சேலம், சூரமங்கலம் பகுதியிலுள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் ம.தி.மு.க-வின் செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ம.தி.மு.க தலைமைக் கழகச் செயலாளர் துரை வைகோ கலந்துகொண்டார்.
கூட்டத்தைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய துரை வைகோ, “ஆளுநர் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை கிடப்பில் வைத்ததற்கு, உச்ச நீதிமன்றம் அவரது தலையில் குட்டு வைத்ததுபோல், ஒரு தீர்ப்பை வழங்கியிருக்கிறது. நமது ஆளுநரைப் பொறுத்தவரையில் பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ்., பஜ்ரங்தள், வி.ஹெச்.பி போன்ற இயக்கங்களின் கொள்கை பரப்புச் செயலாளராகச் செயல்படுகிறார். சமீபத்தில் மறைந்த சங்கரய்யா ஒரு அரசியல்வாதி மட்டுமல்ல… சுதந்திரப் போராட்ட வீரரும்கூட. இந்த நாட்டுக்காகவும் மக்களுக்காகவும் போராடியிருக்கிறார். ஐந்து வருடங்கள் சிறையில் இருந்திருக்கிறார், அவரை கௌரவிக்க மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் மூலமாக டாக்டர் பட்டம் வழங்க தமிழக அரசு முன்வந்தபோது, இறுதிவரையில் அனுமதிக்கவில்லை. தேசப்பற்று பற்றி பேசுவதற்கு அவருக்கு அருகதை இல்லை. தமிழக ஆளுநராக செயல்படக்கூடய தகுதி, ஆர்.என்.ரவி அவர்களுக்குக் கிடையாது.

பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களும், கோயில் சொத்துகளை அபகரித்தவர்களும், நிதி முறைகேடுகளில் ஈடுபட்டவர்களும் சமீபத்தில் பா.ஜ.க-வில் சேர்ந்திருக்கின்றனர். அண்ணாமலை தலைவராகப் பொறுப்பேற்ற பின்னர், காவல்துறையால் தேடப்படும் குண்டர்கள் அதிக அளவில் பா.ஜ.க-வில் சேர்ந்திருக்கின்றனர். அண்ணாமலை காவல்துறை அதிகாரியாக இருந்தபோது, நானே ரசித்திருக்கிறேன். ஆனால், தற்போது குண்டர்களை வைத்துக்கொண்டு, திருடன் போலீஸ் விளையாட்டு விளையாடிக் கொண்டிருக்கிறார். பா.ஜ.க ஆட்சியில் இல்லாத சில மாநிலங்களில் வருமான வரித்துறை, அமலாக்கத்துறை போன்ற பல்வேறு ஏஜென்சிகள் மூலமாக நெருக்கடி கொடுத்து வருகிறார்கள். அமலாக்கத்துறை என்பது சக்திவாய்ந்த துறை. ஆனால், சாதாரணப் பிரச்னைகளுக்குக்கூட அமலாக்கத்துறையைப் பயன்படுத்தும் நிலை உள்ளது. வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்காகப் பழிவாங்கும் செயலையும், நெருக்கடி கொடுக்கும் செயலையும் செய்து வருகிறார்கள் என்பது, மக்கள் மத்தியில் பேசுபொருளாக மாறியிருக்கிறது.
அரசு ஊழியர்களின் போராட்டத்தில் சில நியாயமான கோரிக்கைகள் இருக்கின்றன. முதலமைச்சரும் தமிழக அரசும் அது குறித்து பரிசீலிப்போம் எனக் கூறியிருக்கிறார்கள். நாடாளுமன்றத் தேர்தலைப் பொறுத்தவரையில், புதுச்சேரியையும் சேர்த்து 40 தொகுதிகளிலும் தி.மு.க கூட்டணி வெல்லும். பூரண மதுவிலக்கு என்பதுதான் ம.தி.மு.க-வின் நிலைப்பாடு. படிப்படியாக மதுக்கடைகளைக் குறைப்போம் என அரசு கூறியிருக்கிறது. அதைச் செயல்பாட்டுக்குக் கொண்டுவர வேண்டும். ஆளுநரை மாற்ற வேண்டும் என்று, ஏற்கெனவே 50 லட்சம் கையெழுத்துகளைப் பெற்று, குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்திருக்கிறோம்.

மதத்தை வைத்தோ, சாதியை வைத்தோ பேசும் அரசியல்வாதிகளை, அரசியல் கட்சிகளை மக்கள் நிராகரிக்க வேண்டும். மக்களின் அடிப்படைத் தேவையான கல்வி, வேலை வாய்ப்பு, மருத்துவம் போன்றவற்றைப் பேசும் அரசியல்வாதிகளை, அரசியல் கட்சிகளை மக்கள் கண்டறிய வேண்டும். மாற்றம் மக்களிடமிருந்து தொடங்க வேண்டும். மக்கள் எப்போது புறக்கணிக்கிறார்களோ, அப்போது அரசியல்வாதிகளும் அரசியல் இயக்கங்களும் மாறும் நிலை ஏற்படும். மக்கள் எப்போது மாறுகிறார்களோ, அப்போதுதான் தமிழகத்தில் மறுமலர்ச்சி உண்டாகும்” என்றார்.