புதுடில்லி,கிழக்கு டில்லியில், குடிபோதையில் இருந்த 16 வயது சிறுவன், மற்றொரு 17 வயது சிறுவனை சாலையில் வைத்து, 55 முறை கத்தி யால் குத்தியதுடன், கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்தார்.
பின், பிணத்தின் முன் நின்று உற்சாகமாக நடனமாடிய சம்பவம், பார்த்தவர்களை பதறச் செய்தது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கண்காணிப்பு கேமரா
கிழக்கு டில்லியின் வெல்கம் காலனி பகுதியில் உள்ள ஜனதா மஸ்துார் காலனி என்ற இடத்தில், கடந்த 21ம் தேதி இரவு 11:15 மணிக்கு, 17 வயது சிறுவன் சாலையில் வைத்து கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார்.
இது தொடர்பான கண்காணிப்பு கேமரா காட்சிகளை டில்லி போலீசார் வெளியிட்டுள்ளனர். பார்ப்பவர்களை பதறச் செய்யும் இந்த கொடூர கொலை குறித்து, வடகிழக்கு டில்லி போலீஸ் துணை கமிஷனர் ஜாய் திர்கீ நேற்று கூறியதாவது:
டில்லி ஜாப்ராபாதை சேர்ந்த 17 வயது சிறுவன், ஜனதா மஸ்துார் காலனி வழியாக கடந்த 21ம் தேதி இரவு சென்று கொண்டிருந்தார்.
அப்போது, அவரை 16 வயது சிறுவன் ஒருவர் வழிமறித்தார். மிதமிஞ்சிய குடிபோதை யில் இருந்த அந்த சிறுவன், பிரியாணி சாப்பிட பணம் கேட்டார்.
ஜாப்ராபாதை சேர்ந்த 17 வயது சிறுவன், தன்னிடம் பணம் இல்லை என கூறினார். இதனால், இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டு கைகலப்பாக மாறியது.
அப்போது 17 வயது சிறுவனின் கழுத்தை மற்றொரு சிறுவன் நெரித்தார். வெறித்தனமாக கழுத்து நெரிக்கப்பட்டதால் அந்த சிறுவன் மயக்கம் அடைந்தார்.
உடனே சிறிய கத்தியை எடுத்து, 17 வயது சிறுவனை சரமாரியாக குத்தினார். அப்போதும் ஆத்திரம் அடங்காமல், சிறுவனை சாலையில் கிடத்தி, அருகே இருந்த தெருவுக்குள் தரதரவென இழுத்துச் சென்றார். அங்கு சிறுவனின் முகம், கழுத்து, முதுகு, கண் உள்ளிட்ட பகுதிகளில், 55க்கும் அதிகமான முறை கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்தார்.
கத்தியால் குத்தும் போது, உற்சாக மிகுதியில் அந்த சிறுவன் நடனமாடினார். இது பார்ப்பவர்களை அதிர்ச்சியில் உறையச் செய்தது.
மிரட்டல்
அதோடு வெறி அடங்காமல், உயிரற்ற உடலின் தலைமுடியை பிடித்து மீண்டும் சாலையில் இழுத்து வந்து, அந்த சிறுவனின் பையில் இருந்த 350 ரூபாய் பணத்தை எடுத்துக் கொண்டு குற்ற வாளி தப்பி சென்றார்.
பொதுமக்கள் முன்னிலையில் இந்த கொடூர கொலை அரங்கேறியது. கத்தியை காட்டி மிரட்டியதால், அச்சத்தில் எவரும் குற்றவாளியை நெருங்கவில்லை.
கண்காணிப்பு கேமரா காட்சிகளின் அடிப்படையில், கொலை செய்த 16 வயது சிறுவனை நேற்று முன்தினம் கைது செய்தோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்