது. அதன் காரணமாகேவ பிரகாஷ் ராஜுக்குத் தற்போது சம்மன் அனுப்பப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.