ஹேக்: ‘நெதர்லாந்தின் டொனால்டு டிரம்ப் என வர்ணிக்கப்படுபவரும், முஸ்லிம்களுக்கு எதிரான கொள்கை உடையவருமான, கீர்ட் வில்டர்சின் சுதந்திர கட்சி, அந்த நாட்டின் பொது தேர்தலில் வெற்றி பெற்றுள்ளது.
ஐரோப்பிய நாடான நெதர்லாந்து பார்லிமென்ட் தேர்தல் சமீபத்தில் நடந்தது. இதில், வலதுசாரி ஆதரவாளரான கீர்ட் வில்டர்சின் சுதந்திர கட்சி வெற்றி பெற அதிக வாய்ப்புள்ளதாக ஓட்டுப்பதிவுக்கு பிறகான கருத்துக் கணிப்பு முடிவுகள் தெரிவித்தன.
ஓட்டுகள் எண்ணப்பட்டு முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. மொத்தமுள்ள 150 இடங்களில், வில்டர்சின் சுதந்திர கட்சி 35 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இதன் வாயிலாக, அக்கட்சி ஆட்சி அமைக்க அதிக வாய்ப்பு உருவாகி உள்ளது. மற்ற கட்சிகளுடன் கூட்டணி சேர்ந்து ஆட்சி அமைக்க உள்ளதாக வில்டர்ஸ் தெரிவித்தார்.
நெதர்லாந்து நாட்டின் அடுத்த பிரதமராக, கீர்ட் வில்டர்ஸ் பொறுப்பேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது தீவிர முஸ்லிம் எதிர்ப்பாளராக அறியப்பட்ட கீர்ட் வில்டர்ஸ், ‘நெதர்லாந்தின் டொனால்டு டிரம்ப்’ என, அந்நாட்டவர்களால் அழைக்கப்படுகிறார்.
‘நெதர்லாந்தில் மசூதிகளுக்கு தடை விதிக்க வேண்டும். அரசு அலுவலகங்களுக்கு, தலை மற்றும் முகத்தை மறைக்கும் வகையிலான துணியை அணிந்து வரக் கூடாது.
மத நுாலுக்கு தடை விதிக்க வேண்டும்’ என்பது போன்ற முஸ்லிம்களுக்கு எதிரான கொள்கையை, அவர் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.
பெரும்பாலும் எதிர்க்கட்சி இருக்கையிலேயே அமர்ந்து அரசியல் செய்து வந்த வில்டர்ஸ், 2010ல் பிரதமர் மார்க் ருட் கட்சியுடன் கூட்டணி அமைத்தார். ஆனால் அமைச்சரவையில் அவரது கட்சி அங்கம் வகிக்கவில்லை. 18 மாதங்களில், ஆட்சியை கவிழ்த்தார்.
வெற்றிக்கு பின் கீர்ட் வில்லர்ஸ் கூறியதாவது: பிற கட்சிகளுடன் இணைந்து செயல்பட முடிவு செய்துள்ளேன். நாட்டில் நிலவும் இருப்பிட பற்றாக்குறை, விலைவாசி உயர்வு, தரமான மருத்துவ வசதிகள் இல்லாதது போன்ற பிரச்னைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement