‘சிந்துபாத்’ படத்தில் தான் நடிக்க வந்தார் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா. அப்போது எட்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த நேரம். டைரக்டர் அருண் கேட்டுக் கொண்டதால் மகனை நடிக்க அனுமதித்தார். அந்தப் படத்திற்குப் பிறகு படிப்பில் கவனம் செலுத்தினார் சூர்யா.
நடுவில் நடனம், சண்டைப் பயிற்சி என விடுமுறை தினங்களில் பயிற்சி எடுத்துக் கொண்டிருந்தார். இதில் சேதுபதி எந்த விதத்திலும் தலையிடவில்லை. மகன் எந்தத் துறையில் ஈடுபட்டாலும் அதைச் சரிவர செய்ய வேண்டும் என்பதில் மட்டும் குறியாக இருந்தார். படிப்பிலும் சுமாரான மாணவனுக்கு மேலாக இருந்ததால் மகன் இம்மாதிரி நடிப்புப் பயிற்சிகளில் ஈடுபடுவதைக் கண்டுகொள்ளவில்லை. இப்போது பைட் மாஸ்டர் அனல் அரசு ஒரு கதையைக் கொண்டு வந்து தன் மகனுக்காகச் சொன்னதும் அவருக்கு ஆச்சர்யம் தாங்க முடியவில்லை.

கதையில் சூர்யாவுக்கு இருந்த முக்கியத்துவமும், வாய்ப்பும் அவருக்குப் பிடித்து விட்டது தவிர இது சூர்யாவுக்கு பிடித்திருந்தால் தனக்கு ஒன்றும் பிரச்னை இல்லை என்றும் சொல்லிவிட்டார். அப்புறம்தான் இந்தக் கதை சூர்யாவிடம் சொல்லப்பட்டிருக்கிறது. அப்பாவுக்குப் பிடித்திருந்தால் தனக்கு சம்மதம்தான் என்று சொல்லிவிட்டார். அவரது படிப்பை பாதிக்காதவாறு விடுமுறை நாட்களில் படமாக்கத் திட்டமிட்டிருக்கிறார்கள். மூன்று மாதங்களில் படப்பிடிப்பை முடிக்கத் திட்டமிட்டிருக்கிறார்கள்.
விஜய் சேதுபதி மகனை அளவுக்கு அதிகமாக முன்னிறுத்த வேண்டாம் எனவும் அடக்கி வாசிக்கும்படியாகவும் கேட்டுக் கொண்டாராம். இதனால் பெரிய ஆர்பாட்டமில்லாமல் சூர்யாவின் அறிமுகம் நடந்திருக்கிறது. சூர்யா விஜய்சேதுபதி என்ற பெயரிலேயே நடிக்க முடிவு செய்திருக்கிறார். இது இந்த வயதிற்கான கேரக்டர் என்பதாலேயே சூர்யா தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். த்ரில்லர் வகையில் சேரும் என்கிறார்கள். ஆர். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார்.

அனேகமாக ஏப்ரல் மாதம் வெளியாகலாம் என்று தெரிகிறது. படத்தின் ஆக்கத்தில் தலையிடுவதில்லை என முடிவு செய்திருக்கிறார் விஜய் சேதுபதி. இந்தப் படத்திற்குப் பிறகு தன் மகன் சூர்யா தொடர்ந்து நடிப்பது பற்றி அவர் முடிவெடுப்பார் என்கிறார்கள். இருந்தாலும், சேதுபதியின் ஆஸ்தான டைரக்டர்கள் தங்கள் கதைகளில் சூர்யாவிற்கான இடம் பற்றி இப்போதே யோசிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். சீனு ராமசாமி கால்ஷீட் கேட்டு விட்டதாகவே சொல்கிறார்கள்.