Suriya: `நடிகர் சூர்யாவுக்கு விபத்து' – கங்குவா படப்பிடிப்பில் நடந்தது என்ன?

‘கங்குவா’ படப்பிடிப்பில் நடிகர் சூர்யாவுக்கு விபத்து ஏற்பட்டிருக்கிறது. படப்பிடிப்பில் என்ன நடந்தது? சூர்யாவிற்கு என்ன ஆனது? இப்போது எப்படி இருக்கிறார் என படக்குழுவில் விசாரித்ததில் கிடைத்த தகவல்கள் இதோ!

கங்குவா டீம்

‘சிறுத்தை’ சிவா இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் ‘கங்குவா’ படப்பிடிப்பு இப்போது சென்னையில் பூந்தமல்லியை அடுத்த செம்பரம்பாக்கத்தில் உள்ள EVP திரைப்பட நகரில் நடந்து வருகிறது. தாய்லாந்து படப்பிடிப்பைத் தொடர்ந்து ‘கங்குவா’வின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. நேற்று நடந்த படப்பிடிப்பில் சூர்யாவின் காட்சிகள் படமாக்கப்பட்டன. பீரியட் போர்ஷனுக்கான அரங்கங்கள் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு நடந்து வருகிறது. அதில் பத்தடி உயரத்தில் ரோப்பில் தொடங்கியபடி நடித்துக் கொண்டிருந்தார் சூர்யா. அவருக்கு எதிரே இன்னொரு ரோப்பில் கேமராவும் பொருத்தப்பட்டு படமாக்கிக் கொண்டிருந்தனர். நைட் ஷூட் அது.

ரோப்பில் சூர்யா தொங்கியபடி பரபரப்பாக சண்டைக்காட்சிகள் படமாக்கப்பட்டுக் கொண்டு இருந்தன. அதை பல கிலோமீட்டர் வேகத்தில் சீறிப்பாய்ந்து காட்சிகளை படமாக்கிக் கொண்டிருந்தது அந்த ரோப் கேமரா. ஒரு கயிற்றில் சூர்யாவும், இன்னொரு கயிற்றில் அந்த கேமராவுமாக படப்பிடிப்பு நடந்துகொண்டிருந்தது. அப்போது, கேமரா பொருத்தப்பட்டிருந்த ரோப் திடீரென அறுந்து அதே வேகத்துடன் சூர்யாவின் முகத்திற்கு நேராக மோதும் நிலையில் எதிரே வந்தது. அந்த அசம்பாவிதத்தை உணர்ந்து கொண்ட சூர்யா, சற்றே முகத்தைத் திருப்பிக் கொண்டார். இதில் சூர்யாவின் தோள்பட்டையில் கேமரா மோதியது.

சூர்யா

அதிக எடை கொண்ட கேமரா மோதிய வேகத்தில் சமயோசிதமாக சூர்யா கீழே விழுந்திருக்கிறார். இந்த சம்பவம் நடந்த போது நள்ளிரவு ஒரு மணி இருக்கும் என்கிறார்கள். உடனே பதறிய படக்குழு மருத்துவர்களை வரவழைத்து விட்டது. சூர்யாவை பரிசோதித்த மருத்துவர்கள், அவரிடம் இரண்டு வாரங்கள் வீட்டில் ஓய்வெடுக்க அறிவுறுத்தி உள்ளனர். இப்போது நலமுடன் வீட்டில் சிறிய ஓய்வு எடுத்து வருகிறார் சூர்யா. ‘கங்குவா’வில் அவரது போர்ஷன் நேற்றோடு நிறைவு பெற்ற நிலையில், ‘இது ஒரு கண்திருஷ்டி’யாக படக்குழுவிற்கு ஆகிவிட்டது என்கிறது படக்குழு!

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.