திருவனந்தபுரம் கேரளாவின் திருப்புனித்துரா பகுதியைச் சேர்ந்த சுமை துாக்கும் தொழிலாளி ஒருவர், புலம் பெயர்ந்த தொழிலாளிகளுக்கு எதிரான மனுவை கேரள உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:
மாநிலங்களுக்கு இடையிலான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சட்டத்தின் கீழ் எந்த பதிவும் மேற்கொள்ளாமல், ஏராளமான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் இங்குள்ள வேளாண் நகர்ப்புற மொத்த சந்தையில் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
இவர்கள் தங்கி, உணவு சமைத்து வாழ்வதற்கு தற்காலிகமாக கூடுதல் குடியிருப்புகளை கட்டியுள்ளனர்.
ஒரு சிலர் போதைப் பொருள் பழக்கத்திலும் ஈடுபடுகின்றனர். இது, சமூக விரோத செயலுக்கு வழிவகுக்கும்.
முறையான நடவடிக்கை எடுக்காவிட்டால், பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட குற்ற சம்பவங்கள் அதிகரிக்கக்கூடும். எனவே, புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சேர்க்கையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் வேளாண் நகர்ப்புற மொத்த சந்தையின் தலைவர் ஆஜராகி விளக்கமளித்தார். இரு தரப்பு வாதங்களுக்கு பின் உத்தரவில் கூறியுள்ளதாவது:
மலையாளிகள் தங்களின் தற்பெருமை காரணமாக வேலை செய்ய விரும்பவில்லை. இதனால், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் அதிகளவில் இங்கு வேலை செய்து வருகின்றனர்.
புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் இங்குள்ள பகுதியை ஏதேனும் ஆக்கிரமித்து உள்ளனரா? இங்கிருந்து அகற்றினால் அவர்கள் எங்கே செல்வர்? இது குறித்து நடத்தப்பட்ட விசாரணை அறிக்கையை மூன்று வாரங்களுக்குள் மாநில அரசு சமர்ப்பிக்க வேண்டும்.
இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement