சபரிமலை:சபரிமலை பக்தர்களின் வசதிக்காக பம்பையில் இருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு 49 பஸ்களை இயக்க கேரள அரசு போக்குவரத்து கழகம் முடிவு செய்துள்ளது.
பம்பை பஸ் ஸ்டாண்டில் இருந்து சென்னை மற்றும் கோவைக்கு தலா நான்கு, கன்னியாகுமரிக்கு ஆறு, மதுரை மற்றும் பழனிக்கு எட்டு, தேனிக்கு ஐந்து, தென்காசிக்கு 15 பஸ்கள் உட்பட மொத்தம் 49 பஸ்கள் இயக்கப்படும்.
சென்னை பஸ்கள் எருமேலி, குமுளி வழி; கோவை பஸ்கள் எருமேலி, காஞ்சிரப்பள்ளி, ஈராற்றுபேட்டை, தொடுபுழா, மூவற்றுப்புழா, அங்கமாலி, திருச்சூர், வடக்கஞ்சேரி, பாலக்காடு, வாளையார் வழியாக இயக்கப்படும்.
கன்னியாகுமரி பஸ்கள் பத்தனம்திட்டா, திருவனந்தபுரம், களியக்காவிளை, நாகர்கோவில் வழி; மதுரைக்கு எருமேலி, குமுளி, கம்பம்; பழனிக்கு எருமேலி, குமுளி வழியாக இயக்கப்பட உள்ளன.
தேனிக்கு எருமேலி, குமுளி, கம்பம் வழி; தென்காசிக்கு புனலுார், செங்கோட்டை வழியாகவும் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு பஸ்கள் இங்கு இயக்க அனுமதிக்கப்பட்டாலும், அவற்றை பம்பையில் பார்க்கிங் செய்ய அனுமதி கிடையாது. பக்தர்களை இறக்கி விட்ட பின், நிலக்கல்லில் பார்க்கிங் செய்து அங்கிருந்து திரும்ப வேண்டும்.
இதனால் பக்தர்கள் தமிழக அரசு பஸ்களில் பயணிக்க சிரமப்படுகின்றனர். சில ஆண்டுகளுக்கு முன் வரை, பம்பை பஸ் ஸ்டாண்டில் தமிழக அரசு பஸ்கள் பார்க்கிங் செய்ய அனுமதி வழங்கப்பட்டிருந்தன.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்