Doctor Vikatan: என் நண்பனுக்கு வயது 49. கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவனுக்கு ஹெல்த் செக்கப் செய்தபோது டிரெட்மில் டெஸ்ட்டும் செய்திருக்கிறார்கள். அதில் நார்மல் என்றே வந்தது. ஆனால் அடுத்த சில மாதங்களில் அவனுக்கு ஹார்ட் அட்டாக் அறிகுறி வந்து மருத்துவரிடம் சிகிச்சை பெற்றான். டிரெட்மில் டெஸ்ட்டில் நார்மல் என்று வந்த பிறகு இப்படி வருமா… ஹார்ட் அட்டாக் வந்தவர்கள் டிரெட்மில் டெஸ்ட் செய்யவே கூடாது என்பது உண்மையா?
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இதயநோய் மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம்

ஒருவருக்கு நெஞ்சுவலியோ, மூச்சுவிடுவதில் சிரமமோ, களைப்போ இருப்பதாக உணரும்பட்சத்தில், இதயநோய் மருத்துவர், அந்த நபரை டிரெட்மில் டெஸ்ட் செய்து பார்க்க அறிவுறுத்துவார்.
டிரெட்மில் டெஸ்ட்டில் சம்பந்தப்பட்ட நபரை டிரெட்மில்லில் குறிப்பிட்ட வேகத்தில், குறிப்பிட்ட நிமிடங்களுக்கு நடக்கச் சொல்வார்கள். பிறகு அந்த வேகம் அதிகரிக்கப்படும். டிரெட்மில்லின் பொசிஷனும் மாற்றப்பட்டு அதில் நடக்கச் சொல்வார்கள். ஹார்ட் அட்டாக் வந்த பிறகு அவர்களுக்கு ‘சிம்ப்டம் லிமிடெட் டிரெட்மில் டெஸ்ட்’ என்ற ஒன்றைச் செய்யச் சொல்வோம்.

இவை தவிர, ஒரு நபர் திடீரென தீவிரமான உடலியக்க வேலையில் ஈடுபடப் போகிறார் என்ற நிலையில், (உதாரணத்துக்கு டிரெக்கிங் போகப் போகிறார் என வைத்துக்கொள்வோம்) அவருக்கு ஏதேனும் ரிஸ்க் இருக்கும் என்ற சந்தேகப்பட்டால், டிரெட் மில் டெஸ்ட் செய்து பார்க்கச் சொல்வோம்.
சில நேரங்களில் மூச்சுவிடுதலில் மாற்றம் ஏற்பட்டதையே உணராமல் இருப்பார்கள் சிலர். அது வயதுக்கேற்ப இருக்கிறதா என்பதைத் தெரிந்துகொள்ளவும் டிரெட்மில் டெஸ்ட் செய்ய வேண்டி வரலாம். டிரெட்மில் டெஸ்ட் உடன், இசிஜி பரிசோதனையும் சேர்த்துச் செய்யும்போது இன்னும் துல்லியமாக பிரச்னைகளைத் தெரிந்துகொள்ள முடியும்.

டிரெட்மில் டெஸ்ட்டில் நார்மல் என வந்துவிட்டதால், அந்த நபருக்கு இதயம் தொடர்பான பிரச்னைகளே இல்லை என எடுத்துக்கொள்ள முடியாது. டிரெட்மில் டெஸ்ட் என்பது சில நேரங்களில் மட்டும்தான் அசாதாரணமாக காட்டும். இதயத்துக்குச் செல்லும் ரத்தக்குழாய்களில் ஓரளவுக்கு மேல் அடைப்பு இருக்கும் பட்சத்தில் டிரெட்மில் டெஸ்ட் ரிசல்ட் அசாதாரணம் என்று ரிசல்ட்டில் தெரியவரலாம். அதே நேரம் நார்மல் என்ற ரிசல்ட்டை வைத்து ஒருவரின் இதயம் 100 சதவிகிதம் ஆரோக்கியமாக இருக்கிறது என்று சொல்லவே முடியாது.
இதயநோயாளிகள் அதற்கான ஸ்டென்ட் பொருத்தும் சிகிச்சையையோ, அறுவை சிகிச்சையையோ மேற்கொண்ட பிறகு டிரெட்மில் டெஸ்ட் செய்யவே கூடாது என்றொரு கருத்து பலரிடம் இருக்கிறது. அதுவும் தவறு. மாரடைப்புக்குப் பிறகும் சில காரணங்களுக்காக டிரெட்மில் டெஸ்ட் செய்யச் சொல்லி மருத்துவர் அறிவுறுத்துவார்.
எனவே இதய ஆரோக்கியத்தில் இப்படி அடுத்தவர் சொல்கிற தகவல்களைக் கேட்டு அலட்சியமாக இருக்காதீர்கள். சந்தேகங்கள் இருந்தால் மருத்துவரிடம் தெளிவு பெறுங்கள்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.