நெதர்லாந்து தேர்தல்: வலதுசாரி தலைவர் கீர்த் வில்டர்ஸ் சர்ப்ரைஸ் வெற்றி.. பிரதமர் ஆக வாய்ப்பு

தி ஹேக்:

நெதர்லாந்தில் நேற்று முன்தினம் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இதில் திடீர் திருப்பமாக, தீவிர வலதுசாரி கொள்கையுடைய கீர்த் வில்டர்ஸ் (வயது 60) தலைமையிலான சுதந்திரக் கட்சி (பிவிவி) அதிக தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. 150 இடங்களைக் கொண்ட நெதர்லாந்து நாடாளுமன்றத்தில் பிவிவி கட்சி 37 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

கடந்த தேர்தலில் வெறும் 17 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்ற பிவிவி கட்சி, இந்த தேர்தலில் இரண்டு மடங்கிற்கும் அதிகமான இடங்களை பிடித்ததால் தொண்டர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

தற்போதைய பிரதமர் மார்க் ரூட் அங்கம் வகிக்கும் விவிடி கட்சிக்கு வெறும் 24 இடங்களே கிடைத்துள்ளன. ஜிஎல் மற்றும் தொழிலாளர் கட்சி கூட்டணி 25 இடங்களை கைப்பற்றி உள்ளது.

எனவே, கீர்த் வில்டர்ஸ் தலைமையில் அடுத்த அரசு அமைவது உறுதியாகியுள்ளது. ஆனால் பிரதமர் ஆகும் அவரது கனவு நிறைவேற, பெரும்பான்மைக்கு தேவையான மேஜிக் எண் 76 ஐ கடக்க வேண்டும். அதற்காக அவர் வலுவான கூட்டணியை அமைக்கவேண்டியிருக்கிறது. புதிய அரசை அமைப்பதற்காக ஒருமித்த கருத்துடைய கட்சிகளின் ஆதரவை கீர்த் வில்டர்ஸ் கோரியுள்ளார்.

தீவிர வலதுசாரி நிலைப்பாட்டை கொண்ட கீர்த் வில்டர்ஸ், இஸ்லாம் மதத்துக்கு எதிராக கடுமையான கருத்துகளை வெளிப்படுத்தி வருபவர். குடியேற்றத்தைக் கட்டுப்படுத்துவதில் தனது கவனம் இருக்கும் என ஏற்கனவே கூறியிருக்கிறார். பிரசாரத்தின்போது, அவர் தனது இஸ்லாமிய எதிர்ப்பு குறித்து கடுமையான வார்த்தைகள் எதையும் பயன்படுத்தவில்லை. மாறாக, மக்களின் வாழ்க்கைச் செலவு மற்றும் குடியேற்றம் போன்ற பிரச்சினைகள் குறித்து பேசியது குறிப்பிடத்தக்கது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.