ஶ்ரீவில்லிபுத்தூர்: உத்தரப் பிரதேசம் மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோயில் கும்பாபிஷேகத்தில் பங்கேற்க வருமாறு ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ சடகோப ராமானுஜ ஜீயருக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. மேலும் விருதுநகர் மாவட்டத்தில் 5 லட்சம் குடும்பங்களுக்கு அழைப்பிதழ் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
உத்திரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் மாவட்டம் அயோத்தி சரயு நதிக்கரையில் உள்ள ராமஜென்ம பூமியில் ராமர் கோயில் கட்டுமான பணியை கடந்த 2020-ம் ஆண்டு ஆகஸ்ட் 5-ம் தேதி பிரதமர் மோடி அடிக்கல் நாட்டி திறந்து வைத்தார். அங்கு 161 அடி உயர கோபுரத்துடன் 57 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் 3 தளங்களுடன் குழந்தை ராமர் கோயில் கட்டப்பட்டு வருகிறது. இறுதி கட்டுமான பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் அடுத்த ஆண்டு ஜனவரி 22-ம் தேதி ராமர் கோயில் கும்பாபிஷேகம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்தில் பங்கேற்க 10 கோடி குடும்பங்களுக்கு அழைப்பு விடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. அதன்படி ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ மணவாள மாமுனிகள் மடத்தின் 24 வது பீடாதிபதி ஸ்ரீ சடகோப ராமானுஜ ஜீயருக்கு கும்பாபிஷேக அழைப்பிதழ், அயோத்தி ஸ்ரீராம ஜன்மபூமி ஆலய படம், குழந்தை ராமர் பாதத்தில் வைத்து பூஜிக்கப்பட்ட பிரசாதம் ஆகியவை வழங்கப்பட்டுள்ளது.
அவற்றுக்கு மங்களாசாசனம் செய்த ஜீயர் ஸ்வாமிகள், ஆண்டாள் சந்நிதியில் வைத்து வழிபாடு நடத்தினார். இதில் விசுவ ஹிந்து பரிஷத் தென் பாரத அமைப்பாளர் சரவணகார்த்திக், மாவட்ட செயலாளர் ஆனந்த், மாவட்ட பொறுப்பாளர் கிருஷ்ணமூர்த்தி, பாஜக மாவட்ட தலைவர் சரவணதுரை ராஜா, மாவட்ட பொறுப்பாளர் ஸ்ரீ ராமச்சந்திரராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விருதுநகர் மாவட்டத்தில் 2 லட்சம் குடும்பங்களுக்கு ராமர் கோயில் கும்பாபிஷேகம் அழைப்பிதழ் மற்றும் பிரசாதம் வழங்கப்பட உள்ளதாக விஹெச்பி நிர்வாகிகள் தெரிவித்தனர்.