டேராடூன்: உத்தரகாசி சுரங்கத்துக்குள் சிக்கியுள்ள 41 தொழிலாளர்களை மீட்கும் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இயந்திரத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக வியாழக்கிழமை இரவு துளையிடும் பணிகள் நிறுத்தப்பட்டதால் மீட்பு பணிகளில் மீண்டும் சுணக்கம் ஏற்பட்டுள்ளது.
உத்தராகண்ட் மாநிலம் சார்தாம் நெடுஞ்சாலை திட்டத்தின் ஒரு பகுதியாக சில்க்யாரா-பர்கோட் இடையே 4.5 கி.மீ. தொலைவுக்கு சுரங்கப்பாதை அமைக்கப்பட்டு வருகிறது. கடந்த 12-ம் தேதி இந்த சுரங்கப் பாதையில் மண் சரிந்தது. இதன்காரணமாக சுரங்கப் பாதைக்குள் 41 தொழிலாளர்கள் சிக்கி உள்ளனர். அவர்களை மீட்கும் பணிகள் கடந்த 12 நாட்களாக பல்வேறு சிக்கல்களுக்கு நடுவில் மிகவும் தீவிரமாக நடந்து வருகிறது. சுரங்கத்துக்குள் சிக்கியிருக்கும் தொழிலாளர்களைத் தொட்டு விடும் தூரத்தில் மீட்பு குழுவினர் 46.8 மீட்டர் தூரம் துளையிட்டிருந்த நேரத்தில் ஆஜர் துளையிடும் இயந்திரத்தில் பழுது ஏற்பட்டது. இதனால் வியாழக்கிழமை இரவு மீட்பு பணிகள் நிறுத்தப்பட்டன.
இதுகுறித்து தெரிவித்த உத்தராகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி, அமெரிக்க ஆஜர் இயந்திரம் நவ.23ம் தேதி (வியாழக்கிழமை) பழுதானதால் பின்னிரவில் துளையிடும் பணிகள் நிறுத்தப்பட்டன என்றார். மேலும், விபத்து ஏற்பட்ட இடத்தில் இரவு முழுவதும் முதல்வர் தங்கியிருந்தார். இதனிடையே சுரங்கத்துக்குள் சிக்கியிருக்கும் தொழிலாளர்களுடன் தொடர்பு கொள்வதற்காக மினி ட்ரோன்கள் மற்றும் ரோபோக்களை பயன்படுத்த டிஆர்டிஓ முயற்சி செய்தது.
இதனிடையே, துளையிடும் பணிகளுக்கு மத்தியில் ஆஜர் இயந்திரம் வியாழக்கிழமை பழுதடைந்ததால் மீட்பு பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன; பழுது சரிசெய்த பின்னர் பணிகள் வெள்ளிக்கிழமை மீண்டும் தொடரும் என்று சர்வதேச சுரங்க நிபுணர் அர்னால்ட் டிக்ஸ் தெரிவித்தார். இதனால், சில்க்யாரா சுரங்கத்துக்குள் சிக்கியிருக்கும் தொழிலாளர்களை மீட்கும் பணி வெள்ளிக்கிழமை 13-ம் நாளை எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
41 தொழிலாளர்களும் மீட்கப்பட்ட பின்னர் அவர்களுக்கு உடனடியாக மருத்துவ உதவிகள் வழங்க அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன. 41 ஆம்புலன்ஸ்கள் மற்றும் மருத்துவர்கள் குழு தயார் நிலையில் உள்ளது. தொழிலாளர்களுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவமனையும் தயார் நிலையில் உள்ளது என அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.
உத்தராகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி, சுரங்கப் பாதையில் சிக்கியுள்ள தொழிலாளர்களான கப்பர் சிங் நேகி மற்றும் சபா அகமது ஆகியோரிடம் பேசினார். அவர்களின் நலம் குறித்து விசாரித்தார். ரிஷிகேஷ் எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகம் இது குறித்து கூறும்போது, “தேவைப்பட்டால் மீட்கப்பட்டவர்களை ரிஷிகேஷ் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டுவரும் திட்டம் உள்ளது. உத்தரகாசியில் உள்ள மாவட்ட மருத்துவமனையில் முதலுதவி அளிக்க ஏற்பாடு செய்துள்ளது” என தெரிவித்திருந்தது.
சுரங்கப் பாதையில் சிக்கியுள்ள தொழிலாளர்களின் பாதுகாப்புக்காக பிரியங்கா காந்தி பிரார்த்தனை செய்தார். இது குறித்து தனது எக்ஸ் தளத்தில், “உத்தர்காஷியின் சில்க்யாராவில் உள்ள சுரங்கப் பாதையில் 41 தொழிலாளர்கள் 12 நாட்களாக சிக்கியுள்ளனர். அவர்களைக் காப்பாற்றும் நடவடிக்கை வெற்றியை நோக்கி நகர்கிறது, அவர்கள் அனைவரும் விரைவில் பத்திரமாக வெளியே வருவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.
உழைக்கும் சகோதரர்கள் அனைவரும் விரைவில் வெளியே வந்து நலமுடன் வீடுகளை சென்றடைய இறைவனை பிரார்த்திக்கிறோம். ஒட்டுமொத்த தேசத்தின் பிரார்த்தனைகள் அவர்களுடன் உள்ளன. தேசத்துக்காக இரவு பகலாக தங்கள் உயிரைப் பணயம் வைத்து சேவை செய்யும் அவர்களுக்கு அரசாங்கம் உரிய இழப்பீடு மற்றும் உதவிகளை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்திருந்தார்.